இன்று திருஅவையானது புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. புனித கன்னி மரியா தனது மண்ணக வாழ்வை முடித்துகொண்டவுடன், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை இவ்விழா நமக்கு எடுத்துரைக்கிறது.
வரலாற்றுப் பின்னணி:
கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருஅவையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது ‘அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறார்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், “அன்னை மரியா ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவர் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று கூறுவார்.
1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பயஸ் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள், மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற நம்பிக்கைப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மாசற்ற புனித கன்னி மரியா மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் புனித கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.
No comments:
Post a Comment