இன்றைய புனிதர் :
(20-02-2020)
அருளாளர்களான பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா (பிப்ரவரி 20)
“சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” (மத் 19: 14)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூரும் பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா போர்ச்சுகல் நாட்டில் இருக்கின்ற அல்ஜஸ்ட்ரல் என்னும் இடத்தில் முறையே 1908, 1910 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள். இவர்களுடைய பெற்றோர் மனுவேல் மற்றும் ஓலம்பியா என்பவர் ஆவர். இருவரும் சிறுவயது முதலே ஜெபத்திலும் ஜெபமாலை பக்தியிலும் சிறந்து விளங்கினார்கள்.
1916 ஆம் ஆண்டின் ஒரு நாளில் பிரான்சிஸ், ஜெசிந்தா மற்றும் அவர்களுடைய மாமன் மகளாகிய லூசியா ஆகிய மூன்றுபேரும் பாத்திமா நகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலையில் இருந்த ‘கோவா டா இரியா’ என்ற மலைப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் தோன்றிய தூதர் ஒருவர், அவர்களிடம் தன்னை அமைதியின் தூதர் என்றும் போர்ச்சுக்கல் நாட்டின் காவல் தூதர் என்றும் சொல்லிவிட்டு, “நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்" என்று கூறினார். அப்போது மூவரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், 1917 மே 13 ஆம் தேதி, அதே வானதூதர் மீண்டும் அவர்களுக்கு முன்பாகத் தோன்றியபோதுதான் அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள். அந்த வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில் மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன.
பின்னர் அவர் அவர்களுக்கு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை கற்றுக்கொடுத்தார். “என் கடவுளே, நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசிக்காதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன்” இறுதியாக, “இயேசு மற்றும் அன்னை மரியாவின் இதயங்கள் நம் மன்றாட்டுகளுக்கு செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் அவர்கள் முன்னிருந்து மறைந்தார்.
அந்த தூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், அவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவா டா இரியாவின் ஒரு புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது. அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா தோன்றி காட்சி அளித்தார். லூசியா, ஜெசிந்தா பிரான்சிஸ் ஆகிய மூன்று பேரும் அந்த காட்சியைக் கண்டனர். மரியன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று பேரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்றும் மரியா கட்டளை இட்டார். ஜூலை ஆம் தேதி, அன்னை மரியா அவர்களுக்குக் காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். "பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் அறிவுறுத்தினார். மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை செபிக்குமாறும் மரியா கற்றுக்கொடுத்தார். காட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் 13ந்தேதி சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் அவர் முன்னறிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ ஆகிய மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக, மரியாவின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர். மக்கள் பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண மூவரையும் பின்தொடர்ந்தனர். மேலும் அன்னை தனது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும் இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியா காட்சி அளித்த வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார். வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார். கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே (குறிப்பாக ரஷ்யாவில்) மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மரியா மொழிந்தார்.
1917 அக்டோபர் 13 ஆம் தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்தனர். அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது" என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார். சூரியனின் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரனை போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர்.
அன்னை மரியா கோவா டா இரியாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி 25 ஆம் தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது. அடுத்ததாக அன்னை தன்னுடைய காட்சியில் ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனடிப்படையில் திருத்தந்தை 12 ஆம் பயஸ் முதலில் உலகத்தையும், 1952 ஜூலை ஆம் தேதி சாக்ரோ வெர்ஜென்ட்டே (Sacro Vergente) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். 1984ல் திருத்தந்தை 2ம் ஜான் பால் உலகத்தை மீண்டும் மரியாவின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணித்தார். இதனால் 1990 களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்பியது. நிறைவாக அன்னை தனது காட்சியில் இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களை காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார். அவர் சொன்னது அனைத்தும் அப்படியே நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதுதான் வியப்பாக இருக்கின்றது.
அன்னை மரியா பிரான்சிஸ், ஜெசிந்தா, லூசியா ஆகிய மூவருக்கும் காட்சியளித்த அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பிரான்ஸ்சிசும் ஜெசிந்தாவும் நோய்வாய்ப்பட்டு, அப்படியே இறந்துபோனார்கள். 2000 ஆம் ஆண்டில் திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் அவர்களுடைய தூய, மாசற்ற வாழ்க்கையைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தாவின் விழாவைக் கொண்டாடும் நாளில், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. ஜெபமாலை பக்தி
பிரான்சிசும் ஜெசிந்தாவும் சிறுவயது வயது முதலே ஜெபமாலை சொல்வதில் சிறந்து விளங்கினார்கள் என்பதை அவர்களுடைய வாழ்க்கை குறிப்பு நமக்கு எடுத்துச் சொல்கிறது. கோவா டா இரியாவில் அன்னை அவர்களுக்குக் காட்சி அளித்தபோதும் ஜெபமாலை சொல்லி ஜெபிக்கவேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறார். பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தாவை நினைவுகூரும் நாம், அவர்களைப் போன்று ஜெபமாலை பக்தியில் சிறந்து விளங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
1571 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான போரின்போதும் 1863 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கு இடையே நடைபெற்ற போரின்போதும் கிறிஸ்தவர்கள் தங்களது கைகளில் ஜெபமாலை ஏந்தி ஜெபித்தார்கள். அதனால் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு. நாமும் அன்றைய கிறிஸ்தவர்களைப் போன்று, இன்று நாம் நினைவுகூரும் பிரான்சிசைப் போன்று ஜெசிந்தாவைவைப் போன்று கைகளில் ஜெபமாலை ஏந்தி ஜெபிப்போம். அதன்மூலம் இறையருளை அன்னை மரியா வழியாக நிறைவாய் பெறுவோம்.