புனித ஹியாசிந்த் (1185-1257)
(செப்டம்பர் 09)
இவர் போலந்து நாட்டைச் சார்ந்த ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.
தனது பள்ளிக் கல்வியை கிராகோ (Krakowk) என்ற இடத்தில் இருந்த தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த இவர், 1220 ஆம் ஆண்டு உரோமை நகருக்குச் சென்றார். அப்பொழுதுதான் இவர் புனித தோமினிக்கைச் சந்தித்தார். அவர் இவரைத் தனது சபையில் சேர்த்துக்கொண்டு, இவரைத் தன் சொந்த நாட்டிற்கே அனுப்பி வைத்து, நற்செய்தி அறிவிக்கச் செய்தார்.
இதன்பிறகு இவர் போலந்து நாட்டிற்கு வந்து நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். நற்செய்தி அறிவிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், போலந்து, ஆஸ்திரியா,இரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, பலரையும் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.
நற்கருணை ஆண்டவரிடமும் புனித கன்னி மரியாவிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்த இவர், இருவருடைய துணையால் பல ஆபத்துகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டார்.
இப்படி ஆர்வத்தோடு நற்செய்திப் பணி செய்த இவர், மூப்பெய்தியதும், எந்த இடத்தில் தனது பணியைத் தொடங்கினாரோ, அந்த இடத்திற்கே வந்து, தன் இறுதி நாள்களை இறைவேண்டலில் செலவழித்து, தனது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். இவருக்கு 1594 ஆம் ஆண்டு திருத்தந்தை எட்டாம் கிளமெண்டால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
இவரது விழா ஆகஸ்ட் 17 அன்றும் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment