இன்றைய புனிதர் :
(09-04-2020)
தூய வால்டேட்ரூடிஸ் (ஏப்ரல் 09)
“என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றார்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5: 11-12)
வாழ்க்கை வரலாறு
வால்டேட்ரூடிஸ், பெல்ஜியம் நாட்டில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இவருடைய குடும்பமே புனிதர்களின் குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இவரது தாய், தந்தை, இவருடைய அக்காள், கணவர், இவருடைய நான்கு பிள்ளைகள் என எல்லாரும் பின்னாளில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள்.
வால்டேட்ரூடிஸ், அழகில் சிறந்தவராய் இருந்தார். அதனால் இவரை மணந்து கொள்வதற்கு நிறையப் பேர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் வால்டேட்ரூடிசின் தந்தையோ அவருக்குப் பிடித்தாற்போல் ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வால்டேட்ரூடிசை மணமுடித்துக் கொடுத்தார். அவர் பெயர் மடெல்கார் என்பது ஆகும். மடெல்கர் வால்டேட்ரூடிஸ்மீது அன்பு மழை பொழிந்து அவரை நல்ல விதமாய் பார்த்துக் கொண்டார்.
இப்படி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாய் போய்க்கொண்டிருந்த தருணத்தில், வால்டேட்ரூடிஸ்மீது பொறமை கொண்டவர்கள் அவர் மிகவும் தவறான பெண்மணி என்று பழி போட்டார்கள். அத்தகைய தருணங்களில் வால்டேட்ரூடிஸ் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவின்மீது மக்கள் அபாண்டமாகப் பழி போட்டபோது, அவர் எப்படி அதை எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் மக்கள் தன்மீது சுமத்திய அபாண்டமான பழிகளை துணிவோடு எதிர்கொண்டார்.
இதற்கு மத்தியில் வால்டேட்ரூடிஸ் – மடெல்கர் தம்பதியினருக்கு இறைவன் நான்கு குழந்தைகளைக் கொடுத்து ஆசிர்வதித்திருந்தார். நான்காவது குழந்தையைப் பெற்ற சிறுது நாட்கள் கழித்து வால்டேட்ரூடிசின் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதாக அவரிடத்தில் சொன்னார். வால்டேட்ரூடிஸ் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல், தன் கணவர் துறவற வாழ்க்கை மேற்கொள்வதற்கு முழு அனுமதியும் கொடுத்தார். இதற்கு பின்னர் வால்டேட்ரூடிஸ் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார். தன்னுடைய பிள்ளைகளும் ஓரளவு வளர்ந்த பின் வால்டேட்ரூடிசும் துறவற மடத்தில் சேர்ந்து, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
துறவற மடத்தில் சேர்ந்த பின்பு வால்டேட்ரூடிஸ் ஏழைகள் மீது உண்மையான அன்பைக் காட்டினார். மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்தார். இப்படி இறைவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருடைய இறப்புக்குப் பின்னர் இவருடைய கல்லறையில் நிறைப் புதுமைகள் நடக்கத் தொடங்கின.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்வோம்
தூய வால்டேட்ரூடிஸ் மிகவும் அழகாக இருந்ததால், அவர்மீது பொறமை கொண்ட ஒருசில விஷமிகள் அவரைக் குறித்து மிகவும் தவறாகப் பேசினார்கள். அத்தகைய தருணங்களில் எல்லாம் அவர் இயேசுவையே முன்மாதிரியாகக் கொண்டு, அவர் எப்படி தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டாரோ அதுபோன்று வால்டேட்ரூடிசும் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொண்டார்.
பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம் ஒவ்வொரின் மீதும் பலர் தேவையில்லாமல் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பார்கள். அப்படிப்பட்ட தருணத்தில் நாம் தூய வால்டேட்ரூடிசை போன்று விமர்சனங்களை விவேகத்தோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் நம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், பலருக்கு நல்லத்தைப் பார்த்து பாராட்டக்கூடிய மனப்பக்குவம் வருவதில்லை. அவர்கள் எப்போதும் குறை கண்டுபிடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்திலும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒரு சமயம் காட்டு வழியாகப் போன ஒருவன் அதிசய நாயைக் கண்டான். அது தண்ணீரில் சாவகாசமாய் நடந்து போகக்கூடிய நாய். மட்டுமல்லாமல் கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போடும். அந்த அதிசய நாயோடு நட்பு பாராட்டி ஊருக்குள் அழைத்து வந்து, ஆசையோடு வீட்டுக் காரியிடம் காட்டினான். அவளும் ஆசையோடு பார்த்தாள். அவளுடைய கண் முன்னாலே அந்த நாய் தண்ணீரில் நடந்து போனது; கண்ணில் பட்ட பறவைகளைப் பிடித்து வந்து கரையில் போட்டது. இதைப் பார்த்த வீட்டுக்காரி, “என்னங்க இந்த நாய் தண்ணீரில் நடந்து போகிறது, இதற்கு நீந்தத் தெரியாதா?” என்றாள். இதைக் கேட்டு அவளுடைய கணவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
தண்ணீரில் நடந்து போகக்கூடிய அற்புத நாயாக அது இருக்க, அந்த நாய்க்கு நீந்தத் தெரியாது என்று நொட்டை சொன்ன அந்தப் பெண்மணியைப் போன்று நிறையப் பேர், பாராட்டுவதற்கு நிறைய இருந்தும் விமர்சிக்கவே செய்வார்கள். இப்படிப்பட்டவர்களை விவேகத்தோடு எதிர்கொள்வது சிறப்பு.
ஆகவே, தூய வால்டேட்ரூடிசின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைப்பணியை சிறப்புடன் செய்வோம், எதிர்வரும் சவால்களைத் துணிவோடு வெல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment