புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 April 2020

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)

இன்றைய புனிதர் : 
(18-04-2020) 

தூய கால்டினுஸ் (ஏப்ரல் 18)
“நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத் 10:10)

வாழ்க்கை வரலாறு

1100 ஆம் ஆண்டு, இத்தாலில் உள்ள மிலனில் கால்டினுஸ் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். சிறு வயதிலே அறிவிலும் ஞானத்திலும் வல்லவராக விளங்கிய கால்டினுஸ், வளர்ந்து பெரிய ஆளாக மாறியபோது குருவாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அதனடிப்படையில் அவர் குருத்துவப் படிப்புப் படித்து குருவாக மாறினார். முதலில் இரண்டு திருத்தந்தையர்களிடம் தலைமைச் செயலராகவும் திருத்தொண்டராகவும் பணியாற்றிய கால்டினுஸ் அதன்பின்னர் திருத்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் என்பவருக்கு உதவியாளராக இருந்தார்.

1159 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த அட்ரியன் இறந்தார். எனவே அவருக்குப் பின்னர் மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரை இத்தாலியில் அரசராக இருந்த பிரெடரிக் பார்பரோசா என்பவன் ஏற்கவில்லை. அவன் தனக்குப் பிடித்தமான நான்காம் விக்டர் என்பவரை திருத்தந்தையாக அறிவித்தான். இதனால் மிகப்பெரிய குழம்பம் ஏற்பட்டது. மிலன் நகரில் இருந்த மக்கள் மன்னுடைய முடிவை ஏற்கவில்லை, அவர்கள் அவனுக்கு எதிராகக் கிளம்பினார்கள். இதனால் சினமடைந்த மன்னன் மிலனை நகரை முற்றுகையிட்டான். அதோடு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டரையும் அவருக்கு உதவியாக இருந்த கால்டினுசையும் சிறைபிடிக்கத் திட்டமிட்டான். ஆனால், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி வேறொரு இடத்திற்குச் சென்றார்கள். இதற்கிடையில் மிலன் நகரில் பஞ்சமும் நோயும் தலைவிரித்தாடியது. இதனால் மன்னன் மிலன் நகர் மீது இருந்த தன்னுடைய பிடியைத் தளர்த்தினான்.

1165 ஆம் ஆண்டு, பிரச்சனைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தபிறகு திருந்தந்தை மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் தனக்கு உதவியாக இருந்த கால்டினுசை கர்தினாலாக உயர்த்தினார். அதைத் தொடர்ந்து 1166 ஆம் ஆண்டு மிலன் நகரில் ஆயராக இருந்த ஹூபர்ட் என்பவர் இறந்துபோனதால் கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

கால்டினுஸ் மிலன் நகரின் ஆயராக உயர்ந்த பிறகு செய்த பணிகள் ஏராளம். குறிப்பாக இவர், கடன்பட்டு அந்தக் கடனையெல்லாம் அடக்க முடியாமல் கஷ்டபட்ட ஏழை எளியவருடைய கடனையெல்லாம் அடைப்பதற்கு உதவியாக இருந்தார். அது மட்டுமல்லாமல் மன்னனுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேரையும் திருச்சபையை விட்டு நீக்கினார். இவ்வாறு ஏழைகளுக்கு ஏழையாய், எல்லாருக்கும் எல்லாமுமாய் இருந்த ஆயர் கால்டினுஸ் 1176 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் திருச்சபைக்கும் குறிப்பாக மிலன் நகருக்குச் செய்த நன்மைகளின் பொருட்டு, மிலன் நகரின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. துயருவோரின் துயர் துடைப்போம்

தூய கால்டினுசின் வாழக்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவர் கடன் பட்ட ஏழை எளியவரின் கடனையெல்லாம் அடைக்க உதவி செய்தார் என்று பார்த்தோம். இவ்வாறு அவர் துயருற்றோரின் துயர் துடைப்பவர் ஆனார். தூய கால்டினுசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று சமூகத்தில் துயருற்றுத் தவிப்போரின் துயர் துடைக்க முன் வருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் செஜடன் (Cejatan) என்ற புனிதருடைய வாழ்வையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருள் நிறைந்ததாக இருந்தாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஒரு சமயம் அவர் உரோமையின் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அநியாய வட்டி வாங்குவோரிடம் மாட்டிக்கொண்டு, ஏழைகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதைக் கண்ணால் பார்த்த செஜடன் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நினைத்தார். எனவே அவர் Credit Union என்ற ஒன்றைத் தொடங்கி வட்டியில்லாக் கடன் கொடுத்து, ஏழை எளியவருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார். இவருடைய இந்த தன்னலமில்லா உதவியைக் கண்டு, மக்கள் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். உரோமை நகரில் இருந்த ஏழை எளியவரின் துயர் துடைக்க செஜடன் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நாம் நம்மாலான உதவிகளைச் செய்து, ஏழை எளியவரின் துடைப்பதே சாலச் சிறந்த ஒன்றாகவும்.

ஆகவே, தூய கால்டினுசின் நினைவுநாளை கொண்டாடும் நாம் அவரைப் போன்று துன்புறுவோரின் துடைப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

No comments:

Post a Comment