புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 May 2020

தூய பிலிப்புநேரி (மே 26)

இன்றைய புனிதர் :
(26-05-2020)

தூய பிலிப்புநேரி (மே 26)

நிகழ்வு


பிலிப்புநேரி வாழ்ந்த காலத்தில் அடுத்தவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாகப் பேசும் பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் என பிலிப்புநேரி நினைத்தார். எனவே ஒருநாள் அவர் அந்த பெண்மணி இருந்த இடத்திற்குச் சென்று, வாத்தின் இரண்டு இறக்கைகளைக் கொடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து காற்றில் பறக்கவிடச் சொன்னார். அவரும் மிகவும் குஷியாக இறக்கைகளைக் பிய்த்து அவற்றை காற்றில் பறக்கவிட்டார். சிறுது நேரம் கழித்து பிலிப்பு நேரி அந்தப் பெண்மணியிடம், “இப்போது நீ காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை ஒன்றாக சேகரித்துக் கொண்டுவா” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “காற்றில் பறந்து போன எல்லாவற்றையும் எப்படிக் கொண்டுவருவது? அது போனது போனதுதான்” என்றார். அதற்கு அவர், “எப்படி காற்றில் பறக்கவிட்ட இறக்கைகளை மீண்டுமாக சேகரித்துக் கொண்டுவர முடியாதோ, அதுபோன்றுதான் நீ மற்றவர்களைப் பற்றி பரப்பிய பொய் குற்றச்சாட்டுகளும், தவறான கருத்துகளும். ஆகையால் இனிமேலாவது நீ பிறரைப் பற்றி தப்பான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்து” என்றார். அதன்பிறகு அந்தப் பெண்மணி தான் செய்து வந்த தவறை செய்யாமல் மனம்திரும்பி வாழ்ந்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு

கி.பி 1515 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் என்ற நகரில் பிலிப்புநேரி பிறந்தார். இவருடைய தந்தை பிரான்சிஸ்கோ, தாய் லூக்ரெஸ்னா என்பவராகும். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தான் செய்துவந்த வணிகத் தொழிலை விட்டுவிட்டு உரோமை நகருக்குச் சென்றார். உரோமை நகரில் இருந்த ஏழு ஆலயங்களுக்கும் கால்நடையாகச் சென்று, இரவில் தூய செபஸ்தியார் புதைகுழியில் போய் படுத்துக்கொள்வார்.

ஒருநாள் உரோமை நகரில் இருந்த ஒரு பணக்காரர் தன்னுடைய மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தால், தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பிலிப்புநேரி சரி எனச் சொல்லிவிட்டு, அந்த பணக்காரரின் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு, அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பிலிப்புநேரி இயல்பிலே கலகலப்பானவராக, மக்களை ஆற்றுப் படுத்துவதில் வல்லவராக இருந்தார். அதனால் அவர் தான் இருக்கக்கூடிய இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொண்டார், அதோடு தன்னை நாடிவரும் மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். பிலிப்புநேரி நோயாளிகளைச் சந்தித்து, அவர்களை திடப்படுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு வாழ்ந்தார். 1538 – 39 ஆம் ஆண்டுகளில் உரோமை நகரில் ஏற்பட்ட கடும்பஞ்சத்தில் ஏழை எளியவருக்கு உதவிசெய்து பெருந்தொண்டாற்றினார்.

இவருடைய பணிகளைப் பார்த்த அருட்தந்தை பெர்சியோனா ரோசா என்பவர் இவரை குருவாக படிக்கச் சொன்னார். அந்த குருவின் வார்த்தைகளுக்கு இணங்கி இவர் குருவாகப் படித்து, 1551 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் குருவாக உயர்ந்தார். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர் இளைஞர்களை ஒன்று திரட்டினார். அவர்களுக்கு கதைகள், மறைக்கல்வி வழியாக நல்லறிவு புகட்டினார். மேலும் இவர் ஜெபக்குழுக்களை ஏற்படுத்தி மக்களை இறைநம்பிக்கையில் வளர்த்தெடுத்தார்.

இவர் ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் திவ்ய நற்கருணைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார். அதில் மக்களை சிறப்பாக பயிற்றுவித்து வந்தார். இவர் நிறைவேற்றும் திருப்பலியில் கலந்துகொள்ளும் ஒருவர் திவ்ய நற்கருணையை உட்கொண்ட உடனேயே தன்னுடைய அலுவலகத்திற்கு ஓடிவிடுவார். சிறுதுநேரம் கூட நற்கருணை நாதருக்கு முன்பாக உட்கார்ந்து ஜெபிக்க மாட்டார். இதனைக் கவனித்த பிலிப்புநேரி அவருக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தார். எனவே ஒருநாள் அந்த இளைஞர் திவ்ய நற்கருணையை வாங்கி உட்கொண்டு உடனே ஓடியபோது, பிலிப்புநேரி பீடச் சிறுவர்களை அழைத்து, மெழுகுதிரிகளை ஏந்திக்கொண்டு அவர் பின்னால் ஓடிச் சொன்னார். இதைப் பார்த்த அந்த இளைஞர் தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, அதன்பிறகு நற்கருணை நாதருக்கு முன்பாக அதிக நேரம் உட்கார்ந்து ஜெபிக்கத் தொடங்கினர்.

இவர் மக்களுக்கு ஆலோசனை கூறும் திறமையைப் பார்த்து ஆயர்கள், கர்தினால்கள் முதற்கொண்டு இவரிடம் ஆலோசனை கேட்கவந்தார்கள், அதன்மூலமாக இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அப்படி நண்பர்கள் ஆனவர்கள்தான் தூய லயோலா இஞ்ஞாசியாரும் தூய சார்லஸ் பொரோமேயுவும். பிலிப்புநேரி தனக்குக் கிடைத்த நட்பை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை, அதன்வழியாக அவர் ஆதாயம் அடையவும் நினைக்கவில்லை. அவர் கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளை கடவுளுடைய மகிமைக்காகவே பயன்படுத்தினார். அடிக்கடி காட்சிகளைக் கண்டார். அதன்வழியாக அவர் இறைவனோடு உள்ள உறவில் மேலும் மேலும் வந்தார். பிலிப்புநேரி மக்களைப் பார்த்து அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை, “இன்று ஏதாவது நன்மை செய்தீர்களா?” என்பதுதான். இப்படிக் கேட்பதன் வழியாக அவர் மக்களை பிறருக்கு நன்மை செய்யத் தூண்டினார்.

பிலிப்பு நேரியின் பணிகளைப் பார்த்த திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரியார் இவரை ஒருசபையின் தலைவராக ஏற்படுத்தினார். இவரும் இவரோடு இருந்து பயிற்சி பெற்ற இளைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய சபையின் பெயர்தான் ‘ஆரட்டரியன்’ என்பவர். இதை அவர் மற்ற துறவற சபைகளைப் போன்று அல்லாமல், ஒரு ஜெபக் குழுவாக பயன்படுத்தி மக்களுடைய விசுவாச வாழ்விற்கு பேருதவியாக இருக்கச் செய்தார். இப்படி பல்வேறு பணிகளைச் செய்த பிலிப்புநேரி 1595 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக திருநிலை படுத்தப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய பிலிப்புநேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்


தூய பிலிப்புநேரி நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வமுள்ள பணியாளராக இருந்து செயல்பட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவருடைய சம காலத்தவரான தூய பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவில் நற்செய்தி அறிவிக்கும்போது, அங்கிருந்து அவர் அனுப்பும் மடல்களைப் படித்துவிட்டு, தானும் கீழை நாடுகளுக்குச் சென்று, நற்செய்தி அறிவித்து மறைசாட்சியாக உயிர்துறக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டார். ஆனால் அருட்தந்தை பெர்சியோனா ரோசா ன்பவரின் அறிவுறுத்தலின் பேரில் உரோமை நகரிலேயே நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். அதனால் இவர் உரோமை நகரின் இரண்டாவது திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் தூய சவேரியார் மீது அதிகமான பற்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததனால் என்னவோ சவேரியார் புனிதர் பட்டம் பெற்ற அதே ஆண்டில் இவரும் பெற்றார்.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நமக்கு நற்செய்தி அறிவிப்பின் மீது ஆர்வம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் உலகெங்கும் சென்று, எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்கத் தேவையில்லை. இருக்கும் இடத்தில் நற்செய்தி அறிவித்தாலே போதும். அதுவே சிறந்ததாக இருக்கும். ஆகவே, தூய பிலிப்பு நெறியைப் போன்று நாமும் நற்செய்தி அறிவிப்பின்பால் ஆர்வமுள்ள பணியாளர்களாக விளங்குவோம்.

2. நாம் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை விதைப்பவர்களாக


தூய பிலிப்புநேரியார் தான் இருந்த இடத்தை எப்போதும் மகிழ்ச்சியாகும், கலகலப்பாகவும் வைத்திருப்பார். அத்தகைய வரத்தை இறைவனிடமிருந்து அவர் பெற்றிருந்தார். அவரைப் போன்று நாம் வாழும் இடத்தில், குழுமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர்களாக நாம் இருக்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவா 15:11). ஆம், நாம் அனைவரும் மகிழ்ந்திருக்கவேண்டும் என்பதுதான் இறைவனின் திருவுளமாக இருக்கின்றது. எப்போதும் நாம் துக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது அல்ல இறைவனின் விரும்பம். ஆகவே, நாம் முதலில் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா?, நாம் வாழும் சமுதாயத்தில் நம்முடைய அன்பான வார்த்தைகளால் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வூரில் இருந்த ஆலமரத்தின் அடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய பேச்சு ‘ஊரில் யாராரெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பது தொடர்பாக வந்தது. அப்போது ஓர் இளைஞன் “நம்மூரில் இருக்கும் ஜமின்தார்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்று எனக்குத் தெரிகிறது” என்றான். அதற்கு இன்னொரு இளைஞன் அவனை இடைமறித்து, “இல்லை இல்லை, அவருக்கு பணம் எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு அவருக்குப் பிரச்சனை இருக்கின்றது” என்றான். அதன்பிறகு இன்னும் ஒருசிலரை அவர்கள் சொல்லிப்பார்த்தார்கள். அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் கவலைப்பட்டு வாழ்வதால் அவர்களை விட்டுவிட்டார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு விவசாயி வந்தார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தெரிந்தது. உடனே இளைஞர்கள் அவரிடம், “உங்களால் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறதே, அது எப்படி என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் சம்பாதிப்பதில் மனநிறைவு கொள்கிறேன். தேவைக்கு மேல் ஆசைபட்டது கிடையாது. என்னால் இயன்ற அளவு ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது எப்போதும் மகிழ்ச்சிதான். அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய பிலிப்பு நேரியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் அவரைப் ஒன்று ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளராவோம், நாம் வாழும் இடத்தில் நம்முடைய சொல்லால், செயலால் மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

No comments:

Post a Comment