பாஸ்கா - 3ஆம் வாரம்
புதன்
முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8
அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்.
சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார். சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.
ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 66: 1-3ய. 4-5. 6-7ய (பல்லவி: 1)
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா.
1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3ய கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். பல்லவி
4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. பல்லவி
6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7ய அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 35
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்'' என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
No comments:
Post a Comment