புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 March 2013

4ஆம் வாரம் - வியாழன்
 
முதல் வாசகம்
 உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14
அந்நாள்களில் சீனாய் மலையில் ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இங்கிருந்து இறங்கிப் போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக்குட்டியை வார்த்துக்கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, `இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே' என்று கூறிக்கொள்கிறார்கள்'' என்றார்.
மேலும் ஆண்டவர் மோசேயிடம், ``இம்மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள். இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்'' என்றார்.
அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, ``ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமை மிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? `மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். உம் அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்; நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே'' என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 106: 19-20. 21-22. 23 (பல்லவி: 4ய)
பல்லவி: ஆண்டவரே! உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூரும்!
19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்; 20 தங்கள் `மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்துகொண்டனர். பல்லவி
21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்; 22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். பல்லவி
23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 3: 16
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
 
நற்செய்தி வாசகம்
 உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 31-47
அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: ``என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப்பற்றிச் சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப்பற்றி அவர் கூறும் சான்று செல்லும் என எனக்குத் தெரியும். யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன்.
யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.
``என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்iலை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை; ஏனெனில், அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.
மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
கடவுள் ஒருவரே. அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்களே! உங்களால் எப்படி என்னை நம்ப இயலும்? தந்தையின் முன்னிலையில் உங்கள்மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பார் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள்மேல் குற்றம் சுமத்துவார். நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள். ஏனெனில் அவர் என்னைப் பற்றித்தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.