புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 May 2013

8ஆம் வாரம்


திங்கள்



முதல் ஆண்டு

முதல் வாசகம்

ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 17: 20-29

மனிதர்களுடைய அநீதியான செயல்கள் ஆண்டவருக்கு மறைவாய் இருப்பதில்லை; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார். ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்.

மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன. அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணி போல் விளங்குகின்றன. பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்; அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார். இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்; நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.

ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; பாவங்களை விட்டு விலகுங்கள்; அவர் திருமுன் வேண்டுங்கள்; குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்; அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்; அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள். வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்? உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை. நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர். ஆண்டவரின் இரக்கம் எத்துiணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்பு வோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 6. 7 (பல்லவி: 11ய)

பல்லவி: நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்.

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட' '' என்றார். அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார்.

சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

No comments:

Post a Comment