இன்றைய புனிதர் :
(26-04-2020)
தூய ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் (ஏப்ரல் 26)
“நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்” மத் 25: 23.
வாழ்க்கை வரலாறு
790 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் உள்ள நோட்ரே தாமே (Nonte Dame) என்ற இடத்தில் இருந்த கன்னியர் மடத்திற்கு முன்பாக ஒரு குழந்தை அனாதையாகக் கிடந்தது. அந்தக் குழந்தையை எடுத்த கன்னியர் மடத்தில் இருந்த அருட்சகோதரிகள் அதற்கு ராட்பெர்துஸ் பஸ்காசியசிஸ் என்று பெயர் வைத்தார்கள். அவர் தான் இன்று நாம் நினைவுகூருகின்ற ராட்பெர்துஸ் பஸ்காசியஸ்.
ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் தன்னுடைய தொடக்கக் கல்வியை நோட்ரே தாமேவில் இருந்த ஒரு பள்ளியில் கற்றார். படித்துக்கொண்டிருக்கும்போது அங்கிருந்த துறவிகளின் வாழ்வால் தொடப்பட்டு பின்னாளில் துறவியாக மாறினார். இவருக்கு துறவிகளான அடல்ஹால்து என்பவரும் வாலா என்பவரும் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து வந்தார்கள். ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் சில ஆண்டுகளிலே தான் இருந்த துறவற மடத்தின் தலைவராக மாறினார்.
ராட்பெர்துஸ் பஸ்காசியஸ் விவிலியத்தில் புலமை பெற்றிருந்தார். அதைக் கொண்டு அவர் நிறைய புத்தங்களை எழுதினார். குறிப்பாக மத்தேயு நற்செய்திக்கு விளக்கவுரையாக 12 பாகங்களை எழுதினார் அது போன்று கன்னியான மரியாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் நிறைய எழுதினார். இவர் எழுதிய புத்தகங்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ‘The Body and Blood of Christ” என்பதாகும். இப்புத்தகம் இன்றளவும் சிறந்த ஒரு புத்தகமாகக் கருதப்படுகின்றது. இப்படி பல்வேறு புத்தங்களை அவர் எழுதி வந்தாலும் ஜெபத்திற்கும் தியானத்திற்கும் அதிகமான நேரத்தை அவர் ஒதுக்கினார். அவர் செய்து வந்த ஜெபமே பல நேரங்களில் அவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 860 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்வோம்.
தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும் நம்முடைய மனதில் தோன்றக்கூடிய ஒரே சிந்தனை, அவர் கடவுள் தனக்குக் கொடுத்த வாழ்வினை அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்தார் என்பதுதான். தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசை நினைவுகூரக்கூடிய நாம், அவரைப் போன்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முயற்சி எடுக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் யோவான் நற்செய்தி 15: 8 ல் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது என்று. நாம் கனிதரக்கூடிய வாழ்க்கையினை வாழ்கின்றபோதுதான் இறைவனுக்குப் பெருமை சேர்க்க முடியும்.
சமீபத்தில் பார்த்த விளம்பரம் இது. பறவை ஒன்று, அனாதையாகக் கிடைக்கும் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆறு, மலை, கடல், பாலைவனம் எல்லாவற்றையும் தாண்டிப் பறக்கும். நடுவில் அக்குழந்தைக்கு வரும் ஆபத்துகளையும், மழையையும் திறமையாக எதிர்கொண்டு கடைசியில் குழந்தையைப் பத்திரமாக ஒரு வீட்டில் கொண்டு சேர்க்கும்.
பல ஆண்டுகள் கழித்து அனாதையாக விட்டுவிட்டு வந்த குழந்தை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, பறவை அந்த வீட்டுக்கு மறுபடி வரும். இப்போது குழந்தை இருப்பத்தைந்து வயது இளைஞனாகியிருக்கும். பறவை அந்த இளைஞனை ஆர்வத்தோடு பார்க்கும். அவன் சோம்பேறித் தனமாக கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பான். சுவாஸ்ரயமில்லாமல் ஏதோ வேலையை செய்து கொண்டிருப்பான். சுருக்கமாகச் சொன்னால் அவன் அவன் சராசரி மனிதனாக இருப்பான். இதைப் பார்க்கும் அந்தப் பறவை வருத்தப்பட்டு மிகவும் ஏமாற்றத்தோடு செல்லும். இத்தோடு அந்த விளம்பரம் நிறைவுபெறும்.
இந்த விளம்பரம் உணர்த்தும் செய்தி மிக எளிது. நன்றாக இருக்கவேண்டிய அந்தப் பையன், சராசரியாக இருக்கின்றான். அதுதான் அந்தப் பறவைக்கு வருத்தம். கடவுளும் அப்படித்தான் நம்மை பலன் தரக்கூடிய வாழ்வு வாழ இந்த உலகில் படைத்திருக்கின்றோம். நாம் பலன்தரவில்லை என்றால், அது அவருக்கு வருத்தம்தான்.
ஆகவே, தூய ராட்பெர்துஸ் பஸ்காசியசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரை போன்று, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment