இன்றைய புனிதர் :
(08-02-2020)
நிகழ்வு
வெனிஸ் நகரை மீட்பதற்காக இராணுவத்தில் சேர்ந்து போராடிய ஜெரோம் போரின்போது எதிரிகளால் பிடிக்கப்பட்டு கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அதுவரைக்கும் உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்த ஜெரோம் சிறையில் தனிமையாக இருந்த நேரங்களில் இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார்; தன்னுடைய மனதை ஆண்டவருக்ககாத் திறந்துவைத்தார்; அன்னை மரியாவிடம் அளவுகடந்த பக்தி கொள்ளத் தொடங்கினார்.
ஒருநாள் அவர் அன்னை மரியாவிடம் ஜெபித்துக்கொண்டிருந்தபோது அன்னை அவருக்குக் காட்சி தந்து, அற்புதமாக அவரை சிறையிலிருந்து மீட்டு வெளியே கொண்டுபோய் நிறுத்தினார். தன்னுடைய வாழ்க்கையே சிறையில் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த ஜெரோமிற்கு அன்னை மரியாவின் இவ்வுதவி பேருதவியாக அமைந்தது. அன்றிலிருந்தே அவர் இறைவனுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
வாழ்க்கை வரலாறு
ஜெரோம் எமிலியானி இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் 1481 ஆம் ஆண்டு ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் எல்லா இளைஞர்களையும் போன்று உலகப்போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது தான் வெனிஸ் நகரை எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக இராணுவத்தில் ஆட்கள் எடுக்கும் வேலை நடந்தது. ஜெரோம் எமிலியானியும் இராணுவத்தில் சேர்ந்து வெனிஸ் நகரை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எதிரிகளால் கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். சிறையில் அவர் அன்னை மரியாவினால் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டார். இறைவனின் அருளால் தான் சிறையிலிருந்து மீட்கப்பட்டதால், இறைவனுக்கே தன்னுடைய வாழ்வை முழுதாய் அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில் தென் வெனிசில் கொள்ளை நோய் ஏற்பட்டது. அந்நோயினால் ஏராளமான பேர் உயிரிழந்தார்கள். ஜெரோம் எமிலியானியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதும் அவர்களுக்கு வேண்டியதைச் செய்துகொடுப்பதுமாய் இருந்தார். மட்டுமல்லாமல் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதுமாய், பெற்றோர்கள், உற்றார் உறவினர்களை இழந்து தவித்த குழந்தைகளுக்கு தன்னுடைய இல்லத்தில் ஆதரவு தந்து அவர்களைப் பராமரித்து வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அவருடைய புகழ் ஓங்கியது.
கொள்ளைநோயின் தாக்குதல் முற்றிலுமாக ஓய்ந்தபின்னும் கூட ஜெரோம் எமிலியானி தன்னுடைய இரக்கச் செயல்களை நிறுத்தவில்லை. நகரின் பல்வேறு பகுதிகளில் அனாதை இல்லங்களைத் திறந்துவைத்து ஆதரவற்றோருக்கு பேராதரவாய் விளங்கினார். 1531 ஆம் ஆண்டு அவர் தன்னோடு மேலும் இரண்டு குருக்களை சேர்த்துக்கொண்டு ‘Company of the servants of the Poor’ என்னும் சபையை நிறுவினார். இதன்மூலம் அவர் ஆன்மீகப் பணிகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், அதாரவற்ற, நோய்வாய்ப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு இல்லங்கள் திறந்து அவர்களுக்கும் சேவைகள் செய்து வந்தார். இப்படி அவர் பணிசெய்துகொண்டிருக்கும்போதுதான் நோயினால் தாக்கப்பட்டு 1537 ஆம் ஆண்டு உயிரழ்ந்தார்.
ஏழைகளின் ஏந்தலால், நோயிற்றோருக்கு அருமருந்தாய் விளங்கிய ஜெரோம் எமிலியானி 1928 ஆம் ஆண்டு புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஏழை எளியவர்மீது அக்கறை
தூய ஜெரோம் எமிலியானியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதன்மையான பாடமே அவர் ஏழை எளியவர், நோயாளிகள்மீது கொண்ட அன்பும் அக்கறையும்தான். அவரிடமிருந்த அதே அன்பும் அக்கறையும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்றைய உலகம் ஏழை எளியவர்களை, நோயாளிகளை இழிவானவர்களாக கருதுகின்ற ஒருநிலைதான் இருக்கின்றது. ஆனால் ஆண்டவர் இயேசுவும் நம் புனிதர் ஜெரோம் எமிலியானியும் இவர்களுக்குத் தான் கடவுளின் அன்பும் அக்கறையும் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்று அவர்களுக்கு தங்களுடைய வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள். அவர்கள் வழியில் நடக்கின்ற நாம் நம்மோடு வாழக்கூடிய ஏழை எளியவர்களுக்கு நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல் வாசிக்கின்றோம், “ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன்கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தருகின்றார்” என்று. ஆம், நாம் ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கின்றபோது இறைவன் நமக்கு தக்க உதவி செய்வார் என்பது உறுதி.
அந்த நகரில் பிரபல மருத்துவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும். அப்படியிருந்தாலும் அவர் தன்னிடம் வரக்கூடிய எல்லா நோயாளிகளிடமும் எந்தவொரு பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்து வந்தார். இதனால் அவரை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகப் போனதே ஒழிய, ஒருபோதும் குறையவில்லை. இதற்கிடையில் அவருக்கு வயது கூடிக்கொண்டே போனதால் எல்லாருக்கும் மருத்துவம் செய்ய முடியாமல் போனது.
ஒருநாள் இரவு அவர் அசதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது தொலைபேசி மணி ஒலித்தது. அவர் அதை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் ஓர் ஆண் குரல் கேட்டது. மருத்துவர் அந்த மனிதரிடம் பேசியதிலிருந்து புரிந்துகொண்டது அவருக்கு தலைவலி என்பதும் அவர் கொஞ்சம் வசதியானவர் என்பதுதான். உடனே மருத்துவர் அவரிடம், “ஐயா என்னால் படுக்கையில் இருந்து எழமுடியாத சூழல். மேலும் உங்களால்தான் வேறு ஒருத்தவரிடம் சென்று மருத்துவ உதவிபெற போதிய பணம் இருக்கின்றது அல்லவா. அதனால் சிரமம் பார்க்காமல் இன்னொரு மருத்துவரைப் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்று தொலைபேசியை வைத்துவிட்டார். தொலைப்பேசியை வைத்தபின்னர் தன்னுடைய இயலாமையை நினைத்துப் பெரிதும் வருந்தினார்.
தனக்கு முடியாத சூழலிலும் எல்லா மக்களுக்கும் அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வந்த அந்த மருத்துவர் உண்மையிலே நம்முடைய பாராட்டுக்குரியவர். நாமும் நம்மோடு வாழக்கூடிய நோயாளிகள், அனாதைகள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
ஆகவே, தூய ஜெரோம் எமிலியானியின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஏழை எளியவர், நோயாளிகள்மீது உண்மையான அக்கறை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
No comments:
Post a Comment