புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 May 2020

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)

இன்றைய புனிதர் :
(19-05-2020)

தூய ஐந்தாம் செலஸ்டின் (மே 19)
“உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராக இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்கின்றவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத் 20: 26-27)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் தூய செலஸ்டின், 1215 ஆம் ஆண்டு, இத்தாலியில் உள்ள அப்ருஸி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பீட்டர் டி மோரோன்.  இவர் குடும்பத்தில் இருந்த பன்னிரெண்டு குழந்தைகளுள் பதினோறாவது குழந்தை.

இவர் சிறுவனாக இருக்கும்போது இவருடைய தாயார் இவரையும் மற்ற எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகக் கூட்டி, “உங்களுள் யார் புனிதராகப் போகிறார்?” என்று கேட்டும்போது இவரே, “நான் புனிதராகப் போகிறேன்” என்று பதில் சொல்வார். அந்தளவுக்கு பீட்டர் எனப்பட்ட செலஸ்டின் சிறுவயது முதலே புனிதராக மாறவேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார்.

செலஸ்டினுக்கு இருபதாவது வயது நடக்கும்போது துறவியாகப் போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். எனவே இவர் ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து, 31 வயதில் குருவாக மாறினார். ஆசிர்வாதப்பர் சபையில் இருக்கும்போது இவர் தாழ்ச்சிக்கும் தூய்மையான வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்த சமயத்தில் அப்போது திருத்தந்தையாக இருந்த நான்காம் நிக்கோலாஸ் என்பவர் இறந்துபோனார். எனவே திருத்தந்தைப் பதவியானது காலியாக இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்குக் காலியாக இருந்தது. இதை அறிந்த செலஸ்டின், திருத்தந்தைப் பதவியானது இப்படி காலியாக இருப்பது நல்லதல்ல என்று திருச்சபையில் முக்கியப் பொறுப்பில் இருந்த கர்தினால்களிடமும் இன்னும் ஒருசிலரிடமும் எடுத்துச் சொன்னார்.

உடனே அவர்கள் யாரை திருத்தந்தையாக நியமிக்கலாம் என்று கலந்துரையாடினார்கள். இறுதியில் பீட்டர் எனப்பட்ட செலஸ்டினையே திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இத்தனைக்கும் அவர் திருதந்தையாக இருப்பதற்கு தகுதியற்றவன் என்று சொன்னபோதும்கூட அவர்கள் அவரைத் திருத்தந்தையாக ஏற்படுத்தினார்கள். இதனால் அவர் ஐந்தாம் செலஸ்டின் என்ற பெயரில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று திருச்சபையை சிறந்தவிதமாய் வழிநடத்திச் சென்றார்.

திருத்தந்தையாகப் பொறுப்பெற்றே வெறும் ஐந்து மாதங்களில் அவர், தான் திருத்தந்தையாக இருப்பதற்கு தகுதியில்லாதவன் என உணர்ந்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முன்பிருந்த ஆசிர்வாதப்பர் சபையில் சேர்ந்து கடைசிவரைக்கும் ஒரு தூய்மையான துறவியாக வாழ்ந்து வந்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஐந்தாம் செலஸ்டினின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தாழ்ச்சி

தூய ஐந்தாம் செலஸ்டினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடமே அவரிடத்தில் இருந்த தாழ்ச்சிதான். அவர் எப்போதும் தான் திருத்தந்தையாக இருப்பதற்குத் தகுதியில்லாதவன் என்ற தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்துவந்தார். அதனால் அவர் புனிதராக உயர்ந்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான்.
அதற்கு அந்த துறவி “அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை” என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து “ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அத்துறவியோ “ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான்” என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான்.

அவனோ துறவியிடம் “வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?” என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி “மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்” என்று சொன்னார்.  அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் “துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டான். அதற்கு துறவி “இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்லி, “முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது” என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.

ஆம், உயர் பதவியில் இருப்பவனல்ல, உண்மையான பணிவோடு இருப்பவனே உண்மையான அரசன். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆகவே, தூய ஐந்தாம் செலஸ்டினைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

No comments:

Post a Comment