இன்றைய புனிதர் :
(20-04-2020)
மொன்டே புல்சியானோ நகர தூய ஆக்னஸ் (ஏப்ரல் 20)
என் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவர், நான் விண்ணகம் செல்வது பற்றி மகிழ்ச்சியுறுவார். – தூய ஆக்னஸ்
வாழ்க்கை வரலாறு
ஆக்னஸ் 1268 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள டாஸ்கனி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஆக்னசுக்கு ஐந்து வயது நடக்கும்போது துறவியாகப் போகப்போகிறேன் என்றார். இதைக் கேட்ட அவருடைய பெற்றோர், “இந்த வயதில் அது சாத்தியம் கிடையாது” என்று சொல்லி அவரை வீட்டிலே இருக்க வைத்தனர். ஆக்னசுக்கு ஒன்பது வயது ஆகும்போது மீண்டுமாக அவர், “நான் துறவியாகப் போகப்போகிறேன்” என்றார். உடனே ஆக்னசின் பெற்றோர் ஆக்னசிற்கு துறவற வாழ்வில் இருந்த ஆர்வத்தைக் கண்டு அவரை துறவற வாழ்வினைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தனர்.
துறவுமடத்தில் சேர்ந்த பின்னர் ஆக்னஸ் மிகவும் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குறிப்பாக அவர் தூய்மைக்கும் பிறரன்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்தார். இவரிடத்தில் துலங்கிய தூய்மையான வாழ்வினைப் பார்த்துவிட்டு இவரை 15 வயதிலே துறவற மடத்தின் தலைவியாக ஏற்படுத்தினார்கள். அதன்பின்னரும்கூட இவர் தூய்மைக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்தார்.
ஆக்னஸ், தன்னுடைய அதிகமான நேரத்தை காட்சி தியானத்திற்கு செலவழித்து வந்தார். ஒரு சமயம் இவர் தியானம் செய்துகொண்டிருக்கும்போது அன்னை மரியா குழந்தையோடு இவருக்குக் காட்சி தந்தார். இதைச் சிறிதும் எதிர்பாராத ஆக்னஸ் மிகவும் பரவசமடைந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அன்னை மரியா ஆக்னசிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, அவர் குழந்தை இயேசுவின் காலை பிடித்துக்கொண்டு, “அன்னையே! குழந்தை இயேசுவை மட்டும் என்னோடு இருக்க அனுமதியும்” என்றார். அதற்கு அன்னை மரியா, “குழந்தை இயேசுவை உன்னிடம் விட்டுவிட்டுப் போகமுடியாது. அது சாத்தியமும் கிடையாது. வேண்டுமானால் நான் தரக்கூடிய இந்த மூன்று கற்களை வைத்துக்கொள், அது என்றைக்காவது தேவைப்படும்” என்று சொல்லிவிட்டு தன்னிடத்தில் இருந்த மூன்று கற்களை கொடுத்துவிட்டு, அன்னை மரியாவும் குழந்தை அங்கிருந்து மறைந்து போனார்கள்.
ஆக்னஸ், மடத்தின் தலைவியாகப் பொறுப்பெடுத்த இரண்டாம் ஆண்டில் ப்ரோசெனா என்ற இடத்தில் துறவற மடம் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்று உணர்ந்தார். அதன்படியே அவர் அங்கு சென்று, துறவற மடம் ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மொன்டே புல்சியனோ நகரில் சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்றொரு அழைப்பு வந்தது. உடனே அவர் அங்கு சென்று, முன்பு அன்னை மரியா அவருக்குக் கொடுத்த மூன்று கற்களை அடித்தளமாக வைத்து துறவற மடத்தைக் கட்டி எழுப்பி, அதில் சபை ஒன்று ஆரம்பித்தார். அங்கு ஏராளமான பேர் வந்து சேர்ந்தார்கள்.
ஆக்னஸ் அதிகமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். நற்கருணை மட்டுமே நீண்ட நாட்களாக உட்கொண்டு வந்தார். அதனால் அவருடைய உடல் பலவீனமடைந்தது. எனவே அவர், 1317 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1726 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய ஆக்னசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்
தூய ஆக்னசிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் சபைத் தலைவியாக உயர்ந்த பிறகும்கூட குழந்தை மனம் மாறாது இருந்தார் என்பதுதான் உண்மை. ஆகவே, அவரை இன்று நினைவுக்கூருகின்ற நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தி 18 வது அதிகாரத்தில் இயேசு, “இறையாட்சி குழந்தைகளுக்கே – குழந்தை மனம் கொண்டவர்களுக்கே” என்பார். எனவே, நாம் குழந்தை மனம் கொண்டவர்களாய் இருக்கின்றபோது இறையாட்சிக்கு உரியவர்கள் ஆவோம் என்பது உண்மை.
கல்கத்தாவில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவிய நேரம். அப்போது ஒருநாள் அன்னைத் தெரசாவைப் பார்க்க இரண்டு சிறுவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய தாயும் வந்திருந்தார். வந்த சிறுவர்கள் இருவரும் அன்னைத் தெரசாவிடம் தங்களிடம் இருந்த சக்கரைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, “அன்னையே! நாங்கள் இருவரும் இனிமேல் காப்பியே அருந்துவதில்லை என முடிவெடுத்திருக்கின்றோம். அப்படிச் சேர்த்த பணம் இதோ ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். இதைக் கேட்டு அன்னை நெகிந்து போனார். அதோடு அந்தக் குழந்தைகளிடம் இருந்த தியாக உள்ளத்திற்காக அவர்களை வெகுவாகப் பாராட்டினார்.
ஆம், குழந்தைகள் எப்போதும் அடுத்தவருக்காக இரங்குபவர்கள்; உண்மையான தியாக உள்ளத்தோடு இருப்பவர்கள். ஆகவே, அப்படிப்பட்டவர்களாய் நாம் இருக்கின்றபோது இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
ஆகவே, தூய ஆக்னசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment