மார்ச் 19 - புனித சூசையப்பர் திருவிழா. மார்ச் மாதம் முழுவதும் இவருக்கு அர்பணிக்கப்பட்ட மாதம். இவரது பரிந்துரை பெற இவரை மன்றாடுவோம்.
புனித சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித கன்னி மரியாவின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
பிறப்புகி.மு.39/38
இறப்புகி.பி.21/22
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் தச்சுத் தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான நம் அன்னை மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், அன்னை மரியாள் தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். அன்னை மரியாள் திடீரென கருவுற்றதால் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கி விட நினைத்தார். அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை சம்மனசு வழியாக அறிந்த இவர் அன்னை மரியாளை ஏற்றுக் கொண்டார்.
இயேசு பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் கோவிலில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும் அன்னை மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாதுகாத்தார். பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட பொழுது, அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடி அலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். அன்னை மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.
அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். அன்னை மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட அர்ச்சியசிஷ்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் அன்னை மரியாளும் அருகில் இருக்க அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தூய யோசேப்பு.
யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, “பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு” சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், “நான் ஆண்டவருக்கு அடிமை” என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.
இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.
காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, “யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்” என்றார்.
இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.
மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.
இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.
No comments:
Post a Comment