புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

05 March 2013

அருள்வாக்கு

3ஆம் வாரம் - புதன்
முதல் வாசகம்
 நீங்கள் என் கட்டளைகளை ஏற்று, பின்பற்றி நடங்கள்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 1,5-9
மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள், முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்துபோகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 147: 12-13. 15-16. 19 (பல்லவி: 12ய)
பல்லவி: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக.
12 எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13 அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பல்லவி
15 அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. 16 அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார். பல்லவி
19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதி நெறிகளையும் அறிவிக்கின்றார். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 6: 63b, 68b
ஆண்டவரே! நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.
 
நற்செய்தி வாசகம்
 கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 
சிந்தனை
கடைபிடித்தல் என்பதுவே மிகச் சிறப்பானது.
எதனையும் கற்பிக்க முன்வரும் போது, போதித்து விட்டு போவதைவிட, வாழ்ந்து காட்டிப் போதிப்பதுவே மிகச் சிறப்பானது.
இயேசுவின் வாழ்வு நல்ல மாதிரிகை. தான் எதைப் போதித்தாரோ அதனையே வாழ்ந்தும் காட்டினார்.
மன்னிப்பை பற்றி பேசினவர், சிலுவையில் அதனை நிறைவேற்றினார். எல்லாரையும் மன்னிக்க தந்தையிடம் மன்றாடினார்.
அன்பைப் பற்றி பேசியவர் சிலுவையில் வலக் கள்ளவனுக்கு மன்னிப்பு கொடுத்து இன்றே வான் வீட்டில் இருப்பாய் என்று உறுதியளித்தார்.
கடைபிடித்து போதித்ததாலேயே பலருடைய வரவேற்பையும் பெற்று, ஆண்டுகள் பலவானாலும் போதனை சாரத்தோடு பலன் கொடுத்து வருகின்றது.
 

No comments:

Post a Comment