ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
குருத்தோலைப் பவனி
நற்செய்தி வாசகம்
மூன்றாம் ஆண்டு
ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 28-40
அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களிடம், ``எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப் பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். யாராவது உங்களிடம், `ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று கேட்டால், `இது ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள்'' என்றார்.
அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், ``கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், ``இது ஆண்டவருக்குத் தேவை'' என்றார்கள். பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே சென்றார்கள்.
இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்த குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்:
``ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!'' என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, ``போதகரே, உம் சீடர்களைக் கடிந்துகொள்ளும்'' என்றனர்.
அதற்கு அவர் மறுமொழியாக, ``இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை மட்டும் வாசிக்கலாம்.
அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும் விட்டுவிடலாம்.
மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம். மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே பொருந்தும்.
முதல் வாசகம்
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 22: 7-8. 16-17ய. 18-19. 22-23 (பல்லவி: 1ய)
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8 `ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி
16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17ய என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி
18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி
22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
பிலி 2: 8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
நற்செய்தி வாசகம்
மூன்றாம் ஆண்டு
ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.
(காண்க: திருப்பலிப் புத்தகம், பக்கம் 103, எண் 22)
லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 22: 14 - 23: 56
இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தபின் நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார்.
அப்போது அவர் அவர்களை நோக்கி, ``நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், ``இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ``இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார்.
அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, ``இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு'' என்றார்.
அப்பொழுது அவர்கள், ``நம்மில் இச்செயலைச் செய்யப்போகிறவர் யார்'' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், ``பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
``சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'' என்றார்.
அதற்குப் பேதுரு, ``ஆண்டவரே, உம்மோடு சிறையிலிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்தமாய் உள்ளேன்'' என்றார்.
இயேசு அவரிடம், ``பேதுருவே, இன்றிரவு, `என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்'' என்றார்.
இயேசு சீடர்களிடம், ``நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார்.
அவர்கள், ``ஒரு குறையும் இருந்ததில்லை'' என்றார்கள்.
அவர் அவர்களிடம், ``ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன'' என்றார்.
அவர்கள், ``ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன'' என்றார்கள்.
இயேசு அவர்களிடம், ``போதும்'' என்றார். இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார்.
சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், ``சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,'' என்றார்.
பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்: ``தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறினார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.
அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களிடம், ``என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான்.
இயேசு அவனிடம், ``யூதாசே, முத்தமிட்டா மானிடமகனைக் காட்டிக்கொடுக்கப் போகிறாய்?'' என்றார்.
அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, ``ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?'' என்று கேட்டார்கள்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``விடுங்கள், போதும்'' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.
அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, ``ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது'' என்றார்.
பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார்.
அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, ``இவனும் அவனோடு இருந்தவன்'' என்றார்.
அவரோ, ``அம்மா, அவரை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், ``நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்'' என்றார்.
பேதுரு, ``இல்லையப்பா'' என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மற்றொருவர், ``உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்'' என்று வலியுறுத்திக் கூறினார்.
பேதுருவோ, ``நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது'' என்றார்.
உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்: ``இன்று சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்'' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
இயேசுவைப் பிடித்து வைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி, ``உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்'' என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடி வந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின் முன் நிறுத்தினார்கள். அவர்கள், ``நீ மெசியாதானா? எங்களிடம் சொல்'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், ``நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்லமாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்'' என்றார்.
அதற்கு அவர்கள் அனைவரும், ``அப்படியானால் நீ இறைமகனா?'' என்று கேட்டனர். அவரோ, ``நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்'' என்று அவர்களுக்குச் சொன்னார். அதற்கு அவர்கள், ``இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே'' என்றார்கள்.
திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். ``இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்'' என்று அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க, அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார். பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ``இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை'' என்று கூறினான்.
ஆனால் அவர்கள், ``இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்'' என்று வலியுறுத்திக் கூறினார்கள். இதைக் கேட்ட பிலாத்து, ``இவன் கலிலேயனா?'' என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.
ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர். பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, ``மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.
திரண்டிருந்த மக்கள் அனைவரும், ``இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்'' என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன்.
பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்'' என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ``இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ``எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!'' என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, ``தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார்.
அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.
``இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், ``நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.
ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
``தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்'' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ``இவர் உண்மையாகவே நேர்மையாளர்'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.
அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்துவிட்டு, திரும்பிப்போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
அல்லது
குறுகிய வாசகம்
லூக்கா எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 23: 1-49
மூப்பர் சங்கத்தின் முன் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர். ``இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்'' என்று அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.
பிலாத்து அவரை நோக்கி, ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்க, அவர், ``அவ்வாறு நீர் சொல்கிறீர்'' என்று பதில் கூறினார்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, ``இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை'' என்று கூறினான்.
ஆனால் அவர்கள், ``இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்'' என்று வலியுறுத்திக் கூறினார்கள்.
இதைக் கேட்ட பிலாத்து, ``இவன் கலிலேயனா?'' என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான். இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.
அவர்களை நோக்கி, ``மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. திரண்டிருந்த மக்கள் அனைவரும், ``இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்'' என்று கத்தினர்.
பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டவன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.
ஆனால் அவர்கள், ``அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்'' என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, ``இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்றான்.
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.
அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, ``எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது `மலடிகள் பேறுபெற்றோர்' என்றும் `பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, `எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, `எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!'' என்றார்.
வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரண தண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அப்போது இயேசு, ``தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை'' என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். மக்கள் இவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ``பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந் தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள்.
படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, ``நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.
``இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ``நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, ``கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், ``இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்'' என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், ``நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.
``தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்'' என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், ``இவர் உண்மையாகவே நேர்மையாளர்'' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
2013 Mar 24 SUN: PALM SUNDAY OF THE LORD'S PASSION
Procession: Lk 19: 28-40.
Mass: Is 50: 4-7/ Ps 22: 8-9. 17-18. 19-20. 23-24/Phil 2: 6-11/ Lk 22: 14 – 23: 56
இறைமகன் இயேசு அமைதியின், அடக்கத்தின், சமாதானத்தின் வேந்தனாய் எளிமையின் மொத்த உருவமாய் கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து எருசலேமில் பவனி வருகின்றார். ‘ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் வாழி’ என்று மக்கள் மகிழ்ச்சி ஆரவார வெள்ளத்தில் மூழ்கினர். கிறிஸ்து அரசர் வாழ்க என்று ஓசான்னா வெற்றி கீதம் பாடும் வெறும் கூட்டமாக நின்று விடாமல் இயேசுவின் மனநிலைகளான எளிமை, தாழ்ச்சி, இறைதிட்டத்தை ஏற்கும் பணிவு, எதையும் தாங்கும் துணிவு இவையனைத்தும் நம் உரிமைச் சொத்தாகட்டும். நம் சமூகத்தின் ஓருங்கிணைந்த முன்னேற்ற திட்டங்களுக்கு பாதையாகட்டும்.
முன்னுரை:
பாஸ்கா மறைபொருளை நிறைவேற்ற எருசலேம் நகருக்குள் கிறிஸ்த நுழைந்ததை தாயாம் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
நாற்பது நாட்களின் தவவாழ்வுக்குப்பின்னர் இந்த பவனியை மேற்கொண்டு நாமும் கிறிஸ்துவோடு புனித வாரத்திற்குள் நுழைகின்றோம்.
பவனியாக அழைத்து சென்ற மக்களே, ஓசான்னா பாடிய திருக்கூட்டமே, இவன் வேண்டாம் என்றும், ஓழிக ஓழிக என்றும், சிலுவையில் அறையும் என்றும் கத்தி கூச்சல் எழுப்புகின்றனர். கூச்சல் வெற்றி கண்டது. இன்றும் கூச்சல் வெற்றி காண்கிறது. ஆனால் நியாயத்திற்காக, அநியாயத்திற்காகவா என்பதுவே நம்முடைய கேள்வி. நியாயத்திற்கு குரல் கொடுப்பவர்கள் பொதுவாக கூச்சல் எழுப்புவது இல்லை என்பதுவும் நாம் அறிந்ததே. அப்படியென்றால் கூச்சல் நடக்கின்ற இடமெல்லாம் அநியாயம் நடக்கின்ற இடமென்று சொல்லலாமா? இந்த சிந்தனையோடு பங்கேற்று பயன் பெறுவோம்.
நாமும் இன்று ஏற்படுத்திய ஓசான்னா என்ற கீதங்கள், கூச்சல் தானா? இல்லை உணர்வுபூர்வமானதா? சிந்திப்போம்.
மன்றாட்டு:
புனித வாரத்திற்குள் பயணிக்கும் திருச்சபை துன்புறும் மக்களோடு, தங்களை ஐக்கியப்படுத்தி கொண்டு, பணிகளை அத்தகையோருக்கு துணையாக இருந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
புதிய தலைமையின் கீழ் பயணிக்கும் திருச்சபைக்கு உம் ஆவியின் துணை தந்து, காலத்திற்கு ஏற்பவும், உம்முடைய திருவளத்திற்கு பணிந்தும் தங்களது பயணத்தை இனிதே தொடர்ந்து ஆத்துமாக்களை உம்பாதத்தில் கொணர வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அநியாயத்திற்கும், அக்கிரமத்திற்கும் துணை போகாமல், அறச்சினத்துடனே, ஏழை எளிய மக்களின் ஏற்றமான வாழ்விற்கு துணை நிற்கின்ற வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பாடுகளை தியானிக்கும் நாங்கள், கடமையென கருதாமல், இன்று பல காரணங்களால் தன்புறும் மக்களோடு துணையிருந்து ஆறுதல் தந்து உடனிருப்பின் வழி உம்முடைய அன்பினை அவர்கள் உணரச் செய்ய வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.