5ஆம் வாரம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம்
இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?
பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2யb. 2உன-3. 4-5. 6 (பல்லவி: 3)
பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2யb அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி
2உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி
4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14
சகோதரர் சகோதரிகளே, உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.
திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும்.
இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.
நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவே 2: 12-13
இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ``போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ``உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்'' என்று அவர்களிடம் கூறினார்.
மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, ``அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்டார்.
அவர், ``இல்லை, ஐயா'' என்றார்.
இயேசு அவரிடம், ``நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
2013 Mar 17 SUNDAY
FIFTH SUNDAY OF LENT.
Third Scrutiny of the Elect.
Scrutiny: Ez 37: 12-14/ Ps 130: 1-2. 3-4. 5-6. 7-8/ Rom 8: 8-11/ Jn 11: 1-45. Otherwise: Is 43: 16-21/ Ps 126: 1-2. 2-3. 4-5. 6 (3)/ Phil 3: 8-14/ Jn 8: 1-11
நண்பனுக்காக உயிர் கொடுப்பது மேலான அன்பு. நண்பனுக்கு உயிர் கொடுப்பது தெய்வீக அன்பு. இயேசு தன் நண்பன் இலாசர் இறந்து விட்டார் என்ற செய்தி பெற்று கண்ணீர் விட்டார். உயிர்ப்பும் உயிரும் நானே என்று சொன்ன நம் வல்ல தேவனின் நம்பத்திறன் நமதாகட்டும். உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு எனும் நட்பிலக்கணமாக நம் அன்பு செயல் வடிவம் பெறட்டும். அது ஆயிரமாயிரம் உள்ளங்களுக்கு உயிர் தரட்டும்.
முன்னுரை:
தவக்காலத்தின் 5ம் வாரத்திற்கு வந்துள்ளோம்.
சமூகம் இன்று யாரை குற்றவாளியாக்கலாம். தண்டிக்கலாம் என்றே தவிக்கின்றது. மற்றவர்களை குற்றப்படுத்தி, அசிங்கப்படுத்துவதில் இன்பம் காணும் குறையுள்ள மனம் கொண்டவர்களை கொண்ட சமூகமாகத் தான் இருப்பதைப் பார்க்கிறோம்.
தன்னை நேர்மையாளனாகவும், மற்றவர்களை பாவிகளாகவும் பார்க்கின்ற மனநிலையை விடுத்து, நம்மிடம் உள்ள குற்றங்களை ஓப்புக் கொண்டு, இறை இரக்கத்தை பெற அருள் வேண்டி ஞாயிறு பலியிலே பங்கேற்று செபிப்போம்.
மன்றாட்டு:
புதிய செயல் ஒன்றைச் செய்வேன் என வாக்களித்த இறைவா! நீர் ஏற்படுத்தித் தந்த திருச்சபையில் புதியன செய்து, காலத்திற்கேற்ப நல்லன செய்து, பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீரோடைகள் தோன்றச் செய்வேன் என்றவரே இறைவா! பாலைவனமாகி வரும் எம் பூமியை வளம் நிறைந்த நல்ல நிலமாக மாற்றிட வான் மழை தந்து ஆசீர்வதிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஓப்பற்ற செல்வமே இறைவா! உம்மை அறிதலே உண்மையான அறிவு என்று கருதி மற்றபிற காரியங்களில் எங்களது காலத்தையும், நேரத்தையும், உழைப்பையும் வீணாக்காது வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிறரை குற்றப்படுத்தாது, அவர்களின் தவறை சுட்டிக் காட்டி, தண்டிக்க துடிக்காமல், திருந்த வாய்ப்பளித்து எல்லா ஆன்மாக்களையும் உம்பாதம் கொணர அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
யாரும் காணவில்லை, யாரும் தண்டிக்கவில்லை என்ற மிதப்பிலே குற்றத்திற்கு மேல் குற்றம் செய்யாமல், தவறு என உணர்ந்த நேரத்திலே மாற்றத்தை பெற்றுக் கொள்ள அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment