† இன்றைய புனிதர் †
(மே 19)
✠ கேர்மார்ட்டின் நகர புனிதர் இவோ ✠
(St. Ivo of Kermartin)
ஏழைகளுக்காக பரிந்து பேசுபவர்:
(Advocate of the Poor)
பிறப்பு: அக்டோபர் 17, 1253
கேர்மார்ட்டின், டச்சி பிரிட்டனி
(Kermartin, Duchy of Brittany)
இறப்பு: மே 19, 1303 (வயது 49)
லான்னேக், டச்சி பிரிட்டனி
(Louannec, Duchy of Brittany)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
புனிதர் பட்டம்: ஜூன் 1347
திருத்தந்தை ஆறாவது கிளெமென்ட்
(Pope Clement VI)
நினைவுத் திருநாள்: மே 19
பாதுகாவல்:
பிரிட்டனி, வக்கீல்கள், கைவிடப்பட்ட சிறுவர்கள்
(Brittany, Lawyers, Abandoned Children)
புனிதர் கேர்மார்ட்டின் நகர இவோ, ஏழை மக்களுக்காக பரிந்து பேசும் ஒரு கத்தோலிக்க குரு ஆவார்.
கி.பி. 1253ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, பிறந்த இவரது தந்தையான "ஹெலோரி" (Helori), "கெர்மார்ட்டின்" (Kermartin) நகர பிரபு ஆவார். இவரது தாயாரின் பெயர் "அஸோ டு கென்கிஸ்" (Azo du Kenquis) ஆகும். பதினான்கு வயதில் "பாரிஸ் பல்கலைகழகத்தில்" (University of Paris) கல்வி கற்க அனுப்பப்பட்ட இவர், அங்கே சிவில் சட்டம் கற்று பட்டதாரியானார். பிற மாணவர்கள் கல்வி காலத்தை கொண்டாட்டங்களில் கழிக்க, இவோ கல்வியிலும், செப வாழ்விலும் முனைப்பாக இருந்தார். நேரம் வாய்க்கும்போதெல்லாம் நோயாளிகளைப் பார்க்க சென்றார். புலால் மற்றும் திராட்சை இரசம் போன்ற மது வகைகளையும் தவிர்த்தார். இறையியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறைகளையும் கற்றார்.
கி.பி. 1284ம் ஆண்டு, குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 1285ம் ஆண்டு "ட்ரெட்ரெஸ்" (Tredrez) எனும் பங்கில் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். சுமார் எட்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றிய இவோ, அங்கிருந்து "லௌன்னேக்" (Louannec) எனும் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
"லௌன்னேக்" (Louannec) பங்கிலேயே தாம் இறக்கும்வரை ஏழைகளின் பாதுகாவலராகவும், அவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை இலவசமாக செய்தும் உதவி செய்தார். கைவிடப்பட்டவர்களையும் ஏழைகளையும் அன்பு செய்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வழிவகை செய்தார்.
டூர்ஸ் நகர விதவைப் பெண் (The Widow of Tours):
பாரிஸ் (Paris) நகரின் தென்மேற்கே, 111 கிலோமீட்டர் தூரத்திலுள்ள “ஒர்லியான்ஸ்” (Orléans) நகரின் அருகேயுள்ள “டூர்ஸ்” (Tours) நகரில், ஆயர் தமது நீதிமன்றத்தை நடத்திவந்தார். வழக்கறிஞரான ஈவோ, நீதிமன்றத்திற்கு வருகை தரும்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட விதவைப் பெண்ணுடன் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள், நிலச்சுவான்தாரான அந்த விதவைப் பெண் கண் கலங்கி அழுவதைக் கண்டார். விசாரித்தபோது, அடுத்த நாளே தாம் ஏமாற்றப்பட்ட ஒரு பயண வணிகரின் வழக்குக்கு பதில் சொல்வதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவள் கூறினாள். தமது பயணத்தின்போது, இவ்விதவைப் பெண்ணுடன் தங்கிச் செல்லும் “டோ” மற்றும் “ரோ” (Doe and Roe) ஆகிய இரண்டு வணிகர்கள் தந்திரமாக அவளை ஏமாற்றி, அவளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் அவள்மீது வழக்கு தொடுத்திருந்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய ஈவோ, மறுநாள் தமது சாதுர்யமான வாதத்தால் விதவையை ஏமாற்றிய வணிகர்களின் தந்திரத்தை வெளிக் கொணர்ந்தார்.
இவ்வாறு இவ்விளம் வழக்கறிஞர், விதவைப் பெண் ஏமாற்றப்படாமல் காப்பாற்றினார். விதவைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும் வாதங்களும், அவரது புகழ் மேலும் பரவ வழிவகுத்தது.
No comments:
Post a Comment