புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 April 2020

தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர் ✠(St. Peter Of St. Joseph De Betancur April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர் ✠
(St. Peter Of St. Joseph De Betancur)
மறைப்பணியாளர், நிறுவனர்:
(Religious and Founder)

பிறப்பு: மார்ச் 21, 1626
விலாஃப்லோர், டெனேரிஃப், ஸ்பேனிஷ் பேரரசு
(Vilaflor, Tenerife, Spanish Empire)

இறப்பு: ஏப்ரல் 25, 1667
என்டிகுவா குவாட்மலா, ஸ்பேனிஷ் பேரரசு
(Antigua Guatemala, Captaincy General of Guatemala, Spanish Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(கெனரி தீவுகள் மற்றும் குவாட்மலா)
(Roman Catholic Church)
(Canary Islands & Guatemala)

முக்திபேறு பட்டம்: ஜூன் 22, 1980
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: ஜூலை 30, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள்:
சேன்டோ ஹெர்மனோ பெட்ரோ குகை மற்றும் ஹெர்மனோ பெட்ரோ சரணாலயம் மற்றும் சேன் ஃபிரான்சிஸ்கோ ஆலயம், என்ட்டிகுவா, குவாட்மலா
(Cave of Santo Hermano Pedro and Sanctuary of the Santo Hermano Pedro (Tenerife) and San Francisco Church in Antigua, Guatemala)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

பாதுகாவல்:
கெனரி தீவுகள் (Canary Islands), குவாட்மலா (Guatemala), மத்திய அமெரிக்கா (Central America), குவாட்மலா’வின் மறைக்கல்வி ஆசிரியர்கள் (Catechists of Guatemala), தென் டெநெரிஃப் நாட்டிலுள்ள நகரசபைகளின் கௌரவ மேயர்கள் (Honorary Mayor of municipalities in the South of Tenerife), என்ட்டிகுவா, குவாட்மலா நகரசபையின் கௌரவ மேயர் (Honorary Mayor of Antigua Guatemala), வீடற்ற மக்கள் (The homeless)

தூய சூசையப்பரின் புனிதர் பீட்டர், மத்திய அமெரிக்க நாடுகளிலுள்ள “குவாட்மலா குடியரசின்” (Republic of Guatemala) மறைப்பணியாளரும், ஒரு ஸ்பேனிஷ் புனிதருமாவார். இவர், (St. Francis of Assisi of the Americas) “அமெரிக்காக்களின் புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ்” என்றும் அறியப்படுகின்றார். கேனரி (Canary Islands) தீவுக்களின் முதல் புனிதரான இவர், குவாட்மலா (Guatemala) மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் (Central America) ஆகியவற்றினதும் முதல் புனிதராகக் கருதப்படுகின்றார். இவர், “பெத்தலமைட் சகோதரர்கள்” (Bethlehemite Brothers) என்றழைக்கப்படும் “பெத்தலஹெம் அன்னையின் சபையின்” (Order of Our Lady of Bethlehem) நிறுவனர் ஆவார்.

“ஹெர்மனோ பெட்ரோ டி சேன் ஜோஸ் பெடன்கர்ட்” (Hermano Pedro de San José Betancurt) என்றும், “ஹெர்மனோ பெட்ரோ” (Hermano Pedro) என்றும், “சேன்ட்டோ ஹெர்மனோ பெட்ரோ” (Santo Hermano Pedro) என்றும், “சேன் பெட்ரோ டி விலஃலோர்” (San Pedro de Vilaflor) என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் இவர், கி.பி. 1626ம் ஆண்டு, “டெனேரிஃப்” (Island of Tenerife) தீவிலுள்ள “விலாஃப்லோர்” (Vilaflor) எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை, “ஜீன் டி பெத்தென்கார்ட்டின் வம்சாவளியினரான” (Descendant of Jean de Béthencourt) “அமடோர் பெடன்கோர்ட்” (Amador Betancourt) ஆவார். இவரது தாயார், “ஆனா கொன்சேல்ஸ் பெடன்கோர்ட்” (Ana Gonzáles Betancurt) ஆவார்.

சிறுவயதில், பீட்டர் தமது குடும்பத்தின் ஒரே வருமானமான சிறு பண்ணையில் கால்நடைகளை மேய்க்கும் பணி செய்தார். கி.பி. 1638ம் ஆண்டு ஒருமுறை, தமது குடும்பத்துக்கு கடன் கொடுத்தவர், கடனுக்காக, தமது பண்ணை நிலங்களை பறிமுதல் செய்தார். குடும்பத்தின் கடனை அடைக்கும் முயற்சியாக, அந்த நிலச் சுவான்தாரிடம் சம்பளமில்லா வேலைக்காரனாக வேலை செய்தார். இந்த காலகட்டத்தில், இவரது சகோதரரான “மடேயோ” (Mateo) என்பவர், ஸ்பெயின் நாட்டின் காலனியாட்சி நடைபெறும் “ஈகுவேடார்” (Ecuador) காலனிக்கு புலம்பெயர்ந்து சென்றார்.

கி.பி. 1649ம் ஆண்டு, தமது 23 வயதில், குடும்ப கடனுக்காக கூலி வேலை செய்துவந்த பீட்டர், அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரும் தமது சகோதரரைப் போலவே வெளிநாடு செல்ல முடிவு செய்தார். அங்கிருக்கும் ஏதாவது ஒரு சொந்தம் மூலமாக ஏதேனும் ஒரு அரசு பணியில் சேரும் நோக்கில், புதிய ஸ்பெயின் நாட்டின் (New Spain) தலைநகரான குவாட்மலா (Guatemala) பயணித்தார். அவர் கியூபாவிலுள்ள (Cuba) ஹவானா (Havana) சென்று சேர்ந்தபோது, அவரிடம் கையில் பணம் ஏதும் கிடையாது. பின்னர், ஒரு வருடம் அங்கிருந்த குருவிடம் பணியாற்றினார்.

பீட்டர், கி.பி. 1653ம் ஆண்டு, குருத்துவக் கல்வி கற்பதற்காக “சேன் போர்ஜியா” (San Borgia) எனும் இடத்திலுள்ள இயேசுசபை (Jesuit College) கல்லூரியில் சேர்ந்தார். மூன்று வருடங்களின் பின்னர், கல்லூரியின் தேர்வுகளில் தோல்வியடைந்ததால், கல்லூரியிலிருந்து விலகினார். பின்னர், குருவாகும் யோசனையை கைவிட்டார். அங்குள்ள அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றில் சாக்ரஸ்டனின் நிலையை வகித்தபின் (Sacristan - கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள புனிதப் பொருட்களைக் காப்பவர்), “கல்வாரி” (Calvary) என்றழைக்கப்படும் புறநகர்ப் பகுதியொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து, சிறிது காலம் அங்கே ஏழைச் சிறார்களுக்கு படிக்கவும், மறைக் கல்வியும் கற்பித்தார்.

“என்ட்டிகுவா குவாட்மலா’வின்” (Antigua Guatemala) “கோஸ்டா ரிக்கா” (Costa Rica) ஃபிரான்சிஸ்கன் துறவற மடத்தில் இணைந்து துறவியானார். “புனிதர் சூசையப்பரின் பீட்டர்” (Peter of Saint Joseph) எனும் பெயரை தமது ஆன்மீகப் பெயராக ஏற்றுக்கொண்டார். அவர் மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் மற்றும் வேலையற்றோர் ஆகியோரைக் காணச் சென்றார். அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினார். கி.பி. 1658ம் ஆண்டு, தமக்கு தரப்பட்ட குடில் ஒன்றினை சிறு மருத்துவமனையாக மாற்றினார். நகரின் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்னமும் ஓய்வும் உடல்நிலையில் முன்னேற்றமும் தேவைப்பட்ட ஏழை நோயாளிகளை அங்கே தங்கவைத்து சிகிச்சையும் சேவையும் செய்தார். அவரது ஆர்வம் அவரைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து வந்த பலன்களையும் பெற்றது. ஆயரும் ஆளுநரும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவருக்கு வழங்கினார்கள்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர், பீட்டரின் குடிலைச் சுற்றியிருந்த பல வீடுகளை வாங்குவதற்காக பலர் உதவிகள் செய்தனர். பின்னர் அவர்களது தளத்தில் ஒரு மருத்துவமனை நிறுவப்பட்டது. அதில் அவரால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அவர், தாமே கட்டிடப் பணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்தார். அது அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இருந்தது. ஏழை நோயாளிகளுக்கான மருத்துவமனையும் நிறுவனமும் பெத்தலஹெம் அன்னை மரியாளின் (Our Lady of Bethlehem) பாதுகாவலில் அர்ப்பணிக்கப்பட்டது. விரைவிலேயே வீடற்றவர்களுக்கு ஒரு தங்குமிடமும், ஏழை சிறுவர்களுக்கு ஒரு பள்ளியும், குருக்கள் மற்றும் துறவியர்க்கு ஒரு சிற்றாலயமும், தங்கும் இல்லமும் கட்டப்பட்டது.

பிற சபை மற்றும் மடங்களின் துறவியர் வந்து பீட்டருடன் இணைய தொடங்கினர். பீட்டர், துறவியர் சமூகம் ஒன்றோ, அல்லது சபையோ நிறுவும் எண்ணமேதுமில்லாதிருந்தார். ஆனால், தமது மருத்துவமனையை நிறுவுவதில் தீவிரமாக இருந்தார். தமது முதல் உதவியாளர்களை திறம்பட பயிற்றுவித்தார். தாம் ஒரு ஃபிரான்சிஸ்கன் (Franciscan) சபையைச் சேர்ந்த துறவியாயிருந்தும், தமது மருத்துவமனை சமூகத்திற்கு, விரைவிலேயே “தூய அகுஸ்தினாரின் சட்டதிட்டங்களை” (Rule of St. Augustine) எழுதினார். பெண்களுக்கான இவரது சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறார்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியைச் செய்தனர். இவர்களது இச்சமூகம் விரைவிலேயே “பெத்தலஹெம் அன்னையின் சபை” (Order of Our Lady of Bethlehem) அல்லது “பெத்தலமைட் சகோதரர்கள்” (Bethlehemite Brothers) என்றானது. இச்சபையில் இணைந்த ஆண்களும் பெண்களும், இவர்களுடைய மருத்துவமனை மட்டுமல்லாது, நகரின் வேறு இரண்டு மருத்துவமனைகளிலும் பணி புரிந்தனர். பீட்ட வழக்கம் போல ஏழைச் சிறுவர்களின் கல்வியில் கவனம் செலுத்தினார். இவர்களது “பெத்தலமைட்” சபை, ஃபிரான்சிஸ்கன் சமூகத்திற்கு சொந்தமானதாகும்.

பின் வரும் வருடங்கள்:
சிறைச்சாலைக் கைதிகளும்கூட பீட்டரின் இரக்கத்தினால் உணர்ச்சி வசப்பட்டு உற்சாகம் கொண்டனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும், அவர் நகர் முழுதும் சென்று சிறைக் கைதிகளுக்காக யாசகம் பெற்றார். அதனை சிறைச்சாலை சென்று அவர்களுக்கு கொடுத்தார். ஏழை எளிய குருவானவர்களால் நடத்தப்படும் திருப்பலிகளுக்காகவும், அவற்றில் பங்கேற்கும் ஏழை மக்களுக்காகவும் நகர் முழுதும் சென்று யாசகம் பெற்று அவற்றை அவர்களுக்கு அளித்தார். கத்தோலிக்க பாரம்பரியம் மற்றும் மரபுகளின்படி, ஒருவர் மரித்ததன் பின்னர் ஆத்துமாக்களை புனிதப்படுத்தும் இடமான “உத்தரிய ஸ்தலத்தில்” (Purgatory) காத்திருக்கும் புறக்கணிக்கப்பட்ட ஆத்துமாக்கள் மீது அக்கறையும் கவலையும் கொண்டிருந்தார். இரவு நேரங்களில், நகரின் தெருக்களில் மணியடித்தவாறு பயணித்து, உத்தரிய ஸ்தலத்திளிருக்கும் ஆத்துமாக்களுக்காக செபிக்குமாறு மக்களிடம் பரிந்துரைத்தார்.

உழைப்பு மற்றும் நோன்பு, தவம் ஆகியவற்றினால் முற்றிலும் சோர்வடைந்து, நலிந்து போன பீட்டர், கி.பி. 1667ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 25ம் நாளன்று, தமது 41 வயதில், “என்ட்டிகுவா குவாட்மலா” (Antigua Guatemala) நகரில் மரித்துப்போனார். கபுச்சின் (Capuchin Friars) துறவியரது வேண்டுகோளின்படி, அவர்களது ஆலயத்தில் பீட்டர் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டர் தமது வாழ்க்கையை தேவைப்படும் மக்களுக்காக அர்ப்பணித்தார். நோயாளிகளுக்காக – முக்கியமாக தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்காகவும், சிறைக் கைதிகளுக்காகவும், அடிமைகளுக்காகவும், இந்தியர்களுக்காகவும் மனித உரிமைகளின் முன்னோடியாக பணியாற்றினார்.

புனிதர் அனக்லேட்டஸ் ✠(St. Anacletus) April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ புனிதர் அனக்லேட்டஸ் ✠
(St. Anacletus)
3ம் திருத்தந்தை:
(3rd Pope)

பிறப்பு: கி. பி. 25
ரோம், இத்தாலி, ரோம பேரரசு
(Rome, Italy, Roman Empire)

இறப்பு: ஏப்ரல் 26, 88
ரோம், இத்தாலி, ரோம பேரரசு
(Rome, Italy, Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

புனிதர் அனக்லேட்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் "பேதுரு" (St. Peter), அதன்பின் "புனிதர் லைனஸ்" (Saint Linus) ஆவர். இவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகக் மதிக்கப்படுகிறார்.

பதவிக் காலம் பற்றிய செய்திகள்:
மரபுச் செய்திகளின்படி, அனக்லேட்டஸ் ரோமைச் சார்ந்தவர் என்றும், பன்னிரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுகிறது. வத்திக்கான் வெளியிடுகின்ற "ஆண்டு ஏடு" (Annuario Pontificio), "முதல் இரு நூற்றாண்டுகளைப் பொறுத்தமட்டில், ஒரு குறிப்பிட்ட திருத்தந்தை எப்போது பதவி ஏற்றார், எப்போது அவரது பதவிக்காலம் முடிந்தது என்பது பற்றி உறுதியாகக் கூறுவது கடினம்" என்றுரைக்கிறது. அந்த ஏட்டின்படி, அனக்லேட்டஸ் கி.பி. 80 முதல் கி.பி. 92 வரை பதவியிலிருந்தார். வேறு சில ஏடுகள் அப்பதவிக்காலம் கி.பி. 77 முதல் கி.பி. 88 என்று கூறுகின்றன.

திருத்தந்தை அனக்லேட்டஸ் ரோம் மறைமாவட்டத்தை 25 பங்குத்தளங்களாகப் பிரித்தார் என்றும், ஒரு சிலரைக் குருக்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும் சில பண்டைய ஏடுகள் கூறுகின்றன.

வத்திக்கானில் கல்லறை:
திருத்தந்தை அனக்லேட்டஸ் இன்றைய வத்திக்கான் நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில் அவருக்குமுன் பதவியிலிருந்த "திருத்தந்தை லைனஸ்" (Saint Linus) என்பவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அனக்லேட்டஸ் என்னும் திருத்தந்தையின் பெயர் ரோம் வழிபாட்டு முறைத் திருப்பலியில் உள்ள நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளது.

நினைவுத் திருவிழா:
கத்தோலிக்க திருச்சபையின் பழைய நாட்காட்டியாகிய "திரிதெந்தீன் நாட்காட்டியில்" ஏப்ரல் 26ஆம் நாள் புனித அனக்லேட்டஸ் மற்றும் புனித மார்செல்லீனுஸ் ஆகியோரின் விழா கொண்டாடப் பணிக்கப்பட்டது. அந்நாட்காட்டியில் ஜூலை 13ம் நாள் புனித அனக்லேட்டஸ் திருவிழா அமைந்தது.

1960ம் ஆண்டில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஜூலை மாதம், 13ம் நாளில் இருந்த விழாவை அகற்றினார். அதே நேரத்தில், ஏப்ரல் மாதம், 26ம் நாள் புனித அனக்லேட்டஸ் விழாவாக அமையும் என்று பணித்தார். அனக்லேட்டஸ் என்னும் பெயர் ரோம் நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் உள்ளது.

1969ம் ஆண்டு முதல் ஏப்ரல் 26 விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. திருத்தந்தை அனக்லேட்டஸ் எந்த நாளில் இறந்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், "ரோம் மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் ஏடு, அவர் ஏப்ரல் மாதம், 26ம் நாள் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠(St. Marcellinus) April 26

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 26)

✠ புனிதர் மர்செல்லீனஸ் ✠
(St. Marcellinus)
29ம் திருத்தந்தை:
(29th Pope)

பிறப்பு: தெரியவில்லை 
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

இறப்பு: கி.பி. 304
ரோம், மேற்கு ரோமப் பேரரசு
(Rome, Western Roman Empire)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 26

திருத்தந்தை மர்செல்லீனஸ், ரோம் ஆயராகவும், திருத்தந்தையாகவும் 296ம் ஆண்டு, ஜூன் மாதம், 30ம் நாள் முதல், கி.பி. 304ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 25ம் நாள்வரை ஆட்சி செய்தார். இவருக்கு முன் திருத்தந்தையாக இருந்தவர் “காயுஸ்” (Pope Caius) என்பவர் ஆவார். திருத்தந்தை புனித மர்செல்லீனஸ் கத்தோலிக்க திருச்சபையின் 29ம் திருத்தந்தை ஆவார். மர்செல்லீனஸ் என்பது பண்டைய உரோமைக் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.

ரோமப் பேரரசன் (Roman Emperor) “டையோக்ளேசியன்” (Diocletian) ஆண்ட காலத்தில் மர்செல்லீனஸ் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அப்போது கிறிஸ்தவர்கள் தம் மதத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடித்தனர். அவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனால் கி.பி. 302ம் ஆண்டு, மன்னனன் டையோக்ளேசியன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். கிறிஸ்தவப் போர்வீரர்கள் படையிலிருந்து விலக்கப்பட்டனர். பின்னர் கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்களுடைய நூல்களும் அழிக்கப்பட்டன. மன்னனின் அரண்மனை இரு முறை தீப்பற்றி எரிந்ததும், மன்னனின் செயல்பாடு இன்னும் அதிகக் கொடூரமானது. கிறிஸ்தவத்தைக் கைவிடாவிட்டால் சாவுதான் முடிவு என்றாயிற்று.

இந்த நெருக்கடியின்போது, மர்செல்லீனஸ் விவிலியம் மற்றும் கிறிஸ்தவ சமய நூல்களை மன்னனின் ஆணைக்கு ஏற்ப கையளித்தார் என்றும், கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு விலகினார் என்றும், பின்னர் மனம் வருந்தி கிறிஸ்தவத்துக்குத் திரும்பினார் என்றும், அதன் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும் திருத்தந்தையர் நூல் (Liber Pontificalis) கூறுகிறது. அச்செய்தி தற்போது கைவசம் கிடைக்காத "புனித மர்செல்லீனசின் சாவு வரலாறு" (Acts of St. Marcellinus) என்னும் பண்டைய ஏட்டிலிருந்து பெறப்பட்டது.

திருத்தந்தை மர்செல்லீனுஸ் கி.பி. 304ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 26ம் நாள், அவர் இறந்து 25 நாள்களுக்குப் பின், ரோம் சலாரியா சாலையில் உள்ள பிரிசில்லா கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இச்செய்தி திருத்தந்தையர் நூலில் உள்ளது.

கி.பி. 13ம் நூற்றாண்டில் மர்செல்லீனஸ் நினைவாக விழாக் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 26ம் நாள் அவருடைய விழா புனிதர் கிலேட்டஸ் (Saint Cletus) விழாவோடு இணைத்துக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த இரு திருத்தந்தையரின் மறைச்சாட்சிச் சாவு பற்றியும் வரலாற்றுத் தெளிவு இல்லாமையால் 1969ம் ஆண்டு வெளியான புனிதர் நாள்காட்டியில் அவ்விழா குறிக்கப்படவில்லை.

வழிவந்த திருத்தந்தை:
மர்செல்லீனசின் மரணத்தின் பிறகு, கிறிஸ்தவ சபை துன்புறுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் முதலாம் மர்செல்லஸ் (Pope Marcellus) ஆகும்.

ட்ரூட்பெர்ட் (Trutpert)மறைசாட்சி April 26

இன்றைய புனிதர்
2020-04-26
ட்ரூட்பெர்ட் (Trutpert)
மறைசாட்சி
பிறப்பு

அயர்லாந்து அல்லது ஜெர்மனி
இறப்பு
607 அல்லது 644

ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல்டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறைபரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலுள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப்போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரைபூர்க்-ஐ ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத்தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.

அப்போது ட்ரூட்பெர்ட் அந்நிலத்திலிருந்த மரங்களை அழித்துவிட்டு புனித பீட்டர் மற்றும் பவுல் தேவாலயத்தை கட்டினார். அங்கு ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடித்துவிட்டு களைப்பாக தூங்கும்போது, தெரியாத நபர் ஒருவர் வந்து அவரை கொன்ற்விட்டான். பின்னர் ஓட்பெர்க்(Otbert) என்பவரால், ட்ரூட்பெர்ட் புதைக்கப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு பேராலயத்தை கட்டினார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, வேலையை செய்துள்ளார். அவர் 640 - 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டுகளில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607 - ல் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு 815 ஆம் ஆண்டு அவரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும் போது எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டரில் (Münster) உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனிதருக்கென்று பேராலயமும் உள்ளது


செபம்:
அன்பின் உருவமே எம் இறைவா! உமது சாட்சியாக மரித்த ட்ரூட்பெர்ட்டைப்போல, நாங்களும் எங்கள் வாழ்வின் வழியாக உமக்கு சான்று பகிர்ந்திட உம் அருள் தந்து எம்மை வழிநடத்தும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

குரு ரிச்சாரியுஸ் Richarius
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, சென்லோ Centula, பிரான்சு
இறப்பு: 26 ஏப்ரல் 645 ரிக்குயர் Riquier


சபைநிறுவுநர் பேதுரூஸ் டே பெண்டாங்கூர் Petrus de Betancur
பிறப்பு: 21 மார்ச் 1626, ஸ்பெயின்
இறப்பு: 26 ஏப்ரல் 1667 குவாடமாலா Guatemala

ஏப்ரல் 26புனித ஆல்தோ (1249-1309)

ஏப்ரல் 26

புனித ஆல்தோ (1249-1309)
இவர் இத்தாலியில் உள்ள சியன்னாவில்  பிறந்தவர்.

திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே இவர் தன்னுடைய கணவரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய உடைமைகளை எல்லாம்  விற்று, ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, சியன்னா நகருக்கு வெளியே ஒரு குடிசை அமைத்துத் தவமிருக்கத் தொடங்கினார். 

சில காலம் இப்படித் தவமிருந்து வந்த இவர், மருத்துவமனையில் உள்ள நோயாளர்களுக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, அதன்படி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வந்தார்.

இறைவன் இவரோடு இருந்ததால், இவர் யார் மீதெல்லாம் சிலுவை அடையாளம் வரைந்து மன்றாடினாரோ, அவர்கள் எல்லாரும் விரைவில் நலம்பெற்றார்கள். 

இதனால் இவருடைய புகழ் எங்கும் பரவியது. இது ஏற்கெனவே மருத்துவமனையில் பணிசெய்து வந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் இவர்மீது கொண்ட பொறாமையால், இவரைக் குண்டூசியால் குத்தித் துன்புறுத்தினார்கள். அவற்றை எல்லாம் இவர் பொறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்களை மனதார மன்னித்தார். 

இப்படி இவர் நோயாளர்களுக்கு நடுவில் பணிசெய்யும் போதே இவர் உயிர் பிரிந்தது.

சிந்தனை:

தன்னை வெட்டுவோருக்கும் நிழல் தருமாம் மரம். அதுபோல் நாம் நமக்குத் தீமை செய்வோரை மன்னித்து, நன்மை செய்வோம். 

அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதைக் கண்டு, பொறாமைக்காரன் உடல் மெலிவான் (ஹொரேஸ்).

நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டாரா? (இயேசு)

- மரிய அந்தோனிராஜ்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் ஏப்ரல் 26

இன்றைய புனிதர் : 
(26-04-2020) 

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் (ஏப்ரல் 26)
“நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” மத் 25: 23.

வாழ்க்கை வரலாறு

790 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே தாமே (Nonte Dame) என்ற இடத்தில் இருந்த கன்னியர் மடத்திற்கு முன்பாக ஒரு குழந்தை அனாதையாகக் கிடந்தது. அந்தக் குழந்தையை எடுத்த கன்னியர் மடத்தில் இருந்த அருட்சகோதரிகள் அதற்கு ராட்பெர்துஸ் பஸ்காசியசிஸ் என்று பெயர் வைத்தார்கள். அவர் தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ராட்பெர்துஸ் பஸ்காசியஸ்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை நோட்ரே தாமேவில் இருந்த ஒரு பள்ளியில் கற்றார். படித்துக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த துறவிகளின் வாழ்வால் தொடப்பட்டு பின்னாளில் துறவியாக மாறினார். இவருக்கு துறவிகளான அடல்ஹால்து என்பவரும் வாலா என்பவரும் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து வந்தார்கள். ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் சில ஆண்டுகளிலே தான் இருந்த துறவற மடத்தின் தலைவராக மாறினார்.

ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் விவிலியத்தில் புலமை பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் நிறைய புத்தங்களை எழுதினார். குறிப்பாக மத்தேயு நற்செய்திக்கு விளக்கவுரையாக 12 பாகங்களை எழுதினார் அது போன்று கன்னியான மரியாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் நிறைய எழுதினார். இவர் எழுதிய புத்தகங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘The Body and Blood of Christ” என்பதாகும். இப்புத்தகம் இன்றளவும் சிறந்த ஒரு புத்தகமாகக் கருதப்படுகின்றது. இப்படி பல்வேறு புத்தங்களை அவர் எழுதி வந்தாலும் ஜெபத்திற்கும் தியானத்திற்கும் அதிகமான நேரத்தை அவர் ஒதுக்கினார். அவர் செய்து வந்த ஜெபமே பல நேரங்களில் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 860 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்வோம்.

தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும் நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை, அவர் கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்வினை அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்தார் என்பதுதான். தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசை நினைவுகூரக்கூடிய நாம், அவரைப் போன்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி எடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் யோவான் நற்செய்தி 15: 8 ல் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது என்று. நாம் கனிதரக்கூடிய வாழ்க்கையினை வாழ்கின்றபோதுதான் இறைவனுக்குப் பெருமை சேர்க்க முடியும்.

சமீபத்தில் பார்த்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அனாதையாகக் கிடைக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அக்குழந்தைக்கு வரும் ஆபத்துகளையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையைப் பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.

பல ஆண்டுகள் கழித்து அனாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும். இப்போது குழந்தை இருப்பத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித் தனமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பான். சுவாஸ்ரயமில்லாமல் ஏதோ வேலையை செய்து கொண்டிருப்பான். சுருக்கமாகச் சொன்னால் அவன் அவன் சராசரி மனிதனாக இருப்பான். இதைப் பார்க்கும் அந்தப் பறவை வருத்தப்பட்டு மிகவும் ஏமாற்றத்தோடு செல்லும். இத்தோடு அந்த விளம்பரம் நிறைவுபெறும்.

இந்த விளம்பரம் உணர்த்தும் செய்தி மிக எளிது. நன்றாக இருக்கவேண்டிய அந்தப் பையன், சராசரியாக இருக்கின்றான். அதுதான் அந்தப் பறவைக்கு வருத்தம். கடவுளும் அப்படித்தான் நம்மை பலன் தரக்கூடிய வாழ்வு வாழ இந்த உலகில் படைத்திருக்கின்றோம். நாம் பலன்தரவில்லை என்றால், அது அவருக்கு வருத்தம்தான்.

ஆகவே, தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.