புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 May 2013

8ஆம் வாரம்

புதன்


முதல் ஆண்டு

முதல் வாசகம்

உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என எல்லாரும் அறிந்துகொள்ளட்டும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 36: 1-2ய. 4-5ய. 9-17

எல்லாவற்றிற்கும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் மீது இரக்கமாயிரும்; எங்களைக் கண்ணோக்கும்; உம்மைப் பற்றிய அச்சம் எல்லா நாடுகள்மீதும் நிலவச் செய்யும். அயல்நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும். ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்துகொள்ளட்டும். புதிய அடையாளங்களை வழங்கும்.

வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; `எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை' எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும். யாக்கோபின் குலங்களை ஒன்றுகூட்டும்; தொடக்கத்தில் போன்று அவர்களை உமது உரிமைச் சொத்தாக்கும். ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கம் காட்டும்; உம் தலைப்பேறாகப் பெயரிட்டு அழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்; உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம் மீது கனிவு காட்டும். உமது புகழ்ச்சியால் சீயோனை நிரப்பும்; உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும். தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்; உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும். உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும். ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாயும். அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லாரும் அறிந்துகொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல் 

திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: சீஞா 36: 1b)

பல்லவி: எம்மீது இரக்கம் வைத்து, ஆண்டவரே எம்மைக் கண்ணோக்கும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. பல்லவி

13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

எருசலேமில் மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 32-45

அக்காலத்தில் சீடர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழ இருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

அவர், ``இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர்மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்'' என்று அவர்களிடம் கூறினார்.

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ``போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்'' என்றார்கள்.

அவர் அவர்களிடம், ``நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, ``நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்'' என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?'' என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், ``இயலும்'' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ``நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்'' என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ``பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.

ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

8ஆம் வாரம்


செவ்வாய்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

கட்டளைகளைப் பின்பற்றுவது, பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 35: 1-12

திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்; கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும். அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும். தருமம் செய்வது நன்றிப் பலி செலுத்துவதாகும். தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது; அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.

ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே; கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து. நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட, உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது. நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு; பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு. உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு. உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. ஆண்டவரே கைம்மாறு செய்பவர்; ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர். ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே. அவர் அதை ஏற்கமாட்டார். அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே. ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 50: 5-6. 7-8. 14,23 (பல்லவி: 23b)

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

5 `பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! பல்லவி

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்று கூறப்போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார்.

அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
8ஆம் வாரம்


திங்கள்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 20-29

மனிதர்களுடைய அநீதியான செயல்கள் ஆண்டவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்.

மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன. அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணி போல் விளங்குகின்றன. பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார். இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்; நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.

ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள். வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்? உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை. நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர். ஆண்டவரின் இரக்கம் எத்துiணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்பு வோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 11ய)

பல்லவி: நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட' '' என்றார். அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார்.

சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.