புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 May 2013

செவ்வாய்



முதல் வாசகம்

 ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில் பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: ``நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்.

நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன்.

ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 68: 9-10. 19-20 (பல்லவி: 32ய)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11ய

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்.

உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நீர் என்னிடம் ஓப்படைத்தவர்களுக்காகவே மன்றாடுகின்றேன்.

ஓப்படைக்கப்பட்டவர்களுக்காவும் மன்றாட கற்றுக் கொடுக்கின்றார்.

அவர்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், ஓப்படைக்கப்பட்டவர்களை நினைத்து, அவர்களின் நலன்களுக்காய் மன்றாட நமக்கு கடமையுண்டு என்பதனை உணர்த்துகின்றார்.

13 May 2013

பாஸ்கா - 7ஆம் வாரம்

திங்கள்

 முதல் வாசகம்

 நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே'' என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?'' எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.

பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 68: 1-2. 3-4யஉ. 5-6யb (பல்லவி: 32ய)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், ``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்'' என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள்.

ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



10 May 2013

ஆண்டவரின் விண்ணேற்றம்
மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்
 எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.
இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், ``நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, ``கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்'' என்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகமும் நற்செய்தி வாசகமும் 3 ஆண்டு கால சூழற்சி முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொண்டாடப்படும் ஆண்டிற்கு ஏற்ப, அவற்றைத் தேர்ந்துகொள்க.

இரண்டாம் வாசகம்
 கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28; 10: 19-23
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.
அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.
பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார். சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19.20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
 இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், ``மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், `பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்'' என்றார்.
பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

சனி


முதல் வாசகம்

`இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7ய)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 16: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்.

அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

வெள்ளி


முதல் வாசகம்

 இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

 பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.

கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7ய)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 46 அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23ய

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.

இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

09 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

வியாழன் (நம் நாட்டில் நடப்பது போல்) ஆண்டவரின் விண்ணேற்ற விழா பாஸ்கா 7ஆம் ஞாயிறுக்குத் தள்ளிவைக்கப்பெற்றுள்ள இடங்களில், பின்வரும் வாசகங்களை இன்று பயன்படுத்தவும்.

முதல் வாசகம்

 கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், ``யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.

ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; `இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.

அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, ``உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்'' என்று கூறினார்; அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3யb. 3உன,4 (பல்லவி: 2b)

பல்லவி: பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 18, 16: 22b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்படும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக 633ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.



நற்செய்தி வாசகம்

 நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம்: ``இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார்.

அப்போது அவருடைய சீடருள் சிலர், `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்றும் `நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

``இந்தச் `சிறிது காலம்' என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே'' என்றும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

07 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

புதன்

முதல் வாசகம்

 நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15,22 - 18: 1

அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: ``ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.

நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது `அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.

உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, `நாம் அவருடைய பிள்ளைகளே.' நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்.

இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.'' `இறந்தவர் உயிர்த்தெழுதல்' என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், ``இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்'' என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-12. 13. 14

பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. அல்லது: அல்லேலூயா.

1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, 12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. பல்லவி

14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

06 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

செவ்வாய்

முதல் வாசகம்

 ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34 அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.

சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ``நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்'' என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.

அவர்களை வெளியே அழைத்து வந்து, ``பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்'' என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார்.

பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2ய. 2bஉ-3. 7உ-8 (பல்லவி: 7உ)

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

7உ உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் `நீர் எங்கே போகிறீர்?' என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.

நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.

பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

திங்கள்

முதல் வாசகம்

 பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15

பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம்.

ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.

அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், ``நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6ய,9b (பல்லவி: 4ய)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையில் உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b. 27ய

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26 - 16:4

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

02 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்
ஞாயிறு
மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29

            அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், ``நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது'' என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.

            அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

            பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர்.

            அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.

பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

            அக்கடிதத்தில், ``திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.        
            இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


இரண்டாம் வாசகம்

திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23

            தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
            அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29

            அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை.
            நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

            அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். `நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


2013 May 5 SUN: SIXTH SUNDAY OF EASTER

Acts 15: 1-2. 22-29/ Ps 67: 2-3. 5. 6. 8 (4)/ Rv 21: 10-14. 22-23/ Jn 14: 23-29

            பொன்னோ, பொருளோ, சொத்தோ, சுகமோ நம்மனம் தேடும் நிம்மதியை தர இயலாது. எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என உலகம் எங்கி கேட்கும் நிம்மதியை இறைமகனே தர முடியும். அவர் தரும் ஆவியே அத்தகைய நிலையான அமைதியை தரமுடியும். ஷாலோம் என்னும் எபிரேயச் சொல் உடல்நலம், மனநலம், உயிர்நலம், ஆன்மநலம், சமூகநலம் என எல்லா நலன்களையும் தந்து வாழ்த்துவதாகும். இதனையே பலியிலே ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக எனச் சொல்லி வாழ்த்தப்படுகின்றோம். உண்மை அமைதி நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிலைக்க தூய ஆவியின் துணையை நாடுவோம்.

முன்னுரை

பாஸ்கா கால 6ம் ஞாயிறுக்கு வந்துள்ளோம்.

            அமைதியை தேடும் இந்த உலகிலே, மனிதர்கள் தேடும் அற்ப அமைதிகூட அவர்களால் பெற முடிவதில்லை. பணம், பதவி, புகழ், பெருமை, களியாட்டங்கள் என எதுவுமே அவர்களுக்கு நிலையான நிறைவான அமைதியை தருவதில்லை. அற்ப நேர சுகம் கூட கிடைப்பதில்லை. மாறாக அவை சுமையாகி, பிரிவினை, பிளவுகள், சண்டை சச்சரவுகள் என்றே அமைந்து விடுகிறது.

            இத்தகைய நிலையில் அமைதியை விரும்பும் மாந்தர்கள், ஆவியின் துணையாலேயே பெற முடியும் என்பதனை உணர்ந்து ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆவியானவரின் பெருவிழாவுக்கு இந்த வாரத்திலே நவநாள் தொடங்க உள்ளோம். நிறைவாய் பெற அருள்வேண்டி மன்றாடுவோம்.

மன்றாட்டு:

            திருஅவையின் தலைவர்களை ஆசீர்வதித்து, ஆவியின் அருள்தந்து, அவர்களை வழிநடத்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            விடுமுறையில் வாழும் அன்பர்கள் நல்ல ஓய்விலே தங்களது காலத்தை பயனுள்ள விதத்தில் காலத்தை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            விடுமுறை வேதாகப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை உம்வார்த்தையால் வளப்படுத்தி, நல்ல நிலத்தில் தூவப்பட்ட விதையைப் போல வார்த்தை அவர்களது உள்ளத்தில் மிகுந்த பலன் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            ஆவியின் அருள் பெற்று, நாங்கள் சாட்சிகளாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            ஆவியின் கனிகளையும், வரங்களையும் பெற்ற நாங்கள், அவற்றை முறையாக பொதுநலன்களுக்காய் செலவழிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாஸ்கா - 5ஆம் வாரம்


சனி


முதல் வாசகம்

மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10

அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட ஒரு யூதப் பெண். தந்தையோ கிரேக்கர். திமொத்தேயு லிஸ்திராவிலும், இக்கோனியாவிலும் உள்ள சகோதரர் சகோதரிகளிடையே நற்சான்று பெற்றவர். பவுல் அவரைத் தம்முடன் கூட்டிச் செல்ல விரும்பினார். அவ்விடங்களிலுள்ள யூதரின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார். ஏனெனில் அனைவரும் அவருடைய தந்தை கிரேக்கர் என்று அறிந்திருந்தனர்.

அவர்கள் நகர் நகராகச் சென்றபோது எருசலேமிலுள்ள மூப்பரும் திருத்தூதரும் செய்த தீர்மானங்களை அவர்களிடம் கொடுத்துக் கடைப் பிடிக்குமாறு கூறினார். இவ்வாறு திருச்சபைகள் நம்பிக்கையில் உறுதி பெற்று நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவந்தன.

பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர். அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை. எனவே அவர்கள் மீசியா வழியாகச் சென்று துரோவா நகரை அடைந்தனர்.

பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, ``நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்'' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! அல்லது: அல்லேலூயா.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி 5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும்.

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது. பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.

என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மே 3


புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா


முதல் வாசகம்

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்.

பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4ய)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

அல்லது: அல்லேலூயா.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6b,9உ

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

அக்காலத்தில் இயேசு, தோமாவை நோக்கி: ``வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்'' என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.

அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்.

நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார்.

ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 5ஆம் வாரம்


வியாழன்


முதல் வாசகம்

என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21

அந்நாள்களில் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து, திருத்தூதர்களையும் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக் கேட்டு அதில் நம்பிக்கை கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்தது போல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார். நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை.

ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்? ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.''

இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள். இறைவாக்கினரின் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்: `இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்; அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்து அதைச் சீர்படுத்துவேன். அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.'

தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார். எனவே என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்; அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2ய. 2b-3. 10 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். பல்லவி

2b அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

என் அன்பில் நிலைத்திருங்கள். உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

01 May 2013

மே 01 தொழிலாளர் புனித யோசேப்பு

தொழிலாளர் புனித யோசேப்பு

இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26 - 2: 3

            கடவுள், ``மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்'' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்'' என்றார்.

            அப்பொழுது கடவுள், ``மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

            விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

            கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-15,17,23-24

            சகோதரர் சகோதரிகளே, அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

            எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

            நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 
பதிலுரைப் பாடல்

திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17உ)

பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! அல்லது: அல்லேலூயா.
2 மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி 3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 68: 19

            அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

            அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

            அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

            இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை
தொழிலாளரான தூய வளனார், தொழிலாளர்களுக்கு பாதுகாவலர்.
இவர் தச்சனின் மகன் தானே என்பதன் மூலம், வளனார் தச்சுத் தொழில் செய்தார் என்பதனை அறிய முடிகிறது.
கடவுள் அமைத்த நியதி, மனிதன் நெற்றி வேர்வை நிலத்திலே சிந்த, பாடுபட்டு உழைத்திட வேண்டும் என்பது.
இதற்கு திருக்குடும்பம் விதிவிலக்கல்ல, என்பதனை அறிந்திட முடிகிறது.
உழைப்பு உன்னதமானது. உழைப்பு உயர்வ தரக்கூடியது. உழைப்பு நம்மை ஆரோக்கியமாக்கவல்லது.
உழைப்பிலே உண்மையாய் இருப்பது காலத்தின் கட்டாயம்.
உழைப்பிலே உயர்வு தாழ்வின்றி, பாரபட்சம் இல்லாது பார்த்துக் கொள்வதும் காலத்தின் கட்டாயமே.
உழைப்பிலே நம்மை அர்ப்பணிப்போம். சமூகம் உயர்வு காணச் செய்வோம்.

மே 01 தொழிலாளர் புனித யோசேப்பு