புனித காடிலியீவ் (1052-1070)
ஜூலை 30
இவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே இவர் கடவுள்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்தார். இதனால் இவர் 'தான் வளர்ந்து பெரியவளாகும்போது, ஒரு கன்னியாக வாழவேண்டும்' என்று மனஉறுதி கொண்டார்.
இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவர் அழகிற் சிறந்தவராய் இருந்ததால், இவரை மணமுடிக்கப் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். இவ்வாறு வந்த எல்லாரும் தோல்வி முகத்தோடு திரும்பினர்.
இந்நிலையில் பெர்தோல்ட் என்பவன், இவருடைய தந்தையைத் தன்னுடைய வழிக்குக் கொண்டுவந்து, இவரை ஒருவழியாக மணமுடித்தான்.
திருமணத்திற்குப் பிறகும்கூட இவர் தன்னுடைய முடிவில் மிக உறுதியாக இருந்ததால், இவரை மணமுடித்த பெர்தோல்ட் என்பவன் இவருக்கு வெறும் ரொட்டியும் தண்ணீரையும் மட்டுமே கொடுத்து, இவரை ஓர் அறையில் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தினான்.
இவரோ தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ரொட்டியைக்கூட தானிருந்த அறைக்கு பக்கத்தில் இருந்த ஏழைகளுக்குக் கொடுத்து உதவினார்.
இச்செய்தியை அறிந்த இவருடைய கணவன் இவரைத் தன்னுடைய இரண்டு பணியாளர்களை வைத்து தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொன்றுபோட்டான். இவர் இறக்கும்போது இவருக்கு வயது வெறும் 18 தான்.
தொண்டையில் பிரச்சனை உள்ளோரும், நல்ல வரன் அமையவேண்டும் என்று விரும்புவோரும் இவரிடம் வேண்டிக் கொண்டால், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது.
No comments:
Post a Comment