#மாமனிதர்கள்
ஜூன் 18
புனித அக்குயிலினா
(மூன்றாம் நூற்றாண்டு)
இவர் லெபனானில் உள்ள பாப்லோஸ் என்ற நகரில் இருந்த ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தார்.
இவர் சிறு வயதிலிருந்தே இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். இவருக்கு பாப்லோஸ் நகரிலிருந்த ஆயரே மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார் அதனால் இவர் இறைவன்மீது இன்னும் மிகுதியாகப் பற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
இவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேத கலாபனைகள் தொடர்ந்து நடைபெற்றன. அப்பொழுது உரோமையில் மன்னனாக இருந்த தியோகிளசியன் என்ற மன்னன் கிறிஸ்தவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் கிறிஸ்துவின்மீது மிகுந்த பற்றுக்கொண்டிருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, இவர் வாழ்ந்த பகுதியில் ஆளுநராக இருந்தவர் வழியாகக் கைது செய்து, கிறிஸ்துவை மறுதலிக்க சொன்னான். இவரோ, "என்னுடைய உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" என்று தன்னுடைய நம்பிக்கையில் மிகவும் உறுதியாக இருந்தார்.
இதனால் ஆளுநர் தன் படைவீரர்களைக் கொண்டு இவரைத் தீயில்போட்டு எரித்து, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளை கொண்டு இவரைத் தாக்கிச் சித்திரவதை செய்தான். அப்படியிருந்தும் இவர் தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
இதனால் ஆளுநர் தன் படைவீரர்களிடம், "இவரைத் தூக்கிக்கொண்டு போய் நகருக்கு வெளியே வீசி, கழுகுக்கு இரையாக்குங்கள்" என்றார். படைவீரர்களும் ஆளுநரின் இக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இவரைத் தூக்கிக்கொண்டுபோய் நகருக்கு வெளியே வீசினர்.
ஆனால், வானதூதர் ஒருவர் வந்து இவரை திடப்படுத்தி, இவரிடம் "நீ ஆளுநரிடம் சென்று, கிறிஸ்தவர்களை அழிக்க நினைக்கும் உன்னுடைய திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என்று சொல்" என்றார்.
இவரும் ஆளுநரிடம் சென்று, வானதூதர் தன்னிடம் சொன்னதுபோன்றே சொன்னார். இதனால் சீற்றம் கொண்ட ஆளுநர் இவரைப் பிடித்துக் கொல்ல முயன்றான். அதற்குள் இவருடைய உடலிலிருந்து உயிர் பிரிந்தது. இவர் இறக்கும்போது இவருக்கு வயது வெறும் பன்னிரண்டுதான்!
இவ்வாறு புனித அக்குயிலினா இறுதிவரை மன உறுதியோடு இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்
No comments:
Post a Comment