புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 April 2013

பாஸ்கா - 5ஆம் வாரம்

ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

முதல் வாசகம்

திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27

அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, ``நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்'' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.

அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள்.

அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 145: 8-9. 10-11. 12-13யb (பல்லவி: 1)

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன். அல்லது: அல்லேலூயா.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி



இரண்டாம் வாசகம்

கடவுள் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 1-5

யோவான் நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று. அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, ``இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன'' என்றது.

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், ``இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று கூறினார். மேலும், `` `இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! `ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

`ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-33ய, 34-35

யூதாசு இறுதி இராவுணவின் அறையை விட்டு வெளியே போனபின் இயேசு, ``இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். `ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



2013 Apr 28 SUN: FIFTH SUNDAY OF EASTER

Acts 14: 21-27/ Ps 145: 8-9. 10-11. 12-13 (see 1)/ Rv 21: 1-5a/ Jn 13: 31-33a. 34-35

அன்பு செய்யுங்கள் நான் அன்பு செய்தது போல அன்பு செய்யுங்கள் இதுவே புதிய கட்டளை. அதுவே அன்பு கட்டளை. புதிய கட்டளையை இயேசு தன் சீடர்களுக்கு கொடுத்தார். அவர் இவ்வுலகை விட்டு பிரியும் தருணத்தில் தான் உடலளவில் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அன்பு என்றும் மறையாது. ஆட்சி செய்யும் அன்புக்கு உண்டோ அடைக்கும்தாள் என்ற நம்பிக்கையோடு அன்புக்கு நான் அடிமை. அன்பே கடவுள் என்று இயேசு முன் முனைந்தார். நாம் பிறர் மீது காட்டும் அன்பு இயேசுவின் சீடர் என இவ்வுலகிற்கு நம்மை எடுத்துக் காட்டும் இயேசுவின் அன்பிற்கு சாட்சிகளாய் வாழ்ந்து உலகை மாற்றுவோம். இதை என் நினைவாக செய்யமாட்டாயா? என்று பிறர் அன்பு பணியில் இயேசுவோடு இணைய தயாராவோம். தயார்படுத்துவோம்.



முன்னுரை:

பிரியமுள்ளோரே,

பாஸ்கா காலத்தின் 5வது வாரத்திற்கு வந்துள்ளோம்.

புதிய மண்ணகமும், புதிய விண்ணகமும் உருவாக காண்பது என்பது நம்முடைய வாழ்நாளிலேயே நடைபெறக் கூடியது தான். அன்பு செய்யும் உள்ளம் பலவேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தே ஆகவேண்டியது அவசியமானது. இதுவே நடைமுறையான ஒன்று. இத்தகைய நடைமுறையை மனஉறுதிப்பாட்டோடு சந்திக்கும் போது, புதிய மண்ணகமும், புதிய விண்ணகமும் உருவாகும்.

இதுவே கடவுளின் இருப்பிடம். தன் மக்கள் நடுவே அவர் குடியிருப்பார். அங்கு அழுகை, கண்ணீர், இறப்பு என எதுவும் இருக்காது.

அத்தகைய அன்பின் அரசாட்சிக்காக பலியிலே தொடர்ந்து மன்றாடுவோம்.



மன்றாட்டு:

அன்பின் இறைவா! திருச்சபையின் தலைவர்கள் ஒருவர் ஒருவருக்கு ஊக்கமூட்டும் சக்தியாகவும், உண்மை அன்பின் சாட்சிகளாகவும் விளங்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா! நாட்டை ஆள்வோர், ஈரமுள்ள இதயத்தினராக அடித்தட்டு மக்களின் வாழ்வின் அக்கரை கொண்டவர்களாக செயல்புரிய அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா! புதிய மண்ணகத்தை உருவாக்குவதிலே நாங்கள் எங்களையே அர்ப்பணித்துக் கொண்டு, முழுஈடுபாட்டுடனே செயல்பட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா! அன்பின் அரசாட்சியை அவனியிலே கண்டிட உம் அன்பை சுவைக்கும் நாங்கள்� உம் சாட்சிகளாக வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் இறைவா! பள்ளி விடுமுறையை பெற்றுள்ள குழந்தைகள் தங்கள் காலத்தை பயனுள்ள விதத்தில் கழித்திட ஞானத்தையும், அறிவையும் தந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment