கான்ஸ்டான்டினோபிள் நகர்
புனித யூப்ரசியா
பிறப்பு:
380, கான்ஸ்டான்டினோபிள், கிழக்கு ரோம பேரரசு.
இறப்பு:
மார்ச் 13, 410, தீபைட், எகிப்து, இயற்கை மரணம்.
ஏற்கும் சபை/சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு மரபுவழி திருச்சபை.
சித்தரிப்பு:
கல்லைப் பிடித்தாற்போல் அல்லது சுமப்பதுபோல்
புனித யூப்ரசியா, 380 ஆம் ஆண்டு, கான்ஸ்டான்டினோபிளைச் சார்ந்த அன்றிகோனஸ் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் மன்னர் தியோடசியஸ் என்பவருக்கு நெருங்கிய உறவினர்.
சிறுவயதிலே புனித யூப்ரசியாவின் தந்தை இறந்துவிட, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய உறவினராகிய மன்னர் தியோடசிசின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தார்கள். தியோடசிசோ, இளமையாக இருந்த புனித யூப்ரசியாவின் தாயை வேறொருவருக்கு மணமுடித்துக் கொடுக்கவும், புனித யூப்ரசியாவை இளைஞன் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் திட்டம் தீட்டினார். விஷயம் அறிந்தப் புனித யூப்ரசியாவின் தாயார் புனித யூப்ரசியாவை தன்னோடு தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். அப்போது புனித யூப்ரசியாக்கு வயது வெறும் ஒன்பதுதான். எகிப்துக்கு ஓடிப்போன புனித யூப்ரசியாவும் அவருடைய தாயாரும் ஒரு துறவற மடத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.
துறவற மடத்திலிருந்த சமயத்தில் அங்கிருந்த துறவிகளின் வாழும் முறையைப் பார்த்துவிட்டு புனித யூப்ரசியா தானும் ஒரு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அவர்களைப் போன்றே வாழத் தொடங்கினார். ஒரு சமயம் மடத்திலிருந்த தலைமைச் சகோதரி புனித யூப்ரசியாவுக்கு துறவற ஆடையைக் கொடுத்தபோது, அதனை அணிந்துகொண்டு தன்னுடைய தாயிடம், “அம்மா! என்னுடைய திருமண ஆடை எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார். தாய் அவளிடம் ஒன்றும் சொல்லாமல், தன் மகளுக்குத் துறவற வாழ்வின்மீது எவ்வளவு ஆர்வம் இருக்கின்றது என்று மனதிற்குள்ளாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டார். இதுநடந்துச் சில நாட்கள் கழித்து, புனித யூப்ரசியாயின் தாயார் அவரை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்தார். இதனால் பெரிதும் வருத்தமடைந்த புனித யூப்ரசியா, அதன்பிறகு தன் வாழ்வு முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் புனித யூப்ரசியா எங்கு இருக்கின்றார் என்ற செய்தியும், அவருடைய தாயார் இறந்த போன செய்தியையும் கேள்விப்பட்ட மன்னர் தியோடசியஸ், ஆள் அனுப்பிப் புனித யூப்ரசியாவைக் கூட்டி வரச் சொன்னான். ஆனால், புனித யூப்ரசியாவோ கடிதமொன்றில், ‘நான் என்னை ஆண்டவருக்கு அர்ப்பணித்துவிட்டேன், அதனால் வேறு யாரையும் மணப்பதாக இல்லை என்றும், சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள் என்றும், தோட்டத்தில் அடிமைகளாக இருப்பவர்களை விடுதலைச் செய்து அனுப்பிவிடவும்” என்று எழுதி அதனை மன்னரிடத்தில் அனுப்பி வைத்தார். அதனைப் படித்துப் பார்த்த தியோடசியஸ், அதன்பிறகு புனித யூப்ரசியாவைத் தொந்தரவுச் செய்யவில்லை.
புனித யூப்ரசியா, துறவு மடத்திலிருந்த சமயங்களில் மிகவும் தாழ்ச்சியோடும் பொறுமையோடும் தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்து வந்தார். சாத்தான் அவரைப் பலவிதங்களில் சோதித்துப் பார்த்தது. அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் மிகவும் மனவுறுதியாக இருந்து, சாத்தனை வெற்றிகொண்டார். புனித யூப்ரசியாவிடம் நிறைய நோயாளிகள் அழைத்து வரப்பட்டார்கள். புனித யூப்ரசியா அவர்கள்மீது சிலுவை அடையாளம் வரைய, அவர்கள் நோய் நீங்கி நலம்பெற்றார்கள். இப்படி இறைவனுக்கு உகந்த அடியவராக வாழ்ந்து வந்த புனித யூப்ரசியா, 410 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.