இன்றைய புனிதர் :
(21-02-2020)
தூய பீட்டர் தமியான் (பிப்ரவரி 21)
1035 ஆம் ஆண்டு, தூய பீட்டர் தமியான் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த தருணம். ஒருநாள் பெனடிக்ட் துறவுமடத்தைச் சார்ந்த துறவிகள் சிலர் அவரைச் சந்தித்து, ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் துறவற வாழ்வு குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்கள். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் தான் செய்துகொண்டிருந்த பேராசிரியர் பணியை விட்டுவிட்டு தூய பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்து துறவியானார், ஆண்டவர் இயேசு ஒருவரே உண்மையான சொத்து என அவரைப் பற்றிக்கொண்டு வாழத் தொடங்கினார்.
வாழ்க்கை வரலாறு
பீட்டர் தமியான் 1007 ஆம் ஆண்டு இத்தாலியில் இருக்கும் ரவென்னா என்ற இடத்தில் வாழ்ந்த ஓர் ஏழைத் தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் பீட்டர் என்பதுதான். பின்னாளில் தன்னுடைய மூத்த சகோதரரும் குருவாகவும் இருந்த தமியான் என்பவர் மீது கொண்டிருந்த மதிப்பினால் பெற்றோர் இட்ட பீட்டர் என்ற பெயரோடு தமியான் என்ற பெயரையும் சேர்த்துகொண்டு தன்னுடைய பெயரை பீட்டர் தமியான் என மாற்றிக்கொண்டார்.
பீட்டர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். இதனால் இவர் தன்னுடைய இளைய சகோதரரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இந்த சகோதரர் மிகவும் கண்டிப்பானவர், அதே நேரத்தில் பீட்டரை சரியாகக் கவனிப்பதும் கிடையாது. தான் வைத்திருந்த பன்றிகளை மேய்ப்பதற்குத்தான் இவர் பீட்டரை அனுப்பி வைத்தார். இந்த நேரத்தில் பீட்டர் மிகவும் கஷ்டப்பட்டார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட பீட்டரின் மூத்த சகோதரரான தமியான், அவரை பன்றி மேய்க்கும் பொறுப்பிலிருந்து விடுவித்து, பள்ளிக்கூடத்திற்குச் சென்று, கல்வி கற்க கேட்டுக்கொண்டார். அதற்கான செலவீனங்கள் அனைத்தையும் தான் ஏற்பதாக உறுதிதந்தார். இவர் ஒரு குருவானவர். பின்னாளில் பீட்டர் நன்றாகப் படித்து ஒரு பேராசிரியராக உயரும்வரைக்கும் இவர் பீட்டருக்கு பேருதவியாக இருந்தார். அதனால்தான் (ஏற்கனவே சொன்னது போல) இவர் தன்னுடைய சகோதரரின் பெயரையும் தன்னுடைய பெயரோடு சேர்த்துக்கொண்டு பீட்டர் தமியான் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.
பீட்டர் தமியான் பேராசிரியராக மாறிய பிறகு தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு மிகச்சிறப்பான கல்வியை வழங்கினார். இயல்பிலேயே ஞானமும், அறிவும் கொண்டவரான பீட்டர் தமியானின் வகுப்புகளுக்காக மாணவர்கள் தவம் கிடப்பார்கள். அந்தளவுக்கு இவர் சிறப்பாக பாடங்களை நடத்தி வந்தார். இத்தகைய தருணத்தில்தான் தூய ஆசிர்வாதப்பர் சபையைச் சேர்ந்த துறவிகள் இவரை வந்து சந்தித்து, இவருக்கு கிறிஸ்துவை பற்றியும் துறவு வாழ்க்கை குறித்தும் எடுத்துரைத்தார். இவற்றால் ஈர்க்கப்பட்ட பீட்டர் தமியான் எல்லாவற்றையும் துறந்து தூய ஆசிர்வாதப்பர் சபையில் துறவியாக மாறினார்.
தூய ஆசிர்வாதப்பர் – பெனடிக்ட் – சபையில் சேர்ந்த சில ஆண்டுகளுளிலேயே இவர் அச்சபையின் தலைவரானார். அதன்பிறகு இவர் சபையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக ஐந்து துறவற மடங்களை நிறுவி, நிறைய இளைஞர்கள் துறவு வாழ்வில் ஈடுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். குருக்கள் மற்றும் துறவிகள் தங்களுடைய கடமைகளில் கருத்தூன்றி வாழவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தினார். அதேநேரத்தில் அவர்கள் புனிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடையவேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்படிப்பட்ட அரும்பணிகளை ஒவ்வொருநாளும் திருச்சபைக்கு அவர் செய்துகொண்டிருந்தார்.
இவருடைய பணிகளை பார்த்த மேலிடம் இவரை ஒஸ்தியா (Ostia) என்ற இடத்தில் ஆயராக நியம்பித்தது. ஆயராக உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் அளப்பெரிய பணிகளைச் செய்தார். மக்களுடைய சமூக மற்றும் ஆன்மீக வாழ்விற்காக அவர் பெரிதும் பாடுபட்டார். இவையெல்லாவற்றையும் பார்த்த அப்போதைய திருத்தந்தை ஒன்பதாம் ஸ்டீபென் என்பவர் இவரை திருத்தந்தையின் திருத்தூதராக நியமித்தார். இந்த நிலைக்கு உயர்ந்தபிறகு பீட்டர் தமியான் ஒரு மிகச்சிறந்த சமாதானத்தின் தூதுவராக விளங்கினார். திருச்சபையிலும் சரி, நாடுகளிடையேயும் சரி அமைதியை ஏற்படுத்த நல்ல ஒரு கருவியாக விளங்கினார். இத்தகைய பணிகளுக்கும் மத்தியிலும் இவர் ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. குறிப்பாக இவர் அன்னை மரியிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.
இப்படி ஒரு பேராசிரியராக, ஆயராக, திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்த பீட்டர் தமியான் ஓரிடத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்புபோது வரும்வரை வழியில் இறந்துபோனார். இவர் இறந்த நாள் பிப்ரவரி 21, 1072. 1828 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் லியோ என்பவரால் புனிதராக உயர்த்தப்பட்டார். புனிதரிடத்தில் தீராத தலைவலிக்காக மன்றாடும்போது அது விரைவிலே குணமடையும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment