இன்றைய புனிதர் :
(16-05-2020)
குப்பியோ நகர தூய உபால்டு (மே 16)
“அவர் காலத்தில் நீதி தலைத்தோங்குவதாக; நிலா உள்ளவரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக” (திபா 72: 7)
வாழ்க்கை வரலாறு
1110 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள குப்பியோ என்னும் இடத்தில் உபால்டு பிறந்தார். இவர் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே இவருடைய பெற்றோர் இறந்துபோனார்கள். இதனால் இவர் இவருடைய மாமாவின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். உபால்டின் மாமா குப்பியோ நகரில் ஆயராக இருந்தார்.
உபால்டு வளர்ந்து பெரியவராகியபோது துறவுமடத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இறைவனின் திருவுளமோ அவர் மறைமாவட்டக் குருவாக மாறவேண்டும் என்றாக இருந்தது. எனவே உபால்டு மறைமாவட்டக் குருவாக மாறினார். பின்னாளில் அவர் குப்பியோ நகரின் ஆயராகவும் உயர்ந்தார்.
ஆயர் உபால்டு பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் மன்னிக்கும் மனப்பான்மைக்கும் பேர் போனவராக விளங்கினார். ஒரு சமயம் நகரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. அப்போது உபால்டுதான் கலகக்காரர்களை ஒன்றாக ஓட்டி, அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி, நகரில் அமைதியான சூழல் உருவாகக் காரணமாக இருந்தார். இன்னொரு சமயம் பிரடரிக் பார்பரோசா என்ற மன்னன் குப்பியோ நகர் மீது படையெடுத்து வந்து, சூரையாட நினைத்தான். அத்தகைய சூழலில் ஆயர் உபால்டு மிகவும் தைரியத்தோடு பிரடரிக் பார்பரோசவையும் அவனுடைய படையையும் எதிர்கொண்டார். இதனால் அவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.
ஆயர் உபால்டு மிகவும் துணிச்சல் மிக்கவராகும் கனிவுள்ளவராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் உடல் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு வந்த நோயானது அவருடைய உடல் நலத்தை வெகுவாகப் பாதித்தது. இதனால் அவர் 1160 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1192 ஆம் ஆண்டு புனிதர் கொடுக்கப்பட்டது. இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்ட நாளில் குப்பியோ நகரில் இருந்த அனைவருமே வத்திகானில் இருந்த தூய பேதுருவின் சதுக்கத்திற்குச் சென்று, தங்களுடைய நன்றியுணர்வை காணிக்கையாக்கினார்கள்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய உபால்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
மன்னித்து வாழ்வோம், மாபரன் இயேசுவைப் போன்று ஆவோம்.
தூய உபால்டிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம், அவரிடத்தில் இருந்த மன்னிக்கும் மனப்பான்மைதான்.
ஒரு சமயம் ஆயர் உபால்டு பணிநிமித்தமாக வெளியே சென்றுகொண்டிருக்கும்போது, அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அவருடைய கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்து ஆயரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தோட்டத் தொழிலாளரைப் பிடித்து அடிக்க முயன்றார்கள். அப்போது ஆயர் உபால்டு, அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, “இவர் தெரியாமல் என்னை அடித்துவிட்டார் அதனால் இவரை நான் மன்னிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். ஆயர் இவ்வளவு பெருந்தமையாக நடந்து கொண்டதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
தன்னை அடித்தவனை மன்னிக்கக்கூடிய மனப்பான்மை தூய உபால்டுக்கு இருந்தது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. தூய உபால்டைப் போன்று நாம் மன்னிக்ககூடிய மனிதர்காக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அடித்தவரை திருப்பி அடிக்கின்ற போக்கும் வன்முறைக்கு வன்முறையைக் கையாளுகின்ற போக்கும்தான் நிலவிக்கொண்டிருகின்றது. இதனால் எங்கும் வன்முறைக்கு மேல் வன்முறைதான் நிலவிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் தூய உபால்டிடம் இருந்த அந்த மன்னிக்கும் மனப்பான்மை நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.
ஒருமுறை மிகப் பெரிய மறைபோதகரான பில்லி கிரகாம் இவ்வாறு குறிப்பிட்டார், “மருத்துவ மனையில் இருக்கின்ற 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிப்பது”. ஆம், நாம் நமக்கு எதிராகத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கின்றபோது நம்மிடத்தில் இருக்கக்கூடிய முக்கால்வாசி நோய் காணாமல் போய்விடும்.
ஆகவே, தூய உபால்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று மன்னிப்பத்திலும் பொறுமையிலும் சிறந்து விளங்குவோம். அதன்வழியாக இறைவன் தரக்கூடிய அருளை நிறைவாய் பெற்று மகிழ்வோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment