10ஆம் வாரம்
புதன்
முதல் ஆண்டு
முதல் வாசகம்
புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைக் கடவுள் எங்களுக்குத் தந்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-11
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம். நாங்களே செய்ததாக எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடம் இருந்தே வருகிறது. அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார். அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல; தூய ஆவியையே சார்ந்தது. ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு. கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி சாவை விளைவிப்பதாய் இருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது.
விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அம்மாட்சி மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளி வீசியது. அதுவே அப்படியிருந்தது என்றால் தூய ஆவி சார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாய் இருக்கும்!
தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே இத்துணை மாட்சி பொருந்தியதாய் இருந்தது என்றால் விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாய் இருக்கும்!
அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால் அது மாட்சியே அல்ல. மறையப் போவது மாட்சி உடையதாய் இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாய் இருக்கும்!
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 99: 5. 6. 7. 8. 9 (பல்லவி: 9உ)
பல்லவி: நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர்.
5 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது அரியணைமுன் தாள் பணிந்து வணங்குங்கள்; அவரே தூயவர்! பல்லவி
6 மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்; அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்; அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார். பல்லவி
7 மேகத் தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள். பல்லவி
8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்; மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்; ஆயினும்,அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர். பல்லவி
9 நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 25: 4உ,5ய
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
புதிய உடன்படிக்கையின் பணியாளராக்கினார்.
அந்த புதிய உடன்படிக்கை ஆவியின் அருளால் வழங்கப்பட்டது.
அந்த புதிய உடன்படிக்கையின் நிலையான அடையாளமாகவே கிறிஸ்து விளங்கினார். அதை நிறைவேற்றுவதில் முனைப்பும் காட்டினார்.
நிறைவான அன்பினால் தான் மனுவுவானவர், பாடுகளையும், அவமானத்தையும் ஏற்றுக் கொண்டார். அந்த அன்பினால் புதிய கட்டளை கொடுத்து, அந்த அன்பிற்கு சாட்சிகளாக்கினார், அதனுடைய பணியாளராகவும் ஆக்கினார். இதனால் தான் அவருடைய நற்செய்தியை புறஇன மக்களுக்கும் எடுத்து செல்வதில் அவர்களுக்கு சிரமம் இல்லை.
இன்றைக்கு நாமும் அதே பணியினை செய்ய பணிக்கப்பட்டு இருக்கின்றோம்.
No comments:
Post a Comment