புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 March 2013

4ஆம் வாரம் - புதன்
 
முதல் வாசகம்
 மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15
ஆண்டவர் கூறியது: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்; நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன். சிறைப்பட்டோரிடம் `புறப்படுங்கள்' என்றும், இருளில் இருப்போரிடம் `வெளிப்படுங்கள்' என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்; வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.
அவர்கள் பசியடையார்; தாகமுறார்; வெப்பக் காற்றோ, வெயிலோ, அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணைகாட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்; அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்; என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.
இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்; சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள். வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களிகூரு; மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார். சீயோனோ, `ஆண்டவர் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்' என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 145: 8-9. 13உன-14. 17-18 (பல்லவி: 8ய)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 11: 25, 26
`உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,' என்கிறார் ஆண்டவர்.
 
நற்செய்தி வாசகம்
 இறந்தோரை தந்தை எழுப்பி, அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-30
அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், ``என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்'' என்றார். இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு நில்லாமல், கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறித் தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால் யூதர்கள் அவரைக் கொல்ல இன்னும் மிகுந்த முயற்சி செய்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: ``மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார். நீங்களும் வியப்புறுவீர்கள். தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார். அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். இதுபற்றி நீங்கள் வியப்புற வேண்டாம். காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.
நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
இயந்திரத் தனமான உலகில் இன்று தந்தை செய்வதையே நானும் செய்கின்றேன் என்று சொல்லுவது கோலிக்குரியதாகும். ஓவ்வொருவரும் மற்றவர்களின் காரியத்தில ;தலையீடாது தனித்தனியாக செயல்படவே விரும்புகிறார்கள். பெற்றோரும் பிள்ளைகளின் காரியத்தில் தலையிட விரும்புவதில்லை.
இது ஆரோக்கியமானதாக இருக்குமா என்று கேட்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை பள்ளியில் படிக்கும் நிலையில் உள்ளவர் பலமுறை குத்தி கொலையாளி என்ற பட்டம் பெற்று சிறைக்குப் பின்னால் நிற்கும் அவல நிலை.
பெற்றோரும் தங்களது பிள்ளைகளின் செயல்களை கண்டு கொள்ள வேண்டும். பிள்ளைகளும் தங்களது பெற்றோரின் வழி நடந்திட நல்ல மாதிரிகையை ஏற்றிட முன்வர வேண்டும்.
4ஆம் வாரம் - செவ்வாய்
 
முதல் வாசகம்
 கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-9,12
அந்நாள்களில் வானதூதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்துகொண்டிருந்தது. அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார்.
பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார். அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப் போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது. அவர் என்னிடம், `மானிடா! இதைப் பார்த்தாயா?' என்றார்.
பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார். நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன். அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 46: 1-2. 4-5. 7-8 (பல்லவி: 7)
பல்லவி: ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு அரணாயும் இருக்கின்றார்.
1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. பல்லவி
4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி
7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 51: 10,12
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்.
 
நற்செய்தி வாசகம்
 உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3, 5-16
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர். முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, ``நலம்பெற விரும்புகிறீரா?'' என்று அவரிடம் கேட்டார். ``ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்'' என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார்.
இயேசு அவரிடம், ``எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்'' என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். அன்று ஓய்வுநாள்.
யூதர்கள் குணமடைந்தவரிடம், ``ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்'' என்றார்கள்.
அவர் மறுமொழியாக, ``என்னை நலமாக்கியவரே `உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று என்னிடம் கூறினார்'' என்றார். `` `படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' என்று உம்மிடம் கூறியவர் யார்?'' என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, ``இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.
அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
தாயாம் திருச்சபையின் 266வது தலைவர் யார். தூய பேதுருவின் வாரிசு யார் என்பதனை தீர்மானிக்கும் நாள் செவ்வாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. செபிப்போம். நீர்ப்பந்தங்கள், தாக்கங்கள், முன்சார்பு எண்ணங்கள், குறுக்கீடுகள் இன்றி தூய ஆவியின் துணையோடும், திரியேக தேவனின் விருப்பத்தோடும் நடந்தேற மன்றாடுவோம்.
நேரிடையாக சென்று சந்தித்து, பல ஆண்டுகள் சுகவீனமான மனிதரை சந்திக்கின்றார். அவருடைய கருணைக்கு, அன்புக்கு எல்லையில்லை என்பதனை இது நமக்கு உணர்த்துகின்றது. கிறிஸ்துவின் அன்புக்கு எல்லையில்லை என்பதனை இது உணர்த்துகின்றது. தானே முன்வந்து சென்று விசாரித்துநேரிடையாகவே கேட்டு விடுதலையை கொடுக்கின்றார்.
இன்றைக்கு இத்தகையோருக்கு தேவை நம்முடைய நேரிடையான சந்திப்பும், விசாரிப்பும் தான்.
தவக்காலத்தில் நம்மாலான உதவிகளை செய்வோம். விடுதலையை உணர்த்துவோம்.

11 March 2013

4ஆம் வாரம் - திங்கள்
 
முதல் வாசகம்
 இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21
ஆண்டவர் கூறுவது: இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுவதும் இல்லை. நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.
நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான். அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 30: 1,3. 4-5. 10-11, 12b (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னைக் கைதூக்கிவிட்டீர்.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 5 அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 11ய நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; 12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
ஆமோ 5: 14
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
 
நற்செய்தி வாசகம்
 நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில் இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர். கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
இயேசு அவரை நோக்கி, ``அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், ``ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்'' என்றார்.
இயேசு அவரிடம், ``நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்'' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.
``எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?'' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ``நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது'' என்றார்கள்.
`உம் மகன் பிழைத்துக்கொள்வான்' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
தன்னை தச்சனின் மகன் தானே என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மக்கள், அதிசயங்களை அற்புதங்களை கண்ட பின்னர் ஏற்றுக் கொள்ள முற்பட்ட போது, அவர்களிடம் எதிர்பார்த்த நம்பிக்கையின் உறுதிப்பாட்டையும் விளக்கி விட்டு, தான் செய்ய வேண்டிய கடமையை செய்து கொடுக்கின்றார். இங்கு இவர் மனிதத்தன்மையை கடந்து, இறைதன்மையை வெளிக்காட்டுகின்றார்.
சாதாரண மனிதர்கள் போல் அல்லாது தெய்வீக மனிதனாக தன்னுடைய செயல்களின் வழி வெளிப்படுத்துகின்றார்.
நாமும் மனித நிலையில் இருந்து புனிதனாகி, எப்பொழுது இறைதன்மையை பெற்றுக் கொள்வது. நம்முடைய வாழ்விலும், மனிதர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற போதிலும், நம்முடைய கடமையை செய்ய வேண்டியது வரும் போது, கடமைக்காக மட்டுமன்றி, அன்புடனே அதனை செய்ய முற்படுகின்ற போது இறைதன்மையில் பங்கெடுக்கின்றோம் என்பதுவே உண்மை. இந்த தவக்காலம் நமக்கு உதவட்டும்.