புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

09 April 2013

பாஸ்கா - 2ஆம் வாரம்

புதன்



முதல் வாசகம்

 நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர்.

ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, ``நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள்.

அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, ``நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை'' என்று அறிவித்தார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.

அப்பொழுது ஒருவர் வந்து, ``நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்'' என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6ய)

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 2ஆம் வாரம்

செவ்வாய்



முதல் வாசகம்

 ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37

அந்நாள்களில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.

திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள், `ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்' என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 93: 1யb. 1உ-2. 5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவர் ஆட்சிசெய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். அல்லது: அல்லேலூயா.

1யb ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

1உ பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 15

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: ``நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

நிக்கதேம் அவரைப் பார்த்து, ``இது எப்படி நிகழ முடியும்?'' என்று கேட்டார்.

அதற்கு இயேசு கூறியது: ``நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்.

மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்? விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

ஆதிக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை அற்புதமான இலக்கணம். கடைபிடிக்கப்பட்டால் இந்த வாழ்வு முறை ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தும். புதிய சகாப்தத்தை தோற்றுவிக்கும்.

வாழ்வின் யதார்த்தத்தில் இது தோற்றுப் போன ஒன்றாகவே உள்ளது. மனிதர்களின் பரந்த இதயம், கடினப்பட்டுப் போனதாலும், பொதுநலப் போக்கு, சுயநலமாக மாறிப் போனதாலும், மனிதர்களால் இது தோற்றுப் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.