புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

24 February 2020

தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24

*இன்றைய புனிதர்*

         _24 பிப்ரவரி 2020_

*தூய செசாரியுஸ் (பிப்ரவரி 24)*
“ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33) 

*வாழ்க்கை வரலாறு*

செசாரியுஸ், 331 ஆம் ஆண்டு, நசியான்சசின் ஆயர் தூய பெரிய கிரகோரியாருக்கும் தூய நோன்னா என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு கிரகோரி என்ற அண்ணன் ஒருவர் உண்டு. செசாரியுஸ், சிறுவயதிலே அறிவில் சிறந்தவராய் விளங்கி வந்ததால், இவருடைய பெற்றோர் இவரை அலெக்ஸ்சாண்ட்ரியாவிற்கு அனுப்பி வைத்து, படிக்க வைத்தனர். செசாரியுஸ் மருத்துவம், மெய்யியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கி பிற்காலத்தில் எல்லாருக்கும் பிடித்துப்போன கைராசியான மருத்துவரானார். 

இதற்கிடையில் செசாரியுசைக் குறித்து கேள்விப்பட்ட ஜூலியன் என்ற மன்னன், அவரை தன்னுடைய அரசபையில் மருத்துவராக இருக்கக்கேட்டான். இந்த ஜூலியனோ கிறிஸ்தவர்களை அதிகமாகத் துன்புறுத்தியவன். இப்படிப்பட்டவனுக்கு கீழே மருத்துவராக இருந்து பணிசெய்வது நல்லதல்ல என்று செசாரியுசை, அவருடைய பெற்றோர் கேட்டுக்கொண்டபடியால், அவர் அவனிடத்தில் செல்லாமல், நசியான்சஸ் நகரிலேயே இருந்து மருத்துவச் சேவை செய்துவந்தார். இந்த நேரத்தில் வாலன்ஸ் என்ற மன்னர் பிர்த்தினியா வந்து தனக்கு ஆலோசராகவும், அரசாங்கத்தின் கருவூலப் பொறுப்பாளராகவும் இருக்கவேண்டும் என்று செசாரியுசைக் கேட்டுக்கொண்டார். உடனே செசாரியுஸ் அங்கு புறப்பட்டுச் சென்று, அவருக்குக் கீழே பணிகளைச் செவ்வனே செய்து வந்தார்.    

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 368 ஆம் ஆண்டில் ஒருநாள் திடிரென்று தன்னுடைய மேலாண்மைக்குள் இருந்த நிகாயே என்ற நகரில் பெரிய பூகம்பம் வந்தது. அது ஏராளமான உயிர்களை எடுத்துக்கொண்டது. இந்நிகழ்வு செசாரியுசின் வாழ்வைப் புரட்டிப் போட்டது. ஆம், இந்த நிகழ்விற்குப் பிறகு செசாரியுஸ் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். அவர் தன் மூத்த சகோதரரான கிரகோரியிடம் சென்று நடந்தது அனைத்தையும் எடுத்துச் சொன்னார். உடனே அவர் செசாரியுசிடம், “நீ உன்னுடைய அரசியல் வாழ்வை விட்டு துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொள்வதுதான் தலைசிறந்தது” என்று அறிவுரை கூறினார். தன் சகோதரர் சொன்ன அறிவுரை நல்லதெனப் பட்டதும் செசாரியுஸ்  எல்லாவற்றையும் துறந்து துறவியாக மாறினார்.

செசாரியுஸ், துறவற வாழ்க்கையைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவருடைய வாழ்க்கை பக்தியிலும் பிறரன்புச் செயல்பாடுகளிலும் கரைந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் அவர் வாழ்ந்து வந்த பகுதியில் கொடிய கொள்ளை நோய் பரவியது. அது அவரைப் பாதிக்க, 369 ஆம் ஆண்டு இறந்துபோனார். அவர் இறப்பதற்கு முன்பாக தன் சகோதரர் கிரகோரியிடம், தனக்குச் சொந்தமான சொத்துகளை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போன்று கிரகோரி, தன் சகோதரர் செசாரியுசுக்குச் சொந்தமான சொத்துகளை அவருடைய இறப்புக்குப் பிறகு விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். 

*கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்*

தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று  சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

*1. உலக காரியங்களில் அல்ல, உண்மையான இறைவனில் பற்று கொண்டுவாழ்வோம்*

ஒரு காலத்தில் தூய செசாரியுஸ் உலக காரியங்களில் மூழ்கிக் கிடந்தார். எப்போது பூகம்பம் வந்து நிறையப் பேரைக் கொன்றொழித்ததோ அப்போதே அவர் உலகக் காரியங்கள் அல்ல, உண்மையான இறைவனால் மட்டுமே தனக்கு அமைதியையும் ஆசிர்வாதத்தையும் தரமுடியும் என்று உணர்ந்து, துறவற வாழ்க்கையை மேற்கொண்டார். தூய செசாரியுஸ் உணர்ந்துகொண்டதுபோன்று நாம் இறைவனால் மட்டுமே நமக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரமுடியும் என்பதை உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் ஊருக்கு வெளியே இருந்த குளத்திற்குச் சென்று மீன்பிடித்து, அதிலிருந்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு பிழைப்பை ஒட்டி வந்தான். ஆனால், சில நாட்களாகவே அவனுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை. ஏன் என்ற காரணமும் அவனுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் ஒருநாள் துறவி ஒருவர் அந்த குளத்திற்கு குளிக்க வந்தார். அவர் குளத்திற்குள் இறங்கி குளிக்கத் தொடங்கியதும் மீன்கள் எல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டு கும்மாளமிட்டன. இதை கரையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஆச்சரியமாக இருந்தான். தானும் துறவிக்கான ஆடையைக் தரித்து, குளித்தால், நிறைய மீன்கள் கிடைக்குமே என்று கற்பனை செய்தான். மறுநாளே துறவிக்கான ஆடையைத் தரித்து, குளத்தில் குளித்தான். அப்போது அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியாத அளவுக்கு மீன்கள் அவனைச் சூழ்ந்து கும்மாளமிட்டன. அன்றைக்கு அவன் நிறைய மீன்களைப் பிடித்தான்.

அவன் கரைக்கு வந்து, மீன்களை எல்லாம் வலையிலிருந்து கூடைக்குள் எடுத்துப் போட்டபோதுதான் திடிரென ஒரு யோசனை உதித்தது. “போலியாக துறவற ஆடை தரித்ததற்கே இவ்வளவு மீன்பாடு கிடைக்கிறது என்றால், உண்மையான துறவியாகிவிட்டால், மீன்களை பிடிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்ததுபோல், நினைத்ததை எல்லாம் அடையக்கூடிய வைப்பு உண்டாகிவிடுமே” என்ற யோசனை இளைஞனின் உள்ளத்தில் உதித்ததும் எல்லாவற்றையும் துறந்து உண்மையான துறவியாக மாறினான். 

உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான இறையடியாராக வாழ்கின்றபோது இறைவன் தருகின்ற ஆசிர்வாதம் அளப்பெரியது என்னும் உண்மையை இந்தக் கதையானது அருமையாக எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, தூய செசாரியுசின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் அவரைப் போன்று உலக காரியங்களில் பற்று கொள்ளாமல், உண்மையான இறைவன் மீது பற்று கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*

*"GOD IS LOVE"*

Rev. Fr. Amirtha Raja Sundar J,
 amirsundar@gmail.com; 
________________________

அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert பெப்ரவரி 24

இன்றைய புனிதர்
2020-02-24
அரசி ஏத்தல்பெர்ட் Ethelbert
பிறப்பு
6 ஆம் நூற்றாண்டு,
கெண்ட் Kent, இங்கிலாந்து
இறப்பு
616,
இங்கிலாந்து

இவர் பிரான்சிஸ்கன் அரசி குளோட்விக் Chlodwig என்பவரால் வளர்க்கப்பட்டார். அரசி குளோட்விக் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஏத்தல்பெர்ட்டையும் சிறு வயதிலிருந்தே ஆலயங்களுக்கு அனுப்பியும் அனுதின செபத்தின் வழியாகவும், இறைபக்தி கொண்டவராக வளர்த்தெடுத்தார். எதிலும் இறைபக்தியுடன் செயல்பட்ட ஏத்தல்பெர்ட் 596 ஆம் ஆண்டு திருத்தந்தை பெரிய கிரேகோரிடம் தன் நகருக்கு பல மறைபரப்பு பணியாளர்களை தருமாறு கேட்டுக்கொண்டார்.

இவர் தன் நகர் முழுவதிலும் வாழ்ந்த மக்கள் அனைவரையும் விசுவாச வாழ்வில் வளர தூண்டினார். அத்துடன் இங்கிலாந்து நாடு முழுவதிலும் மறைப்பணியாளர்களை நிரப்பி கடவுள் விசுவாசத்தை வளர்த்தெடுத்தார். 601 ஆம் ஆண்டு ஏத்தல்பெர்ட் மறைப்பணியாளர்களிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்கு பெற்றபின் இறக்கும் வரை ஏறக்குறைய 16 ஆண்டுகள் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து தன் நாட்டு மக்களுக்கு பணிவிடைச் செய்தார்.


செபம்:
இரக்கம் நிறைந்த ஆண்டவரே! சில மறைப்பணியாளர்களின் வாயிலாக இங்கிலாந்து நாடு முழுவதிலும் நற்செய்தியின் ஒளியை பரவச் செய்தீர். அம்மக்களின் உள்ளங்களில் உமது வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும், உண்மையான நம்பிக்கையைப் பறைசாற்றவும், ஒன்றுபட்டு வாழவும் வரம் தந்தீர். அரசி ஏத்தல்பெர்ட்டைப்போல அடுத்தவர்களை விசுவாச வாழ்வில் வளரச் செய்ய எம்மையும் தயாரித்து, உமது கருவியாய் மாற்றி, சான்று பகிர்ந்திடச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.