புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 May 2013

7ஆம் வாரம்

திங்கள்



முதல் ஆண்டு

 முதல் வாசகம்

 ஞானமே எல்லாவற்றுக்கும் முன்னர் உண்டாக்கப்பட்டது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-10

ஞானமெல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது. கடல் மணலையோ மழைத் துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?

எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள். ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?

ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்கு உரியவர். அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளை எல்லாம் அதனால் நிரப்பியவர்.

தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



 பதிலுரைப் பாடல்

திபா 93: 1யb. 1உ-2. 5 (பல்லவி: 1ய)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1யb ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பல்லவி

1உ பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29

அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.

அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை'' என்று கூறினார்.

அதற்கு அவர் அவர்களிடம், ``நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்.

அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.

அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ``இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ``குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்'' என்றார்.

இயேசு அவரை நோக்கி, ``இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'' என்றார்.

உடனே அச்சிறுவனின் தந்தை, ``நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று கதறினார்.

அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ``ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே'' என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ``அவன் இறந்துவிட்டான்'' என்றனர்.

இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.

அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டனர்.

அதற்கு அவர், ``இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

தன்னுடைய ஈகைக்கு ஏற்ப ஞானியான கடவுள் நமக்கு அதிலே பங்கு கொடுத்துள்ளார். தன்னை அன்பு செய்வோருக்கு வாரி வாரி வழங்கியுள்ளார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதனை நாம் தான் உணர்ந்து சான்று பகர வேண்டும்.

இந்த ஞானம் இன்று எதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

வளர்ச்சிக்கா? வீழ்ச்சிக்கா?

சுயநலத்துக்கா? பொதுநலத்துக்கா?

சாட்சியத்திற்காகவா? எதிர்சாட்சியத்திற்காகவா?

சிறு மந்தை நாமானாலும் நம்முடைய ஞானத்தினால்,  பிரபஞ்சத்தை நம்மால் பரட்டிப் போட முடியும்.

இன்றைக்கு அது சாத்தியமில்லாமல் போவதற்கு காரணம் ஞானம் இல்லாத நிலையில்லை, மாறாக சரியான விதத்தில் பயன்படுத்தாத நிலையே. உணர்வோம்.

17 May 2013

தூய ஆவி ஞாயிறு

பெருவிழாத் திருப்பலி
மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

 தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
எல்லாரும் மலைத்துப்போய், ``இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?'' என வியந்தனர்.
``பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!'' என்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 104: 1யb,24யஉ. 29bஉ-30. 31,34 (பல்லவி: 30)
பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். அல்லது: அல்லேலூயா.

1யb என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24யஉ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29bஉ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 8-17

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.
மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்.
மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், ``அப்பா, தந்தையே'' என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெறவேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர், வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர், நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

 தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.
நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



ஓரே இடத்தில், ஓரே மனதாய், இயேசுவின் நினைவில் ஒன்று கூடியிருந்த சீடர்கள் பெந்தகோஸ்து என்னும் 50வது நாளில் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டனர். திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் வழியாக உண்மை உணாத்தும் ஆவியின் கொடைகளாலும், வரங்களினாலும் நாமும் நிரப்பப்பட்டுள்ளோம். ஆவிக்குரிய வாழ்வு வாழ உறுதியெடுப்போம்.

முன்னுரை

அன்புள்ளோரே,
தூய ஆவியின் பெருவிழாவை கொண்டாடிட அழைக்கப்பட்டுள்ளோம்.
அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.
மூவொரு இறைவனில் மூன்றாம் ஆளாக இருப்பவர் தூயஆவியார்.
விவிலியத்தில் இவர் பேசியதாக இல்லை. மௌனமாக வீசும் தென்றலைப் போல் உள்ளார் என விவரிக்கப்பட்டுள்ளது.
எல்லா செயல்பாட்டிற்கும் கிரியா ஊக்கியாக இருக்கிறார் என விவரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கால திருச்சபையில் அனைவரையும் நிரப்பிய இவர், இன்று திருவருட்சாதனங்களின் வழியாக நம்மையும் நிரப்பி வருகின்றார்.
நம்மை இயக்கச் செய்யும் ஆவியாரிடம் நம்மை ஓப்படைப்போம்.
நேரிய வழியில் நம்மை வழிநடத்திடுவார்.

மன்றாட்டு

திருஅவையை வழிநடத்தும் அன்பர்களை உம்ஆவியின் அனலால் நிரப்பி, சமூகத்திலே இயக்குகின்ற சக்தியாக திகழ்ந்து, நெரியவழியில் நடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சமூகப் பொறுப்பாளர்களை உம்ஆவியானவர் தன் நெருப்பினால் சுட்டெரித்து, வாய்மைக்கு மதிப்பளித்து வாழும் மாந்தர்களாக செயல்பட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பலியிலே பங்குகொள்ளும் எம்மை உம்ஆவியானவர் சுத்திகரித்து, நாங்கள் புவியிலே அவரது வரங்கள், கனிகள் பெற்று, சாட்சியாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆவியின் அனலால், நாங்கள் பிரிவினைகளுக்கு துணை போகாமல், ஓன்றிணைக்கும் சக்தியாக விளங்கிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உம் ஆவியின் பெருவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளோரை உம்ஆவியானவர், பூரண ஆசீரால் நிரப்பிட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

16 May 2013

பாஸ்கா - 7ஆம் வாரம்

சனி காலைத் திருப்பலி

முதல் வாசகம்

பவுல் உரோமையில் தங்கி, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 16-20. 30-31

உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். மூன்று நாள்களுக்குப் பின்பு பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார்.

அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, ``சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.

யூதர்கள் அதனை எதிர்த்துப் பேசியபோது நான், ``சீசரே என்னை விசாரிக்கவேண்டும்'' என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். ஆனால் என் இனத்தவர்க்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேசுவதற்காக அழைத்தேன். இஸ்ரயேல் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்'' என்றார்.

பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுத் துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 11: 4. 5,7. (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவரே, நேர்மையாளர் உமது திருமுகத்தைக் காண்பார்கள்.

அல்லது: அல்லேலூயா.

4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன. பல்லவி

5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார். 7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 16: 7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25



அக்காலத்தில் பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, ``ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?'' என்று கேட்டவர்.

அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ``ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?'' என்று கேட்டார். இயேசு அவரிடம், ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா'' என்றார்.

ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை.

மாறாக, ``நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?'' என்றுதான் கூறினார். இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி.

இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 7ஆம் வாரம்

வெள்ளி

முதல் வாசகம்

இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21

அந்நாள்களில் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்: ``பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும் அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து, `குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது உரோமையரின் வழக்கமல்ல' என்று கூறினேன்.

எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம் கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள் எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும் அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம் தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன. இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.

இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப் போய், ``நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட விரும்புகிறீரா?'' எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் 

திபா 103: 1-2. 11-12. 19-20 (பல்லவி: 19ய)

பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை நிறுத்தியுள்ளார். அல்லது: அல்லேலூயா.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி 11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. 12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். பல்லவி

19 ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது. 20 அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 14: 26

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19

தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார்.

இயேசு அவரிடம், ``என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்'' என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?'' என்று கேட்டார்.

அவர் இயேசுவிடம், ``ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!'' என்றார்.

இயேசு அவரிடம், ``என் ஆடுகளை மேய்'' என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ``யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?'' என்று கேட்டார்.

`உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ``ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'' என்றார்.

இயேசு அவரிடம், ``என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.

பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்.

இதைச் சொன்னபின் பேதுருவிடம், ``என்னைப் பின் தொடர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

14 May 2013

பாஸ்கா - 7ஆம் வாரம்

வியாழன்

முதல் வாசகம்

உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 30; 23: 6-11

அந்நாள்களில் யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார். எனவே மறுநாள் தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு அவர் ஆணை பிறப்பித்துப் பவுலைச் சிறையிலிருந்து கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தினார்.

அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறு பகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, ``சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்'' என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.

சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறிவந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக்கொண்டனர். அங்குப் பெருங்கூச்சல் எழுந்தது.

பரிசேயப் பிரிவினைச் சேர்ந்த மறைநூல் அறிஞருள் சிலர் எழுந்து, ``இவரிடம் தவறொன்றையும் காணோமே! வானதூதர் ஒருவரோ, ஓர் ஆவியோ இவரோடு பேசியிருக்கலாம் அல்லவா!'' என வாதாடினர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் பவுலைப் பிய்த்தெறிந்துவிடுவர் என ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரரை வரச்சொல்லி அவரை அவர்கள் நடுவிலிருந்து பிடித்துக் கோட்டைக்குள் கூட்டிக்கொண்டு செல்லுமாறு ஆணை பிறப்பித்தார். மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, ``துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றிச் சான்று பகர்ந்ததுபோல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். அல்லது: அல்லேலூயா.

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 17: 21

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 7ஆம் வாரம்

புதன்

முதல் வாசகம்

வளர்ச்சியையும் உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்ல கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 28-38

அந்நாள்களில் பவுல் எபேசு சபையின் மூப்பர்களிடம் கூறியது: ``தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்குத் தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்பும் அளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கும் உரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தர வல்லது. எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்கவேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன்.

அதோடு, பெற்றுக்கொள்வதைவிடக் கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவுகூருங்கள் என்றும் கூறினேன்.'' இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள்படியிட்டு, அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார். பின் எல்லாரும் பவுலைக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கதறி அழுதனர். `இனிமேல் நீங்கள் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று அவர் கூறியது அவர்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது. பிறகு அவர்கள் கப்பல்வரைக்கும் சென்று அவரை வழியனுப்பிவைத்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 68: 28-29. 32-34ய. 34b-35உ (பல்லவி: 32ய)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

28 கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்; என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்! 29 எருசலேமில் உமது கோவில் உள்ளது; எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர். பல்லவி

32 உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். 33 வானங்களின் மேல், தொன்மைமிகு வானங்களின் மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்; இதோ! அவர் தம் குரலில், தம் வலிமைமிகு குரலில், முழங்குகின்றார். 34ய கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள். பல்லவி

34b அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது; அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது. 35உ கடவுள் போற்றி! போற்றி! பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 17: 17b,ய

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11b-19

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்; நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.

இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.

அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும்.

உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
செவ்வாய்



முதல் வாசகம்

 ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20: 17-27

அந்நாள்களில் பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது: ``நான் ஆசியாவுக்கு வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்துகொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதர்களுடைய சூழ்ச்சிகளால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன். நன்மை பயக்கும் ஒன்றையும் உங்களுக்கு நான் அறிவிக்காமல் விட்டுவிடவில்லை; பொது இடங்களிலும் வீடு வீடாகவும் சென்று உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்.

நம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளுமாறும், மனம்மாறி கடவுளிடம் வந்து சேருமாறும் நான் யூதரிடமும் கிரேக்கரிடமும் வற்புறுத்திக் கூறினேன். இப்போதும் தூய ஆவியாருக்குக் கட்டுப்பட்டு நான் எருசலேமுக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு என்ன நேரிடும் என்பது தெரியாது. சிறை வாழ்வும், இன்னல்களும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று தூய ஆவியார் ஒவ்வொரு நகரிலும் என்னை எச்சரித்து வருகிறார். என்னைப் பொறுத்த வரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை. இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம். இதுவரை நான் உங்களிடையே வந்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றினேன்.

ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன். உங்களுள் எவரது அழிவுக்கும் நான் பொறுப்பாளியல்ல என்று இன்று நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் திட்டம் எதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் விட்டுவிடவில்லை.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 68: 9-10. 19-20 (பல்லவி: 32ய)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

9 கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். 10 உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 தந்தையே, நீர் உம் மகனை மாட்சிப்படுத்தும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-11ய

அக்காலத்தில் இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: ``தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.

நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன்.

உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



சிந்தனை

நீர் என்னிடம் ஓப்படைத்தவர்களுக்காகவே மன்றாடுகின்றேன்.

ஓப்படைக்கப்பட்டவர்களுக்காவும் மன்றாட கற்றுக் கொடுக்கின்றார்.

அவர்கள் தந்தைக்கு உரியவர்கள் என்பதால், ஓப்படைக்கப்பட்டவர்களை நினைத்து, அவர்களின் நலன்களுக்காய் மன்றாட நமக்கு கடமையுண்டு என்பதனை உணர்த்துகின்றார்.

13 May 2013

பாஸ்கா - 7ஆம் வாரம்

திங்கள்

 முதல் வாசகம்

 நீங்கள் நம்பிக்கை கொண்டபோது, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8

அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே'' என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?'' எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர்.

பவுல் அவர்கள்மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப் பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 68: 1-2. 3-4யஉ. 5-6யb (பல்லவி: 32ய)

பல்லவி: உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள். அல்லது: அல்லேலூயா.

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 2 புகை அடித்துச் செல்லப்படுவதுபோல அடித்துச் செல்லப்படுவர்; நெருப்புமுன் மெழுகு உருகுவது போல கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர். பல்லவி

3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். 4யஉ கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 1

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம், ``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்'' என்றார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள்.

ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



10 May 2013

ஆண்டவரின் விண்ணேற்றம்
மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்
 எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.
இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், ``நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ``ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, ``கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்'' என்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகமும் நற்செய்தி வாசகமும் 3 ஆண்டு கால சூழற்சி முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கொண்டாடப்படும் ஆண்டிற்கு ஏற்ப, அவற்றைத் தேர்ந்துகொள்க.

இரண்டாம் வாசகம்
 கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28; 10: 19-23
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார்.
அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்.
பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார். சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு.
ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19.20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
 இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களிடம், ``மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், `பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்'' என்றார்.
பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

சனி


முதல் வாசகம்

`இயேசுவே மெசியா' என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28

பவுல் சிறிது காலம் அந்தியோக்கியாவில் செலவிட்டபின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிகியாப் பகுதிகள் வழியாகச் சென்று சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்; மறைநூல்களில் புலமை வாய்ந்தவர். ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்; ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார். அவர் தொழுகைக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளின் நெறியைத் திட்டவட்டமாக விளக்கினர். அவர் அக்காயாவுக்குப் போக விரும்பியபோது சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தி, அவரை ஏற்றுக்கொள்ளுமாறு சீடருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் அங்கே சென்றபோது இறையருளால் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்குப் பெரிதும் துணையாய் இருந்தார். ஏனெனில் அவர் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் யூதர்களிடம் வாதாடி, `இயேசுவே மெசியா' என மறைநூல்களின்மூலம் எடுத்துக் காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 47: 1-2. 7-8. 9 (பல்லவி: 7ய)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 16: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகை விட்டுத் தந்தையிடம் செல்கிறேன். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

தந்தையே உங்கள்மீது அன்புகொண்டுள்ளார். நீங்கள் என்மீது அன்புகொண்டு, நம்பினீர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 23b-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

நான் உங்களிடம் உருவகமாகவே பேசிவந்துள்ளேன். ஆனால் காலம் வருகிறது. அப்போது உருவகங்கள் வாயிலாய்ப் பேசாமல், தந்தையைப் பற்றி வெளிப்படையாய் எடுத்துரைப்பேன். அந்நாளில் நீங்கள் என் பெயரால் வேண்டுவீர்கள்.

அப்போது `உங்களுக்காகத் தந்தையிடம் கேட்கிறேன்' என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

நீங்கள் என்மீது அன்பு கொண்டு, நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று நம்புவதால்தான் தந்தையும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார். நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

வெள்ளி


முதல் வாசகம்

 இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 9-18

 பவுல் கொரிந்து நகரில் இருந்தபோது, இரவில் ஆண்டவர் பவுலுக்குக் காட்சியில் தோன்றி, ``அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்'' என்று சொன்னார். அவர் அவர்களுக்கு ஓர் ஆண்டு ஆறு மாதம் இறைவார்த்தையைக் கற்பித்து அங்கேயே தங்கியிருந்தார்.

கல்லியோ என்பவர் அக்காயா நாட்டின் ஆட்சியாளராக இருந்தபோது யூதர்கள் ஒருமித்து, பவுலைத் தாக்கி, அவரை நடுவர் மன்றத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து, ``இவன் திருச்சட்டத்துக்கு எதிரான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களைத் தூண்டிவிடுகிறான்'' என்றார்கள். பவுல் பேச வாயெடுத்தபோது கல்லியோ அவர்களை நோக்கி, ``யூதர்களே, ஏதாவது குற்றமோ பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன். ஆனால் இது சொற்களையும் பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை'' என்று கூறி, அவர்களை நடுவர் மன்றத்திலிருந்து துரத்திவிட்டார். உடனே அவர்கள் அனைவரும் தொழுகைக்கூடத் தலைவரான சொஸ் தேனைப் பிடித்து நடுவர் மன்றத்துக்கு முன்பாக அடித்தனர். ஆனால் கல்லியோ எதையும் பொருட்படுத்தவில்லை. பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7ய)

பல்லவி: கடவுளே, அனைத்து உலகின் வேந்தர் நீரே. அல்லது: அல்லேலூயா.

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். பல்லவி

5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 24: 46 அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 20-23ய

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.

இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும். உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

09 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

வியாழன் (நம் நாட்டில் நடப்பது போல்) ஆண்டவரின் விண்ணேற்ற விழா பாஸ்கா 7ஆம் ஞாயிறுக்குத் தள்ளிவைக்கப்பெற்றுள்ள இடங்களில், பின்வரும் வாசகங்களை இன்று பயன்படுத்தவும்.

முதல் வாசகம்

 கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 1-8

அந்நாள்களில் பவுல் ஏதென்சை விட்டு கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், ``யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.

ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக் கூடத்தில் யூதரிடமும் கிரேக்கரிடமும் பேசி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்தார். சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து வந்தபோது பவுல் இறைவாக்கை அறிவிப்பதில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார்; `இயேசுவே மெசியா' என்று யூதரிடம் சான்று பகர்ந்துவந்தார்.

அவர்கள் அதனை எதிர்த்துப் பழித்துரைத்தபோது அவர் தமது மேலுடையிலிருந்த தூசியை உதறி, ``உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல. இனிமேல் நான் பிற இனத்தாரிடம் செல்கிறேன்'' என்று கூறினார்; அவ்விடத்தை விட்டுவிட்டுக் கடவுளை வழிபடும் தீத்துயுஸ்து என்னும் பெயருடைய ஒருவரின் வீட்டுக்குப் போனார். அவரது வீடு தொழுகைக்கூடத்தை அடுத்து இருந்தது. தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறியவற்றைக் கேட்டு நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3யb. 3உன,4 (பல்லவி: 2b)

பல்லவி: பிற இனத்தார் முன், ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உன உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 18, 16: 22b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்; உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்படும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக 633ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.



நற்செய்தி வாசகம்

 நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரிடம்: ``இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்'' என்றார்.

அப்போது அவருடைய சீடருள் சிலர், `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்றும் `நான் தந்தையிடம் செல்கிறேன்' என்றும் சொல்லுவதன் பொருள் என்ன?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

``இந்தச் `சிறிது காலம்' என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே'' என்றும் பேசிக்கொண்டனர்.

அவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: `` `இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

07 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

புதன்

முதல் வாசகம்

 நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15,22 - 18: 1

அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: ``ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.

நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது `அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.

உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, `நாம் அவருடைய பிள்ளைகளே.' நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார்.

இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.'' `இறந்தவர் உயிர்த்தெழுதல்' என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், ``இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்'' என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 148: 1-2. 11-12. 13. 14

பல்லவி: ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. அல்லது: அல்லேலூயா.

1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, 12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. பல்லவி

14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

06 May 2013

பாஸ்கா - 6ஆம் வாரம்

செவ்வாய்

முதல் வாசகம்

 ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34 அந்நாள்களில் பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார்.

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன.

சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, ``நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்'' என்றார். சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார்.

அவர்களை வெளியே அழைத்து வந்து, ``பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், ``ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்'' என்றார்கள். பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார்.

பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 138: 1-2ய. 2bஉ-3. 7உ-8 (பல்லவி: 7உ)

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2ய உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2bஉ உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

7உ உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8 நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 16: 7,13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் `நீர் எங்கே போகிறீர்?' என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.

நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.

பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
பாஸ்கா - 6ஆம் வாரம்

திங்கள்

முதல் வாசகம்

 பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15

பவுல், சீலா, திமொத்தேயு, லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறு நாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சில நாள்கள் தங்கியிருந்தோம்.

ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம்.

அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், ``நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்கவைத்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6ய,9b (பல்லவி: 4ய)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையில் உள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6ய அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b. 27ய

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26 - 16:4

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.

உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப் பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது.

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.