இன்றைய புனிதர் :
(08-03-2020)
தூய இறை யோவான் (மார்ச் 08)
நிகழ்வு
நகரில் இருந்த நோயாளிகள், அனாதைகள், விதவைகள் போன்றோரை எல்லாம் தன்னுடைய இல்லத்திற்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார் நம் புனிதர் யோவான். இதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
இதற்கிடையில் யோவானின் வளர்ச்சி பிடிக்காத யாரோ ஒருவர் அவர் ஆற்றிவந்த இந்த சேவையை தவறாக அந்நகரின் ஆயருக்குத் தெரிவித்திருந்தார்கள். இதனால் ஆயர் யோவானைக் கூப்பிட்டு, “நீ உன்னுடைய இல்லத்தில் பாவிகளையும் விலைமகள்களையுமா கூட்டிக்கொண்டு வைத்து பணி செய்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு யோவான் மிகவும் பொறுமையாக, “ஆம் ஆயர் அவர்களே! ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடித்தானே இந்த மண்ணுலகிற்கு வந்தார். அது போன்று நானும் பாவிகளைத் தேடிச்சென்று அவர்களுக்கு என்னுடைய சேவையைச் செய்கின்றேன். மட்டுமல்லாமல், என்னை விட பெரிய பாவி இவ்வுலகில் இருக்க முடியுமா?” என்றார். ஆயரால் பதிலுக்கு எதுவும் பேசமுடியவில்லை. பின்னர் ஆயர் யோவானுக்கு மனப்பூர்வ சம்மதம் அளித்து, அவர் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்திட அனுமதி அளித்தார்.
வாழ்க்கை வரலாறு
யோவான் போர்ச்சுகல் நாட்டில் 1495 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலே வீட்டை விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு ஓடிப் போய் அங்கிருந்த பண்ணையார் ஒருவருடைய ஆடுகளை மேய்த்து வந்தார். சிறுது காலத்தில் அதுவும் பிடிக்காமல் போய் பிரான்சு நாட்டிற்குச் சென்று இராணுவத்தில் பணியாற்றினார். அங்கேயும் அவர் நிரந்தரமாக இல்லை. மீண்டுமாக அவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நாடோடியாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் அவிலா நகரைச் சார்ந்த யோவானுடைய போதனையைக் கேட்ட நேர்ந்தது. அவருடைய போதனை யோவானின் உள்ளத்தைத் தொட்டது. உடனே அவர் தன்னுடைய கடந்தகால பாவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அது மட்டுமல்லாமல் ஒரு சாட்டை எடுத்து, அதனைக்கொண்டு தன்னுடைய உடல் முழுவதும் பலமாக அடித்து தன்னையே அவர் காயப்படுத்திக்கொண்டார். இதைக்கண்ட அவிலா நகர யோவானை அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு பொய் ஆற்றுப்படுத்தினார். “உன்னுடைய மனமாற்றத்தை வெளிப்படுத்த இது சரியான வழியல்ல, நீ மனம்மாறிவிட்டேன் என்பதைக் காட்ட விரும்பினால், உன்னுடைய பகுதியில் இருக்கும் நோயாளிகளையும் கைவிடப்பட்டோரையும் கவனித்துக் கொள்” என்றார். அவர் சொன்ன அறிவுரை யோவானின் வாழ்வில் புது ஒளியை ஏற்றியது.
அடுத்த நாளே யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கினார். முடியாதவர்களை எல்லாம் தன்னுடைய தோள்மேல் சுமந்துகொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார். குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களைக் குளிப்பாட்டி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்துவந்தார். இத்தகைய அறப்பணிகளுக்கு அவர் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பயன்படுத்தினார். முடியாத பட்சத்தில் அவர் அந்நகரில் இருந்த பெரும் செல்வந்தர்களிடம் பண உதவி பெற்றுக்கொண்டார்.
யோவானின் இத்தகைய இரக்கச் செயல்களைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் அவரோடு சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, ‘நன்மை செய்யும் சகோதரர்கள்’ என்னும் சபையை நிறுவினார். அச்சபை இன்றைக்கு நூறு நாடுகளுக்கும் மேல் பரவி துன்புறும் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளையும் மருத்துவச் சேவையும் செய்து வருகின்றது. இப்படி நோயாளிகளுக்கு மத்தியில் பணிசெய்து அவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வினை அர்ப்பணம் செய்த ‘இறை’ யோவான் 1550 ஆம் ஆண்டு தன்னுடைய ஐம்பத்து ஐந்தாம் வயதில் காலமானார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இறை யோவான் என்று அழைக்கப்படும் இவர் நோயாளிகள், மருத்துவர்கள் போன்றோருக்குப் பாதுகாவலாக இருக்கின்றார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நோயாளிகள் மீது அக்கறை
தூய இறை யோவான் தன்னுடைய பகுதியில் இருந்த நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை சிறந்த விதமாய் கவனித்துக்கொண்டு அவர்களுக்கு கடவுளுடைய அன்பினை வெளிப்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்று அறிகின்றோம். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நோயாளிகளிடம் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளையும் கைவிடப்பட்டவர்களையும் கண்டும் காணாமலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் நோயுற்று இருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டாயா?” என்று. ஆம். நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை நாம் கவனித்துக்கொள்கின்றபோது நாம் நம் ஆண்டவர் இயேசுயே கவனித்துக்கொள்கின்றோம் என்பதுதான் உம்மை.
அமெரிக்காவில் தாமஸ் பிஷர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுப்பிரிந்து பல ஆண்டுகள் ஆனதால் அவர் தனியாகயே வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரிடம் ஏராளமான சொத்துகள் இருந்ததால், அவருடைய மனைவியின் பிரிவு அவருக்கு அவ்வளவு ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையில் ஒருநாள் மாலைவேளையில் அவர் தன்னுடைய வீட்டில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டின் கதவு தட்டப்பட்டது. உடனே அவர் எழுந்துசென்று கதவைத் திறந்தார். கதவைத் திறந்து பார்த்தபோது அவருக்கு எதிரில் கையில் கைத்தடியுடன் (Walking Stick) ஜோ நின்றுகொண்டிருந்தார். இந்த ஜோ ஒரு தெருவோர பிச்சைக்காரார். அவ்வப்போது அவர் தாமஸ் பிஷரின் வீட்டிற்கு வருவார். அவரும் கொஞ்சம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அன்றைக்கும் தாமஸ் பிஷர் அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். அன்றைக்குக் குளிர் வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது.
மறுநாள் தாமஸ் பிஷர் தன்னுடைய வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்தார்கள். எல்லாரையும் விலகிக்கொண்டு அவர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அங்கே இறந்து கிடந்தது முந்தைய தினத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்துபோன ஜோ என்று. ஜோவின் உடல் குளிருக்கு நன்றாக விறைத்துபோயிருந்தது. அப்போதுதான் தாமஸ் பிஷருக்கு மண்டையில் உரைத்தது, நேற்றைய நாளில் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது அவருக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கலாமே என்று.
அவருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர், கனத்த இதயத்தோடு ஜோவை கல்லறைக்குத் தூக்கிக் கொண்டு போய் நல்லடக்கம் செய்தார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் ஜோவைப் போன்று எத்தனையோ ‘ஜோக்கள் உறவுகள் இன்றி, கைவிடப்பட்டவர்களாய், நோய் வாய்ப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் நம்முடைய அன்பும் கரிசனையும் நிச்சயம் தேவைப்படுகின்றது.
ஆகவே, தூய இறை யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று நோயாளிகளிடமும் கைவிடப்பட்டவர்களிடமும் உண்மையான அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment