3ஆம் வாரம் வெள்ளி
முதல் வாசகம்
எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே' என்று இனி சொல்லமாட்டோம்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9
ஆண்டவர் கூறியது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: ``தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே!' என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்'' எனச் சொல்லுங்கள்.
அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவிசாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்துகொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 81: 5உ-7ய. 7bஉ-8. 9-10யb. 13,16 (பல்லவி:10,8ய)
பல்லவி: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
5உ நான் அறியாத மொழியைக் கேட்டேன். 6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன. 7ய துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன். பல்லவி
7bஉ இடி முழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீரூற்று அருகில் உங்களைச் சோதித்தேன். 8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்! பல்லவி
9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10யb உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்து வந்த கடவுளாகிய ஆண்டவர் நானே. பல்லவி
13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும். 16 உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 17
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். அவரிடம் அன்புகூர்வாயாக.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, ``அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்டார்.
அதற்கு இயேசு, `` `இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை'' என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ``நன்று போதகரே, `கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது'' என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ``நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை'' என்றார்.
அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
அன்பு கொச்சைப்படுத்தப்படுகின்றதோ எனத் தோன்றுகின்றது.
ஊடகங்ளின் ஆதிக்கம் இன்று அன்பை தவறான வழிகாட்டுதலில் போதிக்கிறதோ எனத் தோன்றுகின்றது.
பிரதானமாக நம்முடைய அன்பு படைத்தவர்க்கே என்பதனை தெளிவுப்படுத்துகின்றார். படைத்தவர்க்கு மேலாக எந்த உறவையும் அந்த உறவிற்கு அன்பையும் நாம் கொள்வோமானால் படைத்தவர்க்கு நாம் ஏற்புடையவர் ஆக முடியாது என்பதனை தெளிவாக இயேசு கூறுகின்றார்.
எல்லாரையும் நேசிப்பது தான் வாழ்வு. நேசிப்பு இல்லையென்றால் நாம் சுவாசித்தாலும் நடைபிணங்களே. ஆனால் நாம் சுவாசிக்கச் செய்த படைத்தவர்க்கே நம்முடைய பிரதானமான அன்பு. அதனை தொடர்ந்து தான் மண்ணுலகில் நம்மை கொணர்ந்த பெற்றோர், இன்று நாம் வாழ நம்மோடு துணையிருக்கும் பிற உறவுகளுக்கு நம்முடைய அன்பு. இதனை தெளிவுற அறிந்து கொண்டால் உறவுகளிலே அந்த உறவுகளின் அன்பிலோ எந்த குழப்பமும் ஏற்படாது.
No comments:
Post a Comment