இன்றைய புனிதர் :
(28-04-2020)
லூயிஸ் கிரிக்னன் (ஏப்ரல் 28)
“நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அருமடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” (மாற் 16: 17 -18)
வாழ்க்கை வரலாறு
லூயிஸ் மேரி என அழைக்கப்படும் லூயிஸ் கிரிக்னன் 1673 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மான்ட்போர்ட் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் வளரும்போதே மறையன்னையிடம் மிகவும் பக்திகொண்டு வளர்ந்து வந்தார். அது மட்டுமல்லாமல் இவர் அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தோரை ஒன்று சேர்த்துக்கொண்டு ‘Rosary Society’ என்ற பெயரில் ஜெபமாலை சொல்லிவந்தார்.
லூயிஸ் கிரிக்னன் வளர்ந்து வந்தபோது குருவாக மாறவேண்டும் என்ற ஆசை கொண்டார். எனவே, அவர் குருமடத்தில் சேர்ந்து 1700 ஆம் ஆண்டு குருவாக மாறினார். ஒருசில ஆண்டுகளுக்கு கழித்து இவர் டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து, மேற்கு பிரான்ஸ் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். மேலும் அவர் எங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கச் சென்றாரோ அங்கெல்லாம் மரியாவின்மீது உள்ள பக்தியை வளர்த்து வந்தார்.
இவர் ஆற்றி வந்த நற்செய்திப் பணிக்கு நிறைந்த பலன் கிடைத்தது. ஆம், ஏராளாமான மக்கள் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இது பிடிக்காத ஒருசிலர் அவருடைய உணவில் விஷம் வைத்து கொல்லப்பார்த்தனர். ஆனால், இறைவனின் அருள்துணை இவருக்கு இருந்ததால் அந்த விஷம் இவரை ஒன்றும் செய்யவில்லை. லூயின் கிரிக்னன் திருச்சபைக்கு செய்த மற்றொரு மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால் ‘True Devotion to the Blessed Virgin’ என்ற புத்தகத்தை எழுதியதுதான். இப்புத்தகம் கன்னி மரியாவின் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி முயற்சியைக் குறித்துப் பேசுகின்றது.
காலப் போக்கில் லூயிஸ் கிரிக்னன் The Missionaries of he Company of Mary என்ற சபையை இருபாலருக்கும் ஏற்படுத்தி, மரியாவின் புகழும் ஆண்டவர் இயேசுவின் புகழும் எங்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட ஓர் இறையடியார் 1716 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
தூய லூயிஸ் கிரிக்னனின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. மரியன்னையிடம் பக்தி
தூய லூயிஸ் கிரிக்னனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது நம்முடைய மனதில் எழக்கூடிய சிந்தனை எல்லாம், அவரிடமிருந்த மரியன்னை மீதான பக்திதான். தூய லூயிஸ் கிரிக்னன் மரியன்னையை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார், அவரிடத்தில் இருந்த மரியன்னையின் மீதான பக்தி நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருமுறை தூய பெர்னார்துவிடம் அவரது துறவறக் குழுமத்தில் வாழ்ந்து வந்த துறவி ஒருவர், “மரியாவுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா?” என்று கேட்டார். அதற்கு தூய பெர்னார்து அவரிடம், “Ascendens, Descendens” என்றார். இதைக் கேட்டு அந்தத் துறவி புரியவில்லையே என்று விழிபிதுங்கி நின்றபோது பெர்னார்து அவரிடம், “மரியன்னை நமது மன்றாட்டுகளுடன் விண்ணகம் செல்வதும், அருள்வரங்களை நமக்கெனப் பெற்றுக்கொண்டு மண்ணகம் இறங்குவதுமாக இருப்பதனாலே அவரை அப்படிக் குறிப்பிட்டேன்” என்றார்.
இது உண்மையிலும் உண்மை. ஏனென்றால் மரியா நாம் அவரிடத்தில் எழுப்புகின்ற ஜெபத்தை இறைவனிடத்தில் எடுத்துச் சென்று, அதற்கான அருள்வரங்களை அங்கிருந்து நமக்கு பெற்றுக்கொண்டு வருகின்றார். அதனால் நாம் அவரை அவ்வாறு அழைப்பதில் தவறொன்றும் இல்லை. மறைந்த திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் மரியன்னையக் குறித்து, “தாய் மரியே நான் உமக்கே முழுவதும் சொந்தம்” என்றார். அவரைப் போன்று நாம் நம்மை அன்னையிடம் ஒப்படைத்து வாழும்போது நமக்கு ஒரு குறையும் வராது என்பது உண்மை.
ஆகவே, இப்படிப்பட்ட அன்னையிடம் நாம் பக்திகொண்டு வாழ்கின்றபோது, அவரை நம் தஞ்சமென நினைத்து வாழ்கின்றபோது, அவருடைய பரிந்துரையால் நாம் இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம் உறுதி.
ஆகவே, தூய லூயின் கிரிக்னனைப் போன்று, அன்னையின் ஆழமான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
No comments:
Post a Comment