தூய பாத்திமா அன்னை (மே 13)
(13-05-2020)
வரலாற்றுப் பின்னணி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின் காட்சியானது நடைபெற்றது.
1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம், “நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக மன்றாடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது 1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத் தோன்றி, “நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத, உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற ஜெபத்தை அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள். அவள் அச்சிறுமிகளிடம், “ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும். ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட அந்த மூன்று சிறுமிகளுக்கு மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள் இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஏதோ உளறுகிறார்கள் என்று சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.
காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள். ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்னர் அவர், “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும் விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்” என்ற ஜெபத்தை சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள் மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.
இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும் மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள். தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது, அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, “மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.
1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய் அப்பெண்மணி காட்சி தந்து, “நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத் தந்தார். அந்தக் காட்சிகளில், “பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும் விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில் சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப் போர் வந்தது..
அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.
பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை
தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஜெபமாலை சொல்லவேண்டும்
அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும். ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப் பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும் உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.
இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சின்னப் பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும் அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசுசபை குருக்கள் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.
அனுதினமும் ஜெபமாலை சொல்லி ஜெபிப்பதனால் எத்தகைய நன்மைகள் நடக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் ஜெபமாலை சொல்லும் மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.
தீய நாட்டங்களை விட்டுவிட்டு மனமாறவேண்டும்.
பாத்திமா அன்னை தன்னுடைய காட்சியில் வலியுறுத்திச் சொல்லும் இன்னொரு செய்தி மனமாற்றம் என்பதாகும். மக்கள் பல்வேறு தீய நாட்டங்களால் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் மனமாற்றம் பெற்று இறைவழியில் நடக்கவேண்டும் என்பது அன்னையின் அன்பான வேண்டுகோளாக இருக்கின்றது. நாம் உண்மையில் பாவ நாட்டங்களிலிருந்து விலகி மனம்மாறிய மக்களாக வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கலிலேயாக் கடற்கரைக்கு மிக அருகே உள்ள பழமையான நகர் கொராசின். இன்றைக்கு அந்த நகர் அழிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. இதற்குக் காரணம் மக்களுடைய தீச்செயல்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அந்நகரைப் பார்த்து, “கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு, தீர்ப்பு நாளில் உனக்குக் கிடக்கும் தண்டனை மிகுதியாகும்” என்றார். (மத் 11:21,22). அவர் சொன்னது போன்று நடந்தது. ஆகவே, மனமாற்றம் பெறாத ஒவ்வொருவரும் அழிவது உறுதி என்பதே இதிலிருந்து நாம் கண்டுணரக்கூடிய செய்தி.
ஆகையால், தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம். அனுதினமும் ஜெபமாலை சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.