9ஆம் வாரம்
செவ்வாய்
முதல் ஆண்டு
பார்வை இழந்ததைப் பற்றித் தோபித்து முறையிடவில்லை.தோபித்து நூலிலிருந்து வாசகம் 2: 9-14
தோபித்து கூறியது: அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை. என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண் புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண் புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.
அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள். தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள். அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, ``இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?� என்று கேட்டேன். �ஒரு வேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத் திருப்பிக்கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை� என்றேன். அதற்கு அவள் என்னிடம், �கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது� என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், �உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!� என்றாள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 112: 1-2. 7-8. 9 (பல்லவி: 7b)
பல்லவி: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி
7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. பல்லவி
9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபே 1: 17-18 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17
அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.
அவர்கள் அவரிடம் வந்து, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.
அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, ``ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்'' என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள்.
இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், ``சீசருடையவை'' என்றார்கள்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
No comments:
Post a Comment