புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 May 2020

May 4

இன்றைய புனிதர்
2020-05-04
புனித.ஜோசப் மேரி ரூபியோ
சேசு சபை குரு
பிறப்பு
1864
ஸ்பெயின்
இறப்பு
1929
மட்ரிட், ஸ்பெயின்

இவர் மட்ரிட் நகர் (Madrid) அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் இளமையாக இருக்கும்போதே, இறைபணியிலும், சமூக பணியிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். அறிவில் சிறந்து விளங்கிய இவர், இறையியல் படிப்புகளைத் திறம்பட முடித்தார். தமது 23 ஆம் வயதில் குருவாக திருநிலைபடுத்தப்பட்டு மட்ரிட் மறைமாவட்டத்தில் பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை ஜோக்கிம்டோரஸ் என்ற குருவிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டிருந்தார். இயேசு சபையில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூபியோ, டோரஸின் தோழமையால் அதை தள்ளிபோட்டார். 19 ஆண்டுகள் மட்ரிட் மறைமாநிலத்தில் சிறப்பாக செய்தார். அப்போது தந்தை திடீரென்று இறைவனடி சேர்ந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையை தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். பின்பு மீண்டும் மட்ரிட் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார்.

ரூபியோ ஒப்புரவு அருட்சாதனத்திலும், சிறப்பாக மறையுரை ஆற்றுவதிலும் வல்லவராக இருந்தார். அரசர்களும், மக்களும் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற எப்போதும் காத்து கொண்டிருந்தார்கள். பாவ அறிக்கையைவிட ரூபியோ மக்களுக்கு கொடுத்த அறிவுரையே மக்களை அதிகம் கவர்ந்தது. இவர் தம் மறையுரைகளில் எளிமை காணப்பட்டது. மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தார். திரு இதய பக்தியையும், நற்கருணை நாதர் பக்தியையும் பரப்பி வந்தார். இதனிடையே அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து வந்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.

ஆலயப்பீடத் திருப்பணிக்குத் தேவையான துணிகள் போன்ற பொருட்களுக்கு எல்லா ஆலயங்களிலும் தக்க அக்கறை செலுத்துவதற்கெனப் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்கினார். நாளடைவில் 6000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பணி செய்தனர். இயேசுவின் திரு இதய பக்தியை வளர்க்கவும், சமுதாய தொண்டு புரியவும் வேறு ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார். இவ்வமைப்பில் 5000 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு ஏழை மாணவ மாணவிகளுக்குப் பொருளுதவி அளித்து, கல்வி கற்க வைத்து, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவியும் செய்தனர்.

இல்லறத்தினர் தலத்திருச்சபையில் தியானம், நோயாளிகளை சந்தித்தல் போன்ற தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள தந்தை ரூபியோ மிக சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். இப்படியாக மட்ரிட் நகரின் எல்லா பகுதிகளிலும் ரூபியோவின் செயல்பாடுகள் எதிரொலித்தது. ரூபியோ ஏராளமான இளம் உள்ளங்களுக்கு குருத்துவத்திற்கும், துறவற வாழ்வுக்கும் வழிகாட்டினார். பிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்த போதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மட்ரிட் நகரினர் மதித்து வந்தனர். அப்போது ரூபியோ தனது 64 ஆம் வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
உலகை படைத்து பராமரித்து ஆளும் இறைவா! தந்தை ரூபியோவைப் போல ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களுக்கு வாழ்வளிக்க எமக்கு உமது வழிகாட்டுதலை தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

பிரைசிங் நகர் ஆயர் அர்பேயோ, (அரிபோ) Arbeo (Aribo) von Freising
பிறப்பு: 723 மைஸ் Mais, ஸ்யூட்டிரோல் Südtirol
இறப்பு: 4 மே 783, பிரைசிங், பவேரியா


பிரேம்மன் நகர் ஆயர் வில்லேரிச் Willerich von Bremen
பிறப்பு: 8 ஆம் நூற்றாண்டு
இறப்பு: 837 பிரேம்மன்