இன்றைய புனிதர் :
(05-04-2020)
தூய வின்சென்ட் பெரெர் (ஏப்ரல் 05)
யோவான் கைது செய்யப்பட்ட பின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாட்சிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் கூறினார்.
வாழ்க்கை வரலாறு
1350 ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலன்சியாவில் வின்சென்ட் பெரர் பிறந்தார். இவருடைய பெற்றோர் கன்ஸ்டான்சியா, மிக்வெல் ஆவர். வின்சென்ட் பெரர் தன்னுடைய தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரிலேயே கற்றார். அப்போதே அவர் இறையழைத்தலை உணர்ந்தார். எனவே அவர் அனைத்தையும் துறந்துவிட்டு 1367 ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்து மெய்யியலையும் இறையியலையும் கற்றுத் தேர்ந்து, குருவானவராகி, பின்னாளில் தான் கல்வி கற்ற அதே இடத்திலே பேராசிரியர் ஆனார்.
இதற்கிடையில் வின்சென்ட் பெரர் இருந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்களெல்லாம் உணவுக்குப் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் இவர் மக்களுக்கு மத்தியில் இறங்கி, சிறப்பான முறையில் களப்பணி ஆற்றினார். மட்டுமல்லாமல், வின்சென்ட் பெரருக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளக்கூடிய வல்லமையை இறைவன் கொடுத்திருந்தார். அதனால் அவர் பஞ்சத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி, “இன்னும் ஒருசில நாட்களில் இங்கே ஒரு கப்பல் கோதுமையை ஏற்றுக்கொண்டு வரும்” என்றார். அவர் சொன்னதுபோன்றே கப்பலொன்று கோதுமையை ஏற்றுக்கொண்டு வந்தது. அதைப் பார்த்து மக்களெல்லாம் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதே நேரத்தில் அந்தக் கப்பலிலிருந்த கோதுமையை அள்ளி, மக்களுக்கு அவரவர் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுத்தார்.
இப்படி வாழ்க்கை மிகவும் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த தருணத்தில் வின்சென்ட் பெரரை தானுஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அவர் இறையியலைக் கற்பித்து வந்தார். வின்சென்ட் பெரர் தன்னிடம் பாடம் கற்று வந்த மாணவர்களிடம் அடிக்கடி சொல்லக்கூடிய வசனம், “உனது படிப்பில் வெற்றி வேண்டுமா? அப்படியானால் ஜெபத்திற்குப் பிறகு படி” என்பதுதான். இவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, மாணவர்கள் அப்படியே அதைப் பின்பற்றி வந்தார்கள். இவரிடமிருந்த திறமையைக் கண்டு யோலண்டா நாட்டு அரசி இவரை தன்னுடைய தன்னுடைய ஆலோசகராக்கிக் கொண்டார்.
இந்த சமயம் பார்த்து பீட்டர் தே லூனா என்பவர் அவிங்னோனில் இருந்துகொண்டு தன்னை 13 வது திருத்தந்தையாக அறிவித்து வின்சென்ட் பெரரும் அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். வின்சென்ட் பெரரோ அதற்கு ஆதரவு தெரிவிக்காமல் திருச்சபைக்கு என்றும் உண்மையாக இருந்து வந்தார். இவர் எப்போதும் இயேசுவிடமும் சாமிநாதரிடமும் பிரான்சிஸ் அசிசியாரிடமும் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் இவர் செபித்துக் கொண்டிருந்தபோது மேலே சொன்ன மூவரும் அவருக்கு முன்பாகத் தோன்றி, “அன்பு மகனே வின்சென்ட் பெரர்! நீ கடினமான ஒறுத்தல் முயற்சிகள் இருந்து, மக்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி, மனம்திரும்பி வாழச் சொல்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்கள். இவரும் அவ்வாறே செய்து மக்களை மனந்திருப்பினார். இப்படி ஆண்டவரின் வார்த்தையை எடுத்துச் சொல்லி, மக்களை மனம்திரும்பச் செய்த வின்சென்ட் பெரர் 1419 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1455 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய வின்சென்ட் பெரரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. மக்களை மனந்திருந்தி வாழ அழைத்தல்
தூய வின்சென்ட் பெரரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது, அவர் மக்களை மனந்திருந்தி வாழ அழைத்ததுதான் நம் கண்முன்னால் வந்து போகின்றது. இவரது நினைவுநாளைக் கொண்டாடும் நாம், மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு மக்கள் குற்ற உணர்வே இல்லாமல் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டச் சூழலில் நாம் அவர்களது குற்றத்தை உணரச் செய்து, அவர்களைப் புது வாழ்விற்கு அழைத்துச் சொல்வது நம்முடைய கடமையாக இருக்கின்றது.
நற்செய்தி வாசத்தில் திருமுழுக்கு யோவான் தொடாங்கி, ஆண்டவர் இயேசு திருத்தூதர்கள் என அனைவருமே மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்கள். நாமும் அத்தகைய பணியைச் செய்கின்றபோது, இயேசுவின் உண்மையான சீடர்கள் என நம்மை உறுதியாகச் சொல்லலாம்.
ஆகவே, தூய வின்சென்ட் பெரரின் நினைவு நாளைக் கொண்டாடும் நாமும், அவரைப் போன்று, மக்களை மனமாறச் செய்து, அவர்களை ஆண்டவரிடம் கொண்டு வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment