இன்றைய புனிதர் :
(23-05-2020)
ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சி (மே 23)
“ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்” (மத் 25: 36 -37)
வாழ்க்கை வரலாறு
ஜான் பாப்டிஸ்ட், 1698 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள வல்டாஜியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிக சாதாரண குடும்பம். ஆதலால் இவருடைய படிப்புச் செலவை இவருடைய குடும்பத்தாரால் பார்க்க முடியாமல் போய், நல்லுள்ளம் கொண்ட ஒருவர்தான் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இவருக்குக் 13 வயது நடக்கும்போது இயேசு சபையினர் நடத்தி வந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். அதன்பின்னர் சாமிநாதர் சபையில் சேர்ந்து 1721 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு பற்பல பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். குறிப்பாக மருத்துவ மனைகளில் இருந்த நோயாளிகளைச் சந்தித்து அவர்களைத் தேற்றினார்; கைவிடப்பட்டோரையும் அனாதைகளையும் மிகச் சிறப்பான முறையில் பராமரித்து வந்தார். அவர்களுக்காகப் புதிதாக ஒரு மருத்துவ மனையையும் கட்டித் தந்து உதவினார். இதனால் இவர் எல்லாருடைய நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றார்.
ஜான் பாப்டிஸ்டுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்தது. அது அவருடைய உடல் நலத்தை நிறையவே பாதித்தது. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் ஏழை எளிய மக்கள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.
சில காலத்திற்குப் பின் இவர் சிவித்தா காஸ்தலேனே என்னும் இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்த ஆயர் இவரைக் குறித்து கேள்விப்பட்டு இவரை மக்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை செய்வதற்கென்று முழுநேரப் பணியாளராக நியமித்தார். அந்தப் பணியையும் இவர் சிறந்த விதத்திலே செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நோய் முற்றியது. இதனால் இவர் 1764 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி இறையடி சேர்ந்தார். இவருக்கு 1881 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தூய ஜான் பாப்டிஸ்ட் தே ரோச்சியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. சமூகத்தின் மீதான அக்கறை
தூய ஜான் பாப்டிஸ்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் அடுத்தவர்மீதும் இந்த சமூகத்தின் மீதும் கொண்டிருந்த அன்பும் அக்கறையும்தான் நம்முடைய நினைவுக்கு வருகின்றது. இவரைப் போன்று நாம் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பல நேரங்களில் நாம், என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள் என்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் அடுத்தவர் மீதும் இந்த சமூகத்தின் மீது அக்கறைகொண்ட மக்களாக வாழ்ந்து காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் யாரைப் பற்றியும் அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே வாழ்ந்து வந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவனுடைய தந்தை அவனிடம் பிறர் நலம் பேணும்படி அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான மகன் தந்தைக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தான். எனவே அவன் ஒரு காலிக்குவளையை எடுத்து தந்தையின் முன்பாகக் காட்டி, அதில் பாலை நிரப்பினான். “இந்தக் குவளை நான். இதிலுள்ள பால் என் வாழ்க்கை” என்றான். உடனே அவனுடைய தந்தை சிறிது சக்கரையை அதில் கலந்தார்.
பின்னர் அவர் அவனிடத்தில் சொன்னார், “சமூக அக்கறை என்னும் சக்கரையை இல்லாமல் உன் கசக்கும்”. இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்ட அவன் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.
ஆம், அடுத்தவர் மீதான அக்கறையும் இந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நமக்கு இல்லையென்றால் நமது வாழ்வு கசக்கத்தான் செய்யும்.
ஆகவே, தூய ஜான் பாப்டிஸ்ட்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று அடுத்தவர் மீதான அக்கறை கொண்டு வாழ்வோம், நம்மிடத்தில் இருக்கும் சுயநலப் போக்கைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment