இன்றைய புனிதர் :
(02-06-2020)
தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் (ஜூன் 02)
“பிலிப்பு நத்தனியேலைப் போய் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிபிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சார்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார் (யோவான் 1:45)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் நினைவுகூருகின்ற மார்செலினஸ் மற்றும் பீட்டர் இவரும் சமகாலத்தவர். மார்செலினசோ குருவானவர். பீட்டரோ தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.
ஒரு சமயம் தீய பிடித்திருந்த அர்தேமிஸ் என்ற சிறை அதிகாரியின் மகளிடமிருந்து பீட்டர் தீய ஆவியை விரட்டி அடித்ததால் அர்தேமிஸ் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவருடைய குடும்பம் முழுவதும் கிறிஸ்தவ மறையைப் பின்பற்றத் செய்தார்.. இப்படி கிறிஸ்தவ மறையைத் தழுவிய அர்தேமிஸ் குடும்பத்தாருக்கு மார்செலினஸ்தான் திருமுழுக்குக் கொடுத்தார்.
இச்செய்தி அப்போது உரோமை அரசனாக இருந்த டயோக்ளசியனின் காதுகளை எட்டியது. உடனே அவன் வெகுண்டெழுந்து மார்செலினசையும் பீட்டரையும் கைது செய்து சிறையில் அடைத்தான். சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட இருவரும் சும்மா இருக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கிருந்த சிறைக் கைதிகளுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை துணிச்சலோடு அறிவிக்கத் தொடங்கினார்கள். இதனால் பலரும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள். இது மன்னனுக்கு கடுமையான சினத்தை உண்டு பண்ணியது. இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்ததற்காக இவர்களைச் சிறையில் அடைத்தால் இவர்களோ அங்கேயும் சென்று நற்செய்தி அறிவிக்கின்றார்களா என்று அவர்கள் இருவரையும் இரவோடு இரவாகப் பிடித்து ஓர் அடர்ந்த காட்டிற்கு இழுத்துச் சென்றான்.
அங்கே அவர்கள் இருவரையும் அவர்களுக்கான கல்லறையை தோண்டச் செய்தான். கொடுங்கோலன் டயோக்ளசியன். அவர்கள் இருவரும் தங்களுக்கான கல்லறைக் குழியைத் தோண்டியபிறகு, மன்னன் அவர்கள் இவருடைய தலையையும் வெட்டி, அந்த கல்லறைக் குழிகளில் அவர்களைக் கிடத்தினான். இவ்வாறு அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து தங்களுடைய இன்னுயிரை அவருக்காகத் துறந்தார்கள்.
மார்செலினஸ், பீட்டர் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி திருத்தந்தை டாமாசுசுக்குத் தெரியவந்தது. அவர் அவர்களுடைய கல்லறைக்குச் சென்று உரிய மரியாதை செலுத்தினார். இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கொன்ஸ்டாண்டிநோபில் என்ற உரோமை மன்னன் அவர்களுடைய கல்லறையில் ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினான்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்!
தூய மார்செலினஸ் மற்றும் பீட்டர் ஆகிய இருவரது வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர்கள் நற்செய்தி அறிவிப்பின்மீது கொண்டிருந்த ஆர்வம்தான் நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது. இவர்கள் இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாம், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்ற ஆர்வத்தை நாம் கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாகத் தன் சீடர்களைப் பார்த்துச் சொல்வார், “நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று. (மாற் 16: 15). ஆம், நற்செய்தி அறிவிப்பது அதுவும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிப்பது என்பது ஆண்டவர் இயேசு நம்முன்னே வைக்கின்ற வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றுவதுதான் சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கின்றது. நாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவித்து, சீடத்துவ வாழ்விற்கு அர்த்தம் சேக்ர்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய பவுலடியார் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே உள்வாங்கியவராய், “நான் நற்செய்தி அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. நற்செய்தி அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1 கொரி 9:16) என்கின்றார். ஆகவே, பவுலடியாரின் வார்த்தைகளை வைத்துப் பார்க்கின்றபோது நற்செய்தி அறிவிப்பானது எவ்வளவு முக்கியம், அது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
ஆகவே, தூய மார்செலினஸ் மற்றும் பீட்டரின் நினைவுநாளைக் கொண்டாடும் அவர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம் கொண்டு வாழ்வோம். தேவைப்பட்டால் நம்முடைய உயிரையும் தர முன்வருவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)
மறைசாட்சிகள்
பிறப்பு
--
இறப்பு
--
மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார். இருவரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட்டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பினர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.
இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது. உடனே இவர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலைஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண்டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர். இவர் கல்லறைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல்லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.
"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.
செபம்:
விசுவாசத்தின் நாயகனே எம் இறைவா! உமது இறை விசுவாசத்தை இவ்வுலகில் நிலைநாட்ட புனித மார்சலினஸ்சும், புனித பீட்டரும் தங்கள் உயிரையே இழந்தனர். இவர்களைப் போல இறக்கின்ற ஒவ்வொருவரையும், உமது வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
துறவி யோஹானஸ் பெலிங்கோட்டோ Johannes Pelingotto
பிறப்பு: 1240 உர்பினோ Urbino, இத்தாலி
இறப்பு: 1304, உர்பினோ, இத்தாலி
மறைசாட்சி மார்செலினூஸ் மற்றும் பேதுரு Marcellinus, Petrus
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, உரோம்
இறப்பு: 299, உரோம்
காண்டர்பரி பேராயர் ஓடோ Odo
பிறப்பு: 880 டென்மார்க்
இறப்பு: 2 ஜூன் 959, காண்டர்பரி, இங்கிலாந்து
† இன்றைய புனிதர் †
(ஜூன் 2)
✠ புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ✠
(Saints Marcellinus and Peter)
மறைசாட்சியர்:
(Martyrs)
பிறப்பு: தெரியவில்லை
இறப்பு: கி.பி. 304
ரோம் (Rome)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: ஜூன் 2
புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் இருவரும் நான்காம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்து, மறைசாட்சிகளாக மரித்த கிறிஸ்தவ புனிதர்கள் ஆவர்.
இவர்களைப்பற்றிய தகவல்கள் சிறிதளவே கிடைக்கப்பெற்றுள்ளன. மர்செல்லினஸ் ஒரு மத குரு (Priest) ஆவார். பீட்டர் ஒரு பேய் ஓட்டுபவர் (Exorcist) ஆவார். இருவரும் "டயோக்லேஷியன்" (Diocletian) எனும் ரோம பேரரசனின் ஆட்சி காலத்தில் நேர்ந்த கிறிஸ்தவ துன்புறுத்தல்களில் மரித்தவர்கள் ஆவர்.
திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) அவர்களால் வெளிப்படையாக எழுதப்பட்ட மரண சாசனம் ஒன்றில் புனிதர்கள் மர்செல்லினஸ் மற்றும் பீட்டர் ஆகியோர் துன்புறுத்தப்பட்ட விதம் மற்றும் அவர்களது மரணம் பற்றின விபரங்கள் காணக்கிடைக்கின்றன.
இவர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி "செவெரஸ் அல்லது செரேனஸ்" (Severus or Serenus) என்பவர், இப்புனிதர்கள் கொல்லப்படவேண்டிய இடத்தை தேர்வு செய்ய அவர்களையே சொன்னதாகவும், ரோம் நகரின் வெளியே மூன்று மைல் தொலைவில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அங்கேயே இவர்களிருவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இவர்களை கொலை செய்த இருவர் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இவற்றை திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், தெய்வீக வெளிப்பாடுகளால் தூண்டப்பட்ட "லூஸில்லா” (Lucilla) மற்றும் “ஃபிர்மினா" (Firmina) ஆகிய இரண்டு கிறிஸ்தவ பெண்கள் இப்புனிதர்களின் உடலை கண்டெடுத்து முறையாக அடக்கம் செய்ததாக குறிப்புள்ளது.
இப்புனிதர்களின் நினைவுத் திருநாள் ஜூன் மாதம் இரண்டாம் நாள் நினைவு கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment