† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 16)
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நம்மிடையே இருக்கும் நட்புறவு செயல்வடிவம் பெற வேண்டுகிறேன் (பில1:6)
பிரிகியா பகுதியைச் சேர்ந்தவர் ஒனேசிம் .இவர் கொலோசை நகரில் இருந்த முக்கிய செல்வந்தரான பிலமோன் என்பவரிடம் அடிமைத் தொழில் செய்து வந்தார். பிலமோன் புனித பவுலினால் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவரானவர். ஒருநாள் ஒனேசிம் தமது தலைவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டார் .தப்பி ஓடும் அடிமை பிடிபட்டால் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உரோமை சட்டம் ஆகும்.
ஓடிய ஒனேசிம் நேரே தம் தலைவரின் நண்பரான புனித பவுலிடம் சென்றார். சில காலம் அவருடன் இருந்து மனமாறி கிறிஸ்துவராக , புதிய மனிதராக மீண்டும் தம் தலைவரிடமே செல்ல விரும்பினார் .ஆனால் பயம் அவரை ஆட்கொண்டது.
பயத்தை அறிந்த புனித பவுல் , பிலமோனுக்கு ஒரு கடிதம் எழுதினார் .அதில், ஒனேசிமுமை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறும், அடிமையாக இல்லாமல் ஒரு சகோதரராக, கிறிஸ்துவராகக் கருதுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டார் . பிலமோனும் அப்படியே செய்தார்.
சிறையில் இருந்து விடுதலையான புனித பவுலுக்கு சில காலம் ஒனேசிம் உதவி செய்தார். புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தை திக்கி மற்றும் நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரராகிய ஒனேசிம் இருவரும்தான் கொண்டு சென்றார்கள் (கொலோ 4:7-9)
திருத்தூதர்களுக்கும் உதவியாக இருந்த ஒனேசிம் புனித திமொத்தேயுவுக்குப் பிறகு எபேசு ஆயராக இருந்தார்.
ஒனேசிம் சிறந்த மறையுரையாளராக விளங்கியதாக புனித ஜெரோம் மற்றும் பலர் குறிப்பிட்டுள்ளார்கள் . நற்செய்திக்காக, உரோமையில் 18 நாட்கள் ஒனேசிம் கொடூரமாக வதைக்கப்பட்டார். இவருடைய கால்களையும், தொடைகளையும் உடைத்தார்கள் .95 ஆம் ஆண்டு கற்களை எறிந்து கொலை செய்தார்கள்.
தங்களுக்காக மட்டுமல்லாது மற்றவர்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படு கிறவர்களே நல்ல நண்பர்கள்.
No comments:
Post a Comment