இன்றைய புனிதர் :
(31-03-2020)
முரானோ நகர தூய டேனியேல் (மார்ச் 31)
இயேசு அவனிடம், “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார். (மத் 19 :22)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுக்கூரும் தூய டேனியல் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் என்றால் இன்றைக்கு ஒருசிலர் செய்துவருபோல் பொய்யை மூலதனமாகப் போட்டு, கள்ளத்தராசியால் யாருடைய பணத்தையும் கபளீகரம் செய்யாமல், நேர்மையான முறையில் வியாபாரம் செய்து வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து கிடைத்த கொஞ்ச இலாபத்தையும்கூட அவர் ஏழை எளியவருக்குக் கொடுத்து உதவி வந்தார்.
வியாபார நிமித்தமாக டேனியேல் அடிக்கடி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும்போது அவர் கமல்தனிஸ் துறவிகளுடைய வாழ்க்கை முறையைப் பார்த்தார். அவர்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு இறைவன் ஒருவரை மட்டுமே பற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மட்டுமல்லாமல் அவர்கள் எல்லாரிடத்திலும் அன்போடும் பாசத்தோடும் பழகி வந்தார்கள். இதனால் அவர்கள் எல்லாருடைய நன்மதிப்பையும் பெற்றார்கள். இவற்றையெல்லாம் பார்த்த டேனியலுக்கு தானும் அந்தத் துறவிகளைப் போன்று ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஏற்கனவே தான் சம்பாதித்ததை எல்லாம் ஏழை எளியவருக்குக் கொடுத்துவந்த டேனியலுக்கு துறவியாக மாறவேண்டும் என்ற ஆசை வந்ததும், தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் விற்று எழைகளுகுக் கொடுத்துவிட்டு துறவறம் பூண்டார்.
துறவறம் புகுந்த பிறகு, மற்ற எல்லாத் துறவிகளுக்கும் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். குறிப்பாக துறவற மடத்தில் யாருமே செய்ய முன்வராத வேலைகளையும்கூட செய்ய முன்வந்தார். அது மட்டுமல்லாமல், அவர் எல்லாரோடும் அன்போடும் பாசத்தோடும் இருந்தார். அதனால் அவரை எல்லாருக்கும் பிடித்துப் போனது. இப்படிப்பட்டவர் ஒருநாள் இரவுநேரத்தில் பாதையோரமாய் சென்றுகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சில கொள்ளையர்கள் டேனியலிடம் ஏராளமாகப் பணமிருக்கின்றது என்று எண்ணி, அவரை கத்தியால் குத்திக் கொன்று போட்டுச் சென்றுவிட்டனர். அவரோ அந்த இடத்திலே துடிதுடிக்க இறந்து போனார். டேனியேல் இறந்த ஆண்டு 1411 ஆகும்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய டேனியலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. ஏழைகளுக்குக் கொடுத்து வாழவேண்டும்
தூய டேனியலிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரைப் போன்று நம்மிடத்தில் இருப்பதை, தேவையில் உள்ள ஏழை எளியவருக்குக் கொடுத்து வாழவேண்டும் என்பதுதான். டேனியல் தன்னிடமிருந்த செல்வத்தில் கொஞ்சத்தை மட்டும் ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். அவரிடத்தில் இருந்த தாராள மனம் நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்த இடத்தில், பெரிய கிரகோரியரின் வாழ்வில் நடந்த ஒருசில நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் மிகவும் பொருளுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அவர் உரோமை நகரில் மிகப் பெரிய செல்வந்தராய் இருந்தார். ஒரு கட்டத்தில் இறைவன் தன்னை அழைக்கின்றார் என்பதை உணர்ந்ததும் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு இறைப்பணியைச் செய்யத் தொடங்கினார். பின்னர் அவர் திருத்தந்தையாக உயர்ந்த பின்பும்கூட ஏழை எளியவரிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். அவர் தனக்கு சாவு நெருங்கி வருகின்றது என்பதை உணர்ந்ததும் தன்னுடைய மேலாடையைக் கழற்றி, நகரில் இருந்த ஏழையிடம் கொடுத்து, அதனை அவர் குளிருக்குப் போர்த்திக் கொள்ளச் சொன்னார். அந்தளவுக்கு அவர் ஏழைகள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பிற்கு ஈடாக தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தார்.
தூய டேனியலைப் போன்று, பெரிய கிரகோரியாரைப் போன்று நாமும் ஏழைகளிடத்தில் உண்மையான அன்போடு இருக்கின்றோமா? அவர்களுக்கு நம்மால் இயன்றதைத் தருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பல நேரங்களில் ஏழைகள் அப்படியிருக்கக் காரணம் அவர்கள் உழைப்பதில்லை, சோம்பேறிகளாகவே இருக்கின்றார்கள் என்று உண்மையை அறியாமல், அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றோம். உண்மையில் இந்த சமூகம் அவர்களை உயரவிடாமல் அப்படியே வைத்திருக்கின்றது. அதுதான் காரணம். ஆகவே, இப்படிப் பட்டவர்களுக்கு நாம் உதவி செய்கின்றபோது அது இறைவனுக்குச் செய்யக்கூடிய உதவி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
எனவே, தூய டேனியலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழைகள்மீது உண்மையான அன்பு கொண்டு வாழ்வோம், அவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (31-03-2020)
Saint Daniel of Venice
St Daniel of Venice was born in 15th century AD. He was the 15th-century Camaldolese monk at Venice, Italy. St Daniel was also Known for giving away everything he had to care for the poor, and for living in continuous prayer.
Date of Birth : 15th Century
Country of Birth : Germany in Europe
Matrimony/Holy Orders : Saints who were Monks
Profession Monk
Place of Work : Italy
Date of Death : 31 March 1411 AD
Place of Death : San Mattia di Murano, Venice, Italy
Feast Day : March 31, March 20
Beautification : Beatified by N/A
Canonization : Canonized by N/A
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment