புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 April 2020

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா April 28

† இன்றைய புனிதர் †
(ஏப்ரல் 28)

✠ புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா ✠
(St. Gianna Beretta Molla)
மனைவி, தாய், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், கருக்கலைப்பு மற்றும் கருணைக் கொலை ஆகியவற்றுக்கு எதிரானவர், பொதுநிலைப் பெண்மணி
(Wife, Mother, Pediatrician, Pro-life Witness and Laywoman)

பிறப்பு: அக்டோபர் 4, 1922
மெஜந்தா, இத்தாலி அரசு
(Magenta, Kingdom of Italy)

இறப்பு: ஏப்ரல் 28, 1962 (வயது 39)
மோன்ஸா, இத்தாலி
(Monza, Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 24, 1994
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 16, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஏப்ரல் 28

பாதுகாவல்:
மெஜந்தா (Magenta)
தாய்மார்கள் (Mothers)
மருத்துவர்கள் (Physicians)
மனைவிகள் (Wives)
குடும்பங்கள் (Families)
பிறக்காத குழந்தைகள் (Unborn Children)
குடும்பங்களின் உலகக் கூட்டம் 2015 (இணை-பாதுகாவலர்) (World Meeting of Families 2015 (Co-Patron)

புனிதர் கியேன்னா பெரேட்டா மொல்லா, இத்தாலிய ரோமன் கத்தோலிக்க சிறுவர் நல சிறப்பு மருத்துவர் (Italian Roman Catholic pediatrician) ஆவார். தமது நான்காவது குழந்தையை கருத்தாங்கியிருந்த காலத்தில், அதனை கருக்கலைப்பு (Abortion) செய்யவும், தமது கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் (Hysterectomy) மறுத்துவிட்டார். இதன் காரணத்தால், பின்னர் தமக்கு மரணம் நேரிடும் என்று நன்கு அறிந்திருந்தும் அவர் அதனை மறுத்துவிட்டார்.

மொல்லாவின் மருத்துவ சேவை வாழ்க்கை, திருச்சபையின் படிப்பினைகளுடன் இணைந்து கைகோர்த்திருந்தது. அது தேவைப்படும் பிறரின் உதவிக்கு வரும் சமயத்தில் அவரது மனசாட்சியைப் பின்பற்றுவதற்கான தனது உறுதியை பலப்படுத்தியது. தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினையும் நினையாமல், தாம் கருக்கொண்ட மகவின் உயிரை காக்கவேண்டும் என இவர் எடுத்த முடிவால், இவரது மனசாட்சியும் இலட்சியமும் தீவிரமாக வெளிப்பட்டது. இவர், வயது முதிர்ந்த மக்களிடையே தர்மசிந்தையுள்ள நற்பணிகளில் தம்மை அர்ப்பணித்திருந்தார். மேலும், கத்தோலிக்க செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தியிருந்தார். அவர் தூய “வின்சென்ட் டி பவுல் குழு” (St. Vincent de Paul group) மூலமாக, உள்ளூரிலுள்ள ஏழைகளுக்கும் அதிர்ஷ்டமற்ற மக்களுக்கும் உதவினார். இக்குழு, கத்தோலிக்க திருச்சபையின் ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு ஆகும். இது, ஏழைகளின் தனிப்பட்ட சேவையின் மூலம் அதன் உறுப்பினர்கள் பரிசுத்தப்படுத்தப்படுவதற்காக 1833ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.

1994ம் ஆண்டு, முக்திபேறு பட்டமளிக்கப்பட்ட இவருக்கு, பத்து வருடங்கள் கழித்து, 2004ம் ஆண்டின் மத்தியில், "தூய பேதுரு சதுக்கத்தில்," (Saint Peter's Square) திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) அவர்களால் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். 

1922ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 4ம் தேதி, இத்தாலி அரசின் அஜெந்தா (Magenta) நகரில் பிறந்த கியேன்னா பெரேட்டா மொல்லா, தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பத்தாவது குழந்தை ஆவார். இவரது தந்தையான "அல்பெர்ட்டோ பெரேட்டா" (Alberto Beretta), மற்றும் தாயாரான "மரியா டி மிச்சேலி" (Maria de Micheli) இருவரும், "தூய ஃபிரான்சிசின் மூன்றாம் நிலை சபையின்" (Third Order of Saint Francis) உறுப்பினர்கள் ஆவர். இவரது சகோதரர்களில் அநேகரும், குடும்பத்தினர் பலரும் கத்தோலிக்க மறைப்பணியாளர்களாவர். இதன் காரணமாக, இவரும் கத்தோலிக்க பின்புலம் கொண்டவராவார்.

இவருக்கு மூன்று வயதாகையில் இவரது குடும்பம் வடக்கு இத்தாலியிலுள்ள “லொம்பார்டி” (Lombardy) மாகாணத்திலுள்ள “பெர்கமோ” (Bergamo) நகருக்கு புலம்பெயர்ந்து சென்றது. அங்கேயே இவர் வளர்ந்தார். புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் உள்ளிட்ட அருட்சாதனங்கள் இவருக்கு பெர்கமோ ஆலயத்திலேயே (Bergamo Cathedral) தரப்பட்டது. இவருக்கு பதினைந்து வயதாகையில், இவரது சகோதரியான “அமலியா” (Amalia) மரணமடைந்ததால், இவர்களது குடும்பம் மீண்டும் புலம்பெயர்ந்து, இத்தாலியின் “லிகுரியா” (Liguria) மாகாணத்தின் தலைநகரான ஜெனோவா (Genoa) சென்று, “குயின்டோ அல் மேர்” (Quinto al Mare) எனும் குடியிருப்பில் குடியேறியது. அங்கேயே கியேன்னா தமது கல்வியை தொடர்ந்தார். மற்றும், தமது தூய பேதுரு பங்கின் (Parish of Saint Peter) நடவடிக்கைகளில் இவர் முழு ஈடுபாடு கொண்டிருந்தார்.

1941ம் ஆண்டு, “பெர்கமோவின்” (Bergamo) “சேன் விஜிலோ” (San Vigilio) நகரிலுள்ள தமது தாத்தா – பாட்டியுடன் வாழ்வதற்காக கியேன்னா சென்றார். 1942ம் ஆண்டு, “மிலன்” (Milan) நகரில் தமது மருத்துவ கல்வியை தொடங்கினார். தமது மருத்துவ கல்வியல்லாது, இத்தாலியின் “அஸியோன் கடோலிக்கா” (Azione Cattolica movement) எனப்படும் கத்தோலிக்க செயல்பாடுகளிலும் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தார். 1949ம் ஆண்டு, “பவியா பல்கலையில்” (University of Pavia) மருத்துவ பட்டம் வென்ற இவர், 1950ம் ஆண்டு, “குழந்தைகள் மருத்துவ அறிவியலில்” (Pediatrics) சிறப்பு பட்டம் வென்றார். பிரேசில் நாட்டில் மறைப்பணியில் (Brazilian missions) இருந்த கத்தோலிக்க குருவான தமது சகோதரரிடமே சென்று, அங்கேயுள்ள ஏழைப் பெண்களுக்கு “மகளிர் நோய் மருத்துவ இயல்” (Gynecological Services) சேவை புரிய எண்ணினார். இருப்பினும் அவரது நீண்டகால உடல்நலக் குறைபாடு காரணமாக, இது ஒரு நடைமுறை சாத்தியமற்ற கனவாகிப்போனது. ஆனாலும் அவர் தமது பணியைத் தொடர்ந்தார். 1952ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், “மிலன் பல்கலையில்” (University of Milan) குழந்தைகள் நல சிறப்பு மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1954ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு பொறியாளரான “பியெட்ரோ மொல்லா” (Pietro Molla) என்பவரை கியேன்னா பெரேட்டா சந்தித்தார். 1955ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11ம் நாளன்று, இருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது. அதே வருடம் செப்டம்பர் மாதம், மெஜந்தா நகரிலுள்ள “சேன் மார்ட்டினோ” (Basilica di San Martino in Magenta) ஆலயத்தில் இருவரதும் திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

1961ம் ஆண்டு, அவரது நான்காவது - கடைசி குழந்தை கர்ப்பத்திலிருந்த இரண்டாவது மாதம், அவரது கர்ப்பப்பையில் “ஃபைப்ரோமா” (Fibroma) எனப்படும் கட்டி உருவானது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூன்று தேர்வுகளை அளித்தனர். முதலாவது, கருக்கலைப்பு. இரண்டாவது, அவரது கர்ப்பப்பையை அறுவை மூலம் நீக்குதல். மூன்றாவதும், வளர்ந்திருந்த கட்டியை அறுவை மூலம் நீக்குதல். திருச்சபை எல்லா நேரடி கருக்கலைப்புக்கும் தடையாக இருந்தது. ஆனால் இரட்டை விளைவு கொள்கையில் போதனைகள் அவருக்கு கருப்பை நீக்கம் செய்ய அனுமதித்தது. ஆனால், அதிலும் அவரது பிறக்காத குழந்தை மரித்துப்போகும். ஆகையால் குழந்தையின் உயிரை காப்பாற்ற விரும்பிய பெரேட்டா, இவற்றை மறுத்தார். தமது கர்ப்பப்பையில் இருந்த கட்டியை மட்டும் அகற்ற சம்மதம் தெரிவித்தார். தமது உயிரைவிட குழந்தையின் உயிர் மிகவும் முக்கியமானது என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

1962ம் வருடம், ஏப்ரல் மாதம், 21ம் தேதி, புனித சனிக்கிழமையன்று (Holy Saturday), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே, அறுவை சிகிச்சை (Caesarean) மூலம் அவரது பெண் குழந்தை ”ஜியன்னா இமானுவேலா’வை” (Gianna Emanuela) பிரசவித்தார். தொடர்ந்த வலியால் அவஸ்தையுற்ற பெரேட்டா, வயிற்றின் உட்பாகங்கள் நச்சுத் தன்மை (Septic Peritonitis) அடைந்ததால் பிரசவித்த ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் மாதம் 28ம் தேதி, காலை எட்டு மணியளவில் மரித்துப்போனார். அவரது பெண் குழந்தையான “ஜியன்னா இமானுவேலா” இன்னமும் வாழ்ந்து வருகிறது. அவர், தற்போது “முதியோர் நல சிறப்பு மருத்துவராக” (Geriatrics) சேவை செய்கிறார்.

அவரது கணவர் 1971ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், தனது மனைவியின் வாழ்க்கையை பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதி, அதனை தனது குழந்தைகளுக்கு அர்ப்பணித்தார். அவர், அடிக்கடி தமது மகள் ஜியன்னா இமானுவேலாவிடம், “அவரது அம்மாவின் தேர்வு, ஒரு தாய் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோரின் மனசாட்சியாக இருந்தது” என்பார்.

No comments:

Post a Comment