† இன்றைய புனிதர் †
(மே 25)
✠ புனிதர் ஏழாம் கிரெகோரி ✠
(St. Gregory VII)
157ம் திருத்தந்தை:
(157th Pope)
பிறப்பு: கி.பி. 1015
சொவானா, டுஸ்கனி, தூய ரோமப் பேரரசு
(Sovana, Tuscany, Holy Roman Empire)
இறப்பு: மே 25, 1085
சலேர்னோ, அபுலியா
(Salerno, Duchy of Apulia)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திப்பேறு பட்டம்: கி.பி. 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி
(Pope Gregory XIII)
புனிதர் பட்டம்: மே 24, 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)
நினைவுத் திருவிழா: மே 25
"ஹில்டப்ராண்ட்" (Hildebrand of Sovana) எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை ஏழாம் கிரகோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் 157ம் திருத்தந்தையாக 1073ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 2ம் நாள்முதல் 1085ம் ஆண்டு, தனது மரணம் வரை ஆட்சி புரிந்தவராவார்.
தற்போதைய "மத்திய இத்தாலியின்" (Central Italy), "தென் டுஸ்கனி" (Southern Tuscany) பிராந்தியமான – அன்றைய தூய ரோமப் பேரரசின் “சொவானா” எனுமிடத்தில் பிறந்த ஹில்டப்ராண்ட், கொல்லர் (Blacksmith) ஒருவரின் மகனாவார். சிறு வயதில், ரோம் நகரிலுள்ள புனித மரியாளின் மடாலயத்தில் (Monastery of St. Mary) கல்வி கற்க அனுப்பப்பட்டார். அங்கே, “அவன்டைன் மலை” (Aventine Hill) மேலுள்ள மடாலயமொன்றில் இவரது மாமன் ஒருவர் மடாதிபதியாக இருந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தூய ரோமப் பேரரசர் நான்காம் ஹென்றி (Holy Roman Emperor Henry IV) மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றி'யை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து இருமுறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்ட்'டை, எதிர்-திருத்தந்தையாக (Antipope Clement III) ஹென்றி நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.
திருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.
திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு, திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி (Pope Gregory XIII), 1584ம் ஆண்டில், முக்திபேறு பட்டமும், 1728ம் ஆண்டில், திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (Pope Benedict XIII) புனிதர் பட்டமும் அளித்தனர்.
No comments:
Post a Comment