7ஆம் வாரம்
வெள்ளி
முதல் ஆண்டு
முதல் வாசகம்
நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 5-17
இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்; பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும். அனைவரோடும் நட்புடன் பழகு; ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள். உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு; அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்; உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்; நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்; உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள். உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்; உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள். நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை; அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.
ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 12,16. 18,27. 34,35 (பல்லவி: 35ய)
பல்லவி: உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்.
12 ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். 16 உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன். பல்லவி
18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். 27 உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். பல்லவி
34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். பல்லவி
நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி
யோவா 17:17 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை; உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுள் இணைத்ததை, மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில் இயேசு புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம்போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
பரிசேயர் அவரை அணுகி, ``கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?'' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, ``மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?'' என்று கேட்டார்.
அவர்கள், ``மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்'' என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், ``உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' என்றார்.
பின்னர் வீட்டில் இதைப்பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி, ``தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
நண்பர்கள் என்றும் பலமே.
அந்த நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ்வதுவே சிறப்பானது.
இதுவே நட்பினை காலமும் கொண்டு செல்லும்.
நண்பர்களாவோம். நம்பிக்கையில் உறுதி பெறுவோம்.
No comments:
Post a Comment