புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

26 March 2013

புதன்





முதல் வாசகம்



நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.



இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9ய



நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார். என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.





பதிலுரைப் பாடல்



திபா 69: 7-9. 20-21. 30,32-33 (பல்லவி: 13b)



பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி



20 பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது; நான் மிகவும் வருந்துகின்றேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகத் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை. 21 அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். பல்லவி



30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். 32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்



எங்கள் அரசரே போற்றப் பெறுக; எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே. அல்லது பரம தந்தைக்குக் கீழ்ப்படிகின்ற எங்கள் அரசரே போற்றப்பெறுக; அடிக்கக் கொண்டு போகப்படும் சாந்தமான செம்மறிபோல நீர் சிலுவையில் அறையப்படக் கொண்டு செல்லப்படுகிறீர்.





நற்செய்தி வாசகம்



மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு.



+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 26: 14-25

அக்காலத்தில் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, ``இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?'' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.



புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, ``நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார்கள்.



இயேசு அவர்களிடம், ``நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், `எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப்போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்'' என்றார்.



இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.



மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், ``உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.



அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ``ஆண்டவரே, அது நானோ?'' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், ``என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்'' என்றார்.



அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் ``ரபி, நானோ?'' என அவரிடம் கேட்க, இயேசு, ``நீயே சொல்லிவிட்டாய்'' என்றார்.



இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

No comments:

Post a Comment