புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 April 2020

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)

இன்றைய புனிதர்

தூய ஆன்செல்ம் (ஏப்ரல் 21)
இயேசுவுக்காக வாழ்வோருக்கு துறவுமடம்தான் உண்மையான விண்ணகம் – தூய ஆன்செல்ம்

வாழ்க்கை வரலாறு

ஆன்செல்ம், 1033 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ஆவோஸ்டா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் பக்திமிக்க பெண்மணி. அதனால் அவர் ஆன்செல்மை பக்தி நெறியில் வளர்த்து வந்தார். ஆனால் அவர் சிறுது காலத்திலேயே இறந்துபோனதால் ஆன்செல்ம் தன்னுடைய தந்தையின் பராமரிப்பில் வளரவேண்டிய சூழல் உருவானது. ஆன்செல்மின் தந்தையோ அவரை பலவாறு கொடுமைப் படுத்தினார். அதனால் அவருடைய கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஆன்செல்ம் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பெக் என்னும் இடத்தில் இருந்த தூய ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, துறவியாக மாறினார். ஒருசில ஆண்டுகளிலே அந்த மடத்தின் தலைவராக மாறினார். ஆன்செல்மிற்கு இறைவன் நிறைந்த அறிவையும் ஞானத்தையும் கொடுத்திருந்தார். அதனால் நிறைய புத்தகங்களை எழுதினார். குறிப்பாக இவர் எழுதிய ‘மோனோலாக்கியம்’, ‘பிராஸ்லாக்கியம்’ ‘கடவுள் ஏன் மனிதர் ஆனார்’ போன்ற புத்தகங்கள் எல்லாம் அமரத்தத்துவம் வாய்ந்தவை. இந்தப் புத்தகங்களின் வழியாக ஆன்செல்ம் இறைவனுடைய இருத்தலை இறையியல் மற்றும் மெய்யியல் சிந்தனையோடு விளங்கினார்.

இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கும்போது 1093 ஆம் ஆண்டு இவர் கண்டர்பரி நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். ஆயராக உயர்ந்தபின்பு நிறைய காரியங்களை மிகத் துணிச்சலாகச் செய்தார். திருச்சபையின் புனிதத்தையும் மாண்பினை கட்டிக்காத்து உண்மையின் உரைகல்லாக விலகினார். இதனால் சினம்கொண்ட அரசன் இரண்டாம் வில்லியம் இவரை நாடு கடத்தினார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேறொரு இடத்திலிருந்த ஆன்செல்ம், மன்னன் இறந்தபிறகு மறைமாவட்டத்திற்குத் திரும்பினார். மறைவாட்டத்திற்குத் திரும்பி வந்த பிறகும்கூட அதன்பிறகு வந்த நான்காம் ஹென்றி என்ற மன்னன் ஆயர் ஆன்செல்முக்கு மிகப்பெரிய தலைவலியாய் இருந்து வந்தான். அவனும் ஆயரை நாடு கடத்தினான். ஒருசில ஆண்டுகள் வெளியே இருந்துவிட்டு, மீண்டுமாக மறைமாவட்டத்திற்கு வந்தார் ஆன்செல்ம். மன்னர்கள் அவருக்கு எவ்வளவுதான் தொந்தரவு கொடுத்தாலும் அவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து திருச்சபைக் கட்டிப் காத்தார். இவர் 1109 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1720 ஆண்டு புனிதர் பட்டமும் மறைவல்லுநர் பட்டமும் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஆன்செல்மின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


1. மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொல்வோம்

தூய ஆன்செல்மின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் மனவுறுதி இருந்ததும் அதன்மூலம் அவர் உண்மையை உரக்கச் சொன்னதும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. ஆன்செல்ம் கண்டர்பெரி நகரின் ஆயராக இருந்தபோது நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அத்தகைய தருணங்களில் அவர் யாருக்கும் ஏன் அரசருக்குக்கூட பயப்படாமல், உண்மையை உரக்கச் சொன்னார். தூய ஆன்செல்மை நினைவுகூருகின்ற நாம், அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏதென்ஸ் நகரில் இருந்த இளைஞர்களிடம் தவறான கருத்துகளைச் சொல்லி, அவர்களைத் திசை திரும்புகின்றார் என்ற குற்றத்திற்காக சாக்ரடீஸ் நீதிமன்ற விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிக்கோ சாக்ரடீசுக்கு மரணதண்டனை விதிக்க விருப்பமில்லை எனவே அவர் சாக்ரடீசிடம், “ஏதென்ஸ் நகரை விட்டுச் சென்றுவிடுங்கள். அல்லது உங்கள் போதனையை நிறுத்தி விடுங்கள்” என்றார். அதற்கு சாக்ரடீஸ், “ஏதென்ஸ் நகரை விட்டுச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், இருளில் பிறர் தடுமாறுவதைப் பார்த்து நான் அமைதி காக்க முடியாது. எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்” என்றார். “அப்படியானால் மரணதண்டனை மட்டுமே வழி” என்றார் நீதிபதி.

“எனக்கு மரணதண்டனை விதிப்பதால் மட்டுமே நீங்கள் புகழடைவீர்கள். இல்லையென்றால் உங்களை யாருக்குமே தெரியாது” என்று கம்பீரமாகச் சொன்னார் சாக்ரடீஸ்.

சாவுக்கு அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்ன சாக்ரடீஸ் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். தூய ஆன்செல்மும் அப்படித்தான் மனவுறுதியோடு இருந்து உண்மையை உரக்கச் சொன்னார்.

ஆகவே, தூய ஆன்செல்மின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று உண்மையை உரக்கச் சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

No comments:

Post a Comment