புனித_நோட்பர்கா (1265-1313)
அக்டோபர் 31
இவர் (#Notburga) ஜெர்மனியில் உள்ள ரோட்டன்பர்க்கைச் சார்ந்தவர்.
ரோட்டன்பர்க்கில் இருந்த ஹென்றி என்ற பிரபுவிடம் சமையல்காரராய்ப் பணிசெய்து வந்த இவர், அங்கு எஞ்சிய உணவை வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து வந்தார்.
இதை அறிந்த ஹென்றியின் மனைவியான ஒடிலியா இவரிடம் அவ்வாறு செய்யக் கூடாது என்று கட்டளையிட, இவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நோன்பிருந்து, அப்பொழுது கிடைக்கிற உணவை ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
அதுவும் ஒடிலியாவிற்குத் தெரியவர, அவர் இவரை வேலையிலிருந்து நீக்கினார். இதற்குப் பிறகு இவர் எபின் என்ற இடத்தில் இருந்த ஒரு விவசாயிடம், 'வாரத்தில் ஆறு நாள்கள் வேலை செய்வேன்; ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குச் செல்வேன். அந்நாளில் எனக்கு எந்தவொரு வேலையும் கொடுக்கக்கூடாது' என்ற நிபந்தனையோடு வேலை செய்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் விவசாயி இவரிடம் ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது, அதெல்லாம் முடியாது என்று இவர் வேலையிலிருந்து விலகிக் கொண்டார்.
இதற்கிடையில் ஹென்றியின் மனைவியான ஒடிலியா இறந்துவிட, இவர் அவரிடம் வேலைக்குச் சேர்ந்து, அங்கு கிடைத்த உணவை வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
இவர் தன்னுடைய இறப்பு நெருங்கி வருவதை உணர்ந்து, ஹென்றியிடம், "என்னுடைய உடலை ஒரு மாட்டு வண்டியில் வைத்து விடுங்கள். வண்டி எங்கே நிற்கிறதோ அங்கே என்னை அடக்கம் செய்து விடுங்கள்" என்று சொன்னார். அதன்படியே ஹென்றி செய்ய, மாட்டு வண்டி, எபின் என்ற இடத்தில் இருந்த புனித ரூபர்ட் திருக்கோயிலுக்கு முன்பாக நின்றது. அங்கு இவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இவருக்கு 1862 ஆம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment