புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

28 August 2020

† இன்றைய புனிதர் †(ஆகஸ்ட் 28)✠ புனிதர் அகஸ்டீன் ✠(St. Augustine of Hippo)

† இன்றைய புனிதர் †
(ஆகஸ்ட் 28)

✠ புனிதர் அகஸ்டீன் ✠
(St. Augustine of Hippo)

ஆயர், மறைவல்லுநர்:
(Bishop, Doctor of the Church)

பிறப்பு: நவம்பர் 13, 354
தகாஸ்ட், நுமீடியா 
(தற்போதைய சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா)
(Thagaste, Numidia (Now Souk Ahras, Algeria)
இறப்பு: ஆகஸ்ட் 28, 430 (வயது 75)
ஹிப்போ ரீஜியஸ், நுமீடியா 
(தற்போதைய அன்னபா, அல்ஜீரியா)
(Hippo Regius, Numidia (Now modern-day Annaba, Algeria)

ஏற்கும் சமயம்: 
புனிதர்களை ஏற்கும் அனைத்து கிறிஸ்தவ சபைகள்
(All Christian denominations which venerate saints)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித பியெட்ரோ தேவாலயம், சியேல் டி’ஓரா, பவீயா, இத்தாலி
(San Pietro in Ciel d'Oro, Pavia, Italy)

நினைவுத் திருவிழா: ஆகஸ்ட் 28

சித்தரிக்கப்படும் வகை: 
குழந்தை; புறா; எழுதுகோல்; சங்கு; குத்தப்பட்ட இதயம்; 
சிறுகோவிலைத் தாங்கும் புத்தகத்தைப் பிடித்திருத்தல்; 
ஆயரின் ஊழியர்கள், ஆயரின் தொப்பி

பாதுகாவல்: 
குடிபானம்; அச்சுப்பொறிகள்; இறையியலாளர்கள்; பிரிட்ஜ்போர்ட் (Bridgeport), கனெக்டிகட் (Connecticut); ககாயன் டி ஓரோ (Cagayan de Oro); ஃபிலிப்பைன்ஸ் (Philippines); சான் அகஸ்டின் (San Agustin); இசபெலா (Isabela)

புனிதர் ஹிப்போவின் அகஸ்டீன், கத்தோலிக்க திருச்சபையாலும், பிற பல கிறிஸ்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த “ஹிப்போ ரீஜியஸ்” (Hippo Regius) என்னும் நகரத்தின் ஆயராக இருந்ததால் ஹிப்போ நகர் அகஸ்டீன் என அழைக்கப்படுகின்றார்.

இலத்தீன் மொழி பேசிய மெய்யியலாளரும், இறையியலாளருமான அகஸ்டீன் ரோமப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆபிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர், மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் “மானி” (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால் பெரிதும் கவரப்பட்டார். பின்னர் “புளோட்டினஸ்” என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "நியோ-பிளேட்டோனிசம்" (neo-Platonism) என்னும் கொள்கையைத் தழுவினார்.

இக்கொள்கைகளால் அகஸ்டீனின் மெய்யியல் தேடலை நிறைவுசெய்ய இயலவில்லை. எனவே, கி.பி. 387ம் ஆண்டு, அகஸ்டீன் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினார்.

கிறிஸ்தவர் ஆன பின்பு அகஸ்டீன் கிறிஸ்தவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். மனிதருக்கு சுதந்திரம் உண்டு என்று ஏற்றுக்கொண்ட அகஸ்டீன் கடவுளின் அருள் இன்றி மனித சுதந்திரம் செயல்பட இயலாது என்று கற்பித்தார். கிறிஸ்தவ சமயத்தின் ஒரு முக்கிய கொள்கையாகிய பிறப்புநிலைப் பாவம் (Original Sin) என்பது பற்றியும், போரில் ஈடுபடுவதற்கான நிபந்தனைகள் பற்றி நீதிப்போர் கொள்கை (Just War Theory) என்னும் தலைப்பிலும் அகஸ்டீன் எடுத்துக் கூறிய கருத்துருக்கள் கிறிஸ்தவத்தில் செல்வாக்குப் பெற்றன.

மேல்நாட்டில் ரோமப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், அகஸ்டீன் தாம் எழுதிய "கடவுளின் நகரம்" (City of God) என்னும் நூலில், திருச்சபை என்பது கடவுளை வழிபடுகின்ற சமூகம் என்பதால் ஆன்மிக முறையில் கடவுளின் நகரமாக உள்ளது என்றும், இது உலகம் என்னும் பொருண்மைசார் நகரத்திலிருந்து வேறுபட்டது என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகால கலாச்சாரத்திலும் உலகநோக்கிலும் தாக்கம் கொணர்ந்தன.

கத்தோலிக்க திருச்சபையும், ஆங்கிலிக்கன் திருச்சபையும் புனித அகஸ்டீனைப் பெரிதும் போற்றுகின்றன. இச்சபைகளால் அவர் புனிதர் என்றும் தலைசிறந்த "திருச்சபைத் தந்தை" (Church Father) என்றும் மதிக்கப்படுகிறார். புனித அகஸ்டீனின் திருநாள் ஆகஸ்ட் மாதம், 28ம் நாள் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த அந்நாள் அவர் விண்ணகத்தில் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

அகஸ்டீன் மனிதரின் மீட்புப் பற்றியும் கடவுளின் அருள் பற்றியும் அளித்த சிறப்பான போதனைகளின் காரணமாக, பல எதிர் திருச்சபைகள், குறிப்பாக "கால்வின் சபை" அவருக்குச் சிறப்பு மரியாதை அளிக்கின்றன; அவரை "திருச்சபை சீர்திருத்தத்தின் ஒரு முன்னோடி" என்று போற்றுகின்றன. கிழக்கு மரபு சபை அகஸ்டீனை "முக்திப்பேறு பெற்றவர்" என்று ஏற்று அவருடைய திருநாளை ஜூன் 15ம் நாள் கொண்டாடுகிறது.

அகஸ்டீனுடைய தந்தை, ரோம சமயத்தைச் (Pagan) சார்ந்த “பேட்ரீசியஸ்” (Patricius) ஆவார். இவர், தமது மரணப் படுக்கையில் கிறிஸ்தவராக மனம் மாறினார். அகஸ்டீனுடைய தாயார் பெயர், மோனிக்கா (Monica) ஆகும். இவர், ஒரு கிறிஸ்தவ பெண்மணியாவார்.

அகஸ்டீனின் தாயார் மோனிக்கா கிறிஸ்தவராக இருந்து தம் மகனைக் கிறிஸ்தவ சமயத்தில் வளர்த்த போதிலும், அகஸ்டீன் “மனிக்கேய” (Manichaeism) கொள்கையைத் தழுவி தம் தாயாரை மனம் நோகச் செய்தார்.

அகஸ்டீன் எழுதிய தன்வரலாறு நூலாகிய "Confessions" என்னும் புத்தகத்தில் தம் இளமைக்கால அனுபவங்களையும் தாம் தவறான வழியில் சென்றதையும் விரிவாக வடித்துள்ளார்.

அந்நூலில் காண்பதுபோல, அகஸ்டீன் கார்த்தேஜ் நகரில் ஓர் இளம் பெண்ணோடு தொடர்புவைத்து, அவரை முறைப்படி மணந்து கொள்ளாமலே பதினைந்து ஆண்டுகள் கழித்தார். அந்த உறவின் பயனாக அவருக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அகஸ்டீன் "அடேயோடாடஸ்" (Adeodatus) என்னும் பெயரிட்டார்.

மோனிக்கா தம் மகன் அகஸ்டீனோடு மிலனுக்குச் சென்றிருந்தார். அங்கு தம் மகனுக்குப் பொருத்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அகஸ்டீன் தாம் முதலில் அன்பு செய்த பெண்ணை மறக்கவில்லை. எனவே வேறொரு பெண்ணை மணக்க தயங்கினார். பின்னர் மண ஒப்பந்தம் ஆனது. ஆனால் அது முறிந்தது.

கி.பி. 386ம் ஆண்டு கோடைகாலத்தில் அகஸ்டீன் புனித வனத்து அந்தோனியார் (Saint Anthony of the Desert) என்னும் துறவியின் வாழ்க்கையைப் படித்தார். அதிலிருந்து தாமும் தூய வாழ்வு நடத்த வேண்டும் என்றும், தவறான கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்றும் முடிவுசெய்தார். அம்முடிவோடு தம் ஆசிரியப் பணிக்கு முற்றுபுள்ளி வைத்தார். திருமணம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். கடவுளுக்கே தம்மை முற்றிலும் அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்.

ஒருநாள் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தபோது அகஸ்டீன் ஒரு குழந்தையின் குரலைக் கேட்டார். அக்குரல் அவரிடம் "எடுத்து வாசி" என்று கூறியது. முதலில் அக்குரலின் பொருளை அவர் உணரவில்லை. பிறகு, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் தம் வாழ்விலும் உண்மையாவதை அவர் உணர்ந்தார். "எடுத்து வாசி" என்னும் குரல் உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்ததாகவும், கடவுளுடைய வார்த்தை அடங்கிய திருவிவிலியத்தை எடுத்து வாசித்தால் தம் வாழ்வின் பொருளை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் உள்ளூர உணர்ந்தார்.

உடனேயே திரும்பிச் சென்று விவிலியத்தைத் திறந்து வாசித்தார். அப்போது அவர் கண்களில் பட்டது தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் ஒரு பகுதி இதோ:

"களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்." 
~ உரோமையர் 13:13-14

இச்சொற்களை வாசித்த அகஸ்டீன், தம் வாழ்வில் அடிப்படையான மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார். கடவுளே தம் உள்ளத்தில் பேசுகிறார் என்பதையும் அறிந்தார். தம் தாய் மோனிக்கா கடவுளிடம் வேண்டிய மன்றாட்டுகள் வீண் போகவில்லை என்பதை அகஸ்டீன் உணர்ந்ததோடு, மிலான் நகர ஆயராகிய அம்புரோசு விவிலியத்தை விளக்கியுரைத்த பாணியாலும் கவரப்பட்டார். கிறிஸ்தவ சமயத்தில் கடவுளின் உண்மை உள்ளது என்று ஏற்றுக் கொண்டார்.

எனவே, மிலான் நகர ஆயராகிய அம்புரோசை அணுகி, தமக்குத் திருமுழுக்கு அளித்து தம்மைக் கிறிஸ்தவ சமயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அம்புரோசும் அதற்கு இணங்கி அகஸ்டீனுக்கும் அவருடைய மகன் ஆதோயோதாத்துசுக்கும் அகஸ்டீனின் நெருங்கிய நண்பரும் அவருக்குக் கிறிஸ்தவத்தில் ஆர்வத்தை எழுப்பியவருமாகிய அலீப்பியுஸ் (Alypius) என்பவருக்கும் திருமுழுக்கு அளித்து அவர்களைக் கிறிஸ்தவ சபையில் ஏற்றுக் கொண்டார்.
Saint of the Day : (28-08-2020) 
St. Augustine of Hippo

St. Augustine was the son of St. Monica and was born on November 13, 354. He led a wicked life of parties and entertainment and then converted to Christian faith by the prayers of his mother St. Monica. He got the sudden change of mind when he heard the conversion of two persons after reading the life of St. Antony. He cried to the God to forgive him from his sins and sinful life. At that time when he was praying to God, a child nearby was singing Take up and read. He thought that it is a message to him from God and started reading the book of letters of St. Paul. From then on St. Augustine began a new life. Baptized in the year 387 and then he became a priest in the year 391. He also became a very famous Christian thinker and writer. He became the Bishop of Hippo Regius in the year 391 and remained in that post till his death on August 28, 430. St. Augustine vigorously condemned the practice of induced abortion. He stressed infant baptism. He was of the full faith that the Virgin Mary conceived as virgin, gave birth as virgin and stayed virgin forever.

He healed one person from his illness by laying his hands on the head of that person. He was proclaimed as Doctor of the Church by Pope Boniface-VIII in the year 1298. He is one of the greatest catholic saints ever lived.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment